அம்பிகை செல்வகுமாரின் சாகும்வரை உண்ணாவிரதம் தொடர்பாக தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு

சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அம்பிகை செல்வகுமார்

பிரித்தானியாவில் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து அம்பிகை செல்வகுமார் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்து இருக்கின்றார். இலங்கையில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக ஈவு இரக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த பச்சை படுகொலைக்கு நீதிவேண்டியும், ஸ்ரீ லங்கா அரசாங்கத்தால் தொடரும் இன அழிப்புக்கு எதிராகவும் உலகம் எங்கும் தமிழ் அமைப்புக்களும் தனி மனிதர்களும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். நடைபெற்ற / நடைபெறுகின்ற அடக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக எமது போராட்டத்தை கட்டி எழுப்புவது அவசியம். அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்துக்குப் பின் இருக்கும் உணர்வை தமிழ் சொலிடாரிட்டி புரிந்து கொள்கிறது. தமிழ் மக்களுக்கு நீதி வேண்டிய போராட்டத்தில் அம்பிகை செல்வகுமாரின் ஆத்மாத்தமான அர்ப்பணிப்பை நாங்கள் எந்த கேள்விகளுக்கும் இடமின்றி மதிக்கின்றோம்.

ஆயினும் தமிழ் மக்களுக்கான போராட்ட அமைப்பு என்கின்ற வகையில்   இந்தப் போராட்ட  வழிமுறையில் இருக்கின்ற அரசியல்  போதாமையை கூறவேண்டிய அவசியம் எமக்கு இருக்கின்றது. இலங்கை  அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது என்பது பொது நீதி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட போவதில்லை. மாறாக எமக்கு நீதி கிடைப்பது அரசியல் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும். அதற்காக அரசியல் ரீதியாக  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கு ஒரு அரசியல்  முன்னோக்கு  வேண்டும். மேற்குலக அரசுகள்  மனித உரிமையின் பால்  இயக்குகின்றன என்ற அடிப்படையில் இந்த அரசுகளை நோக்கி எமது கோரிக்கைகளை முன்வைப்பது எமது அரசியல் பலவீனத்தையே   வெளிப்படுத்தும். பிரித்தானிய அரசு இலங்கையில்  தமிழர்களுக்கு எதிராக பல போர் குற்றங்களை  புரிந்து இருக்கின்றது. அந்த அரசிடம் இருந்து எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். ஐ நா மன்றம் என்பது அங்குள்ள பலம் வாய்ந்த நாடுகளின் வெளிவிவகார கொள்கையின்  நீட்சியே. அவை தமது நலனுக்காக மாத்திரமே ஈழ பிரச்னையைக் கையாளுகின்றன.   நாடுகளின் வெளிவிவகார கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அந்த அந்த நாடுகளில் உள்நாட்டு அரசியலிலும்  மாற்றத்தை உண்டுபடுத்த வேண்டும். அதற்கு நாம் அந்த நாடுகளின் உள்நாட்டு அரசியலில் ஈடுபடவேண்டும். அதற்காக மக்களின் மீது  அடக்குமுறைகளில் ஈடுபடும் கட்சிகளுடன் இணைந்து செயற்பட முனைவது  மடமைத்தனம் ஆகும், இது  எம்மை விடுதலையை நோக்கி நகர்த்தாது. மாறாக மீள முடியாத பாதாளத்தில் எம்மை  வீழ்த்தி விடும். 

கடந்த பன்னிரண்டு வருடங்களில்  ஈழத்தமிழர் மத்தியில் இயங்கும் அமைப்புக்களின் அரசியல் வங்குரோத்தும், அதிகாரத்துக்கு சார்பாக அவர்கள் எடுத்த நிலைப்பாடும் மக்களை  அணிதிரட்டுவதற்கு பதிலாக   அவர்களை மீண்டும் வீட்டுக்குள்ளேயே முடக்கி விட்டது. அவ்வாறான சூழ்நிலையில் இந்த சாகும் வரை உண்ணாவிரதம் தமிழ் மக்களை அணிதிரட்டும் வேலையை செய்யுமா என்பதும் கேள்விக்குறியே!  மக்களை அணிதிரட்டுவதற்கு அமைப்புப் பலம் அவசியம். அதனால்தான் தமிழ் மக்கள் மத்தியில் அமைப்புக்கள் பலப்பட வேண்டும் என்று தமிழ் சொலிடாரிட்டி கூறிவந்தது. இந்த போராட்டம் நடைபெறுவதை பிரித்தானியாவில் எந்த பத்திரிகைகளும் கவனிக்க போவதில்லை.  அவர்கள் 2009 இல் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு முன்  கூடிய போதும் எந்தவித மூச்சும் காட்டாமல் இருந்தவர்கள்தான். இவர்கள் மனித உயிரின்  மீது அக்கறைவைத்து ஓடிவருவார்கள் என எதிர்பார்ப்பது எமது அறியாமை. எமது உரிமைகளை வெல்வதற்கு நாம் எமது  போராட்டத்தை இங்குள்ள மக்களின் போராட்டங்களுடன் இணைக்க வேண்டும். அந்த மக்களுடன் இணைந்து எமது கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் போது தான் இந்த அரசுகள் எமது கோரிக்கையின் பக்கம் செவி சாய்க்கும் வாய்ப்பு ஏற்படும். அதற்குரிய செயல்திட்டத்தை நோக்கி நாம் நகர வேண்டும்.             

தமிழ் சொலிடாரிட்டி