தமிழ் நாட்டில் திமுக பதவியேற்று 7 மாதங்கள் முடிவு அடைந்துள்ளது. திமுகவினரும், மேலோட்டமாக முற்போக்குவாதம் பேசுவோரும் திராவிட புரட்சி நடைபெறுவதாகக் கூறி கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் வேளையில் நடைமுறை நிதர்சனம் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரானதாகவே உள்ளது.
தமிழகத்தை 2030 க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பது தான் திமுகவின் திட்டமாக உள்ளது. மே மாதம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களில் இந்த எண்ணத்தை முதல்வர் வெளிப்படுத்தியுள்ளார். இது முதலீட்டாளர்களுக்குச் சாதகமாகவும் தொழிலாளர்களுக்குப் பாதகமாகவும் தான் இருக்கும் என்று ஆரம்பத்தில் இருந்தே புதிய சோசியலிச இயக்கம் கூறி வந்தது. தற்போது இதனை நிரூபிக்கும் வகையில் பல்வேறு விடையங்கள் நடந்தேறியுள்ளன.
வெள்ளை அறிக்கையும் வரி விதிப்பும்
வெள்ளை அறிக்கை வெளிவருவதற்கு முன்னரே தமிழக நிதி ஆலோசகர்கள் மத்தியில் ஓர் பேசுபொருள் ஆனது. வழக்கத்தைவிட அதிகமான ஊடக கவனத்தை அது பெற்றிருந்தது. குறிப்பிட்டு சொல்வதானால் பெரும்பாலான ஊடகங்கள் இதை ஒருவித புரட்சிகர செயலாகவே பாவித்தனர். பொதுவாக மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். தற்போது தமிழக நிதியமைச்சர் வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையும் ஏறக்குறைய அதேபோன்றது தான். இதில் 2013-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருக்கிறார்.
“மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்தது முதல் மாநிலங்களுக்கு என இருந்த வரி விதிக்கும் உரிமை பறிக்கப்பட்டதுடன் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரி பங்கில் சுமார் 20 ஆயிரம் கோடிக்கு மேல் நிலுவையில் இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள், பேரிடர் கால இழப்புகளுக்கான மானியமும் முறையாக வழங்கப்படவில்லை” என்று அறிக்கையை வெளியிடும் தருவாயில் நிதியமைச்சர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இது சரியாக வழங்கப்பட்டிருந்தால் உழைக்கும் வர்க்கத்தின் இன்னல் தீர்ந்திருக்குமா எனும் கேள்வி தான் எழுகிறது. உண்மையில் இது மத்திய அரசுக்கும் மாநில அரசிற்கும் இடையில் எந்தக் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மானியத்தை வாரி வழங்குவது என்பதற்கான போட்டியாகவே உள்ளது.
இவ்வறிக்கையில், நலத்திட்ட உதவிகள் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், வாங்கிய கடனுக்கு வட்டியைச் செலுத்தவும் கடன் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மின்வாரியம், போக்குவரத்து, குடிநீர் வடிகால் வாரியங்கள் உள்ள அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பல லட்சம் கோடி கடனில் மூழ்கிக் கிடக்கின்றன.
வெள்ளை அறிக்கையில் தி.மு.க வெளியிட்டிருக்கும் நிதி நிலைமையைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் அனைத்துக் கட்டணங்களும் உயர்வது மட்டுமல்லாது வருவாய் விதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு ஓய்வூதியத்தை குறைப்பதற்கும் வாய்ப்பு இருப்பது தெரிகின்றது. மேலும், அரசு வழங்கிக் கொண்டிருக்கும் இலவசங்களையும் மானியங்களையும் குறைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் மக்கள்மீது பல மடங்கு வரி விதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தற்போது கூடுதல் வரி விதிக்கப்படவில்லை என்றாலும் வருங்காலத்தில் இது படி படியாக அமல்படுத்தப்படும் என்று பழனிவேல் தியாகராஜனே கூறியுள்ளார்.
வெள்ளை அறிக்கையை வெளியிடும்போது நிதி அமைச்சர் வழங்கிய ஆலோசனைகள் ஏதோ பெரும் அளவில் சொத்துப் படைத்தவர்கள் மீது மட்டுமே வரி விதிக்கப்படும் என்பதுபோல் தோன்றினாலும் உண்மையில் அது கடைக்கோடி மக்களை பாதிக்கும் வகையிலேயே உள்ளது.
குறிப்பிட்டு சொல்வதானால் சொத்து வரி விதிக்கும் ஆலோசனை ஒரே ஒரு வீடு வைத்திருக்கும் மக்களையும் பாதிக்கும். இதன் தொடர்ச்சியாக வீட்டுரிமையாளர்கள் வாடகையை ஏற்றுவார்கள். இது மறைமுகமாகச் சொந்த வீடு இல்லாத கடைக்கோடி மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சொந்தமாக வாகனத்தை வைத்திருப்பது எவ்வாறு மக்களுக்குப் பெரும் அளவில் சுதந்திரத்தை வழங்கியது என்பதை பற்றித் திமுகவினரே பல முறை பேசியுள்ளனர். அனால், நிதி அமைச்சரின் வாகன வரி, சொத்து வரி போன்ற ஆலோசனைகள் பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும்.
பாக்ஸ்கானில் நடைபெற்றது என்ன
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குப் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் பணி புரியும் தொழிற்சாலைக்குச் சென்று வந்தனர்.
பாக்ஸ்கானில் வேலை செய்யும் 90 சதவிதம் பேர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள். இந்நிறுவனம் டிப்ளமோ/கல்லூரி முடித்த பெண்களை கான்ட்ராக்ட் தொழிலாளர்களாக வேலைக்கு எடுத்து மிகக் குறைந்த சம்பளத்திற்கு பணியமர்த்திக் கொள்கின்றது.
இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த பெண் ஊழியர்கள் சாப்பிட்ட உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பாக்ஸ்கான் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில் உணவின் தரம் மற்றும் குறைபாடுகளைக் களையக்கோரி, கடந்த மாதம் 18-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பலரும் களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் முதலாளிகளின் நலனுக்காகச் செயல்படும் இந்த அரசு, அரச பயங்கரவாதத்தை பயன்படுத்தி போராட்டக்காரர்களை கைது செய்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் அதுவும் பெண்கள் என்றால் எவ்வாறு வேண்டுமானாலும் சுரண்டி கொள்ளலாம் என்ற முதலாளித்துவ மனநிலைக்கு இந்த அரசு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது.
இதற்கிடையில், இச்சம்பவத்தை குறித்து செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். ஆம்… இது நடைபெற்றது ப.ஜ.க ஆளும் உத்தரபிரதேசத்தில் அல்ல திராவிட புரட்சியே நடைபெறுவதாகக் குறி சிலாகித்துக்கொண்டிருக்கும் தமிழகத்தில் தான். இவை அனைத்தும் நடந்தேறிய பின்னும், பாக்ஸ்கான் தொழிற்சாலை 12ஆம் தேதி முதல் செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கூறினார். அதேபோல் தொழிற்சாலையின் செயல்பாடுகளும் தொடங்கிவிட்டன.
தொடர்ச்சியாக உழைக்கும் மக்களின் வீடுகளை இடிக்கும் அரசு
சென்னையில் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த மக்களின் வீடுகளை கடந்த ஜூலை 29-ம் தேதியன்று தி.மு.க அரசு அகற்றியது. 2018-ம் ஆண்டு, ஐந்தாண்டுக்கு மேல் புறம்போக்கு இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா போட்டுத் தர வேண்டும் என அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. அப்படி இருக்கையில் 20 ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி இந்த அரசு அவர்களின் குடியிருப்பை அகற்றியுள்ளது.
இவர்கள் கூவம் நதிக்கரையை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்றும் வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதேபோல் கடந்த ஆட்சிக்காலத்தில் அடையாறு கரையில் வசித்த உழைக்கும் மக்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றப்பட்டன. சென்னை கொளத்தூர், அவ்வை நகரில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 150 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக வசித்துவரும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பலஆண்டுகளாகக் கோரிக்கைவைத்து வந்திருக்கின்றனர். ஆனால் மேம்பாலப் பணிகளுக்காக அங்குள்ள பல வீடுகளும் கடைகளும் அகற்றப்பட்டன. இதேபோல் கோட்டூர்புரம் சித்ரா நகரிலும் குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதே போல் பல எடுத்துக்காட்டுகளை கூறலாம்.
பல ஷாப்பிங் மால்களும், தனியார் கல்லூரிகளும், மருத்துவமனைகளும் ஆற்றின் பாதையில் ஆக்கிரமிப்பாகத் தான் கட்டப்பட்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத இந்த அரசு ஏழை எளிய உழைக்கும் மக்களின் குடியிருப்புப் பகுதிகளை மட்டும் குறிவைத்து அகற்றி வருகிறது.
சிலருக்கு மாற்று வசதி செய்து தரப்படுகிறது என்றாலும் அவர்கள் சென்னையின் புறநகர் பகுதிகளில் தூக்கி எறிய படுகிறார்கள். அங்கு அவர்கள் பெரும் தொழில் நிறுவனங்களின் கடைநிலை ஊழியர்களாகவும் துப்புரவு பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களின் சந்ததியினருக்கு தரமான கல்வி, மருத்துவம் ஆகிய அனைத்தும் எட்டாக்கனியாகிவிடுகிறது.
ஈஷா யோகா மையம்
உழைக்கும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் இருக்கையில் சுற்றுசூழல் பாதுகாப்பிலும் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அனுமதியின்றி ஈஷா யோக மையம் கட்டடங்களை எழுப்பியுள்ளது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, “வனப்பகுதியில் ஈஷா எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை. அதேபோல வனத்தில் ஈஷாவின் கட்டடங்கள் எதுவும் கட்டப்படவில்லை. கோவை வனப்பகுதியில் வரையறுக்கப்பட்ட யானை வழித்தடம் என்பதில்லை. ஆகவே ஈஷா யோகா மையம் யானை வழித்தடத்தை இடைமறித்துக் கட்டப்பட்டதாகச் சொல்ல முடியாது” எனப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஜக்கி வாசுதேவின் கூட்டாளியான ராமச்சந்திரன் தமிழக வனத்துறை அமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து சுற்றுசூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ் ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவாகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனும் ஐயப்படை கொண்டிருந்தார். இது வழக்கம்போல் சுற்றி வளைத்து வழங்கப்படும் ஓர் ஆர்.டி.ஐ. பதிலைப் போன்றது தான் என்றாலும், அவ்வகை ஐயப்பாடுகளை நிரூபிக்கும் வகையிலேயே இந்தப் பதில்கள் அமைந்துள்ளன.
திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள்
பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை. பள்ளிகளில் கட்டாயமாகத் தமிழ் தாய் வாழ்த்து பட வேண்டும் என்பது போன்ற பல உணர்ச்சிகர திட்டங்கள் தான் திமுக அரசால் இதுவரை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
அவ்வப்போது நாடாளுமன்றத்தில் தமிழில் பேசி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி மொழியை வைத்தும் அரசியல் செய்து வருகிறார்கள்.
பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்பது வரவேற்கத் தக்க திட்டம் என்றாலும் அது சாதாரண பேருந்துகளில் மட்டுமல்லாமல் அனைத்து பேருந்துகளுக்கு வழங்கப் பட்டிருக்கலாம். அதே போல் சென்னையில் சாதாரண பேருந்துகளின் (white board) எண்ணிக்கை மிகவும் குறைவு. பெரும் நகரங்கள் பணம் படைத்தவர்களுக்கானது மட்டுமல்ல. பல உழைக்கும் மக்கள் இங்கு உள்ளார்கள் என்பதை புரிந்து இந்தத் திட்டத்தினை செயல்படுத்தியிருக்கலாம்.
வாக்குறுதிகள்
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் வழங்கிய பல முக்கியமான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 7 தமிழர் விடுதலை, இஸ்லாமியர்கள் விடுதலை, நீட் தேர்வு ரத்து செய்வது போன்ற சில திட்டங்கள் இதில் அடக்கம்.
இதற்காக மு.க.ஸ்டாலினைத் தலைவராகக் கொண்டு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு ஒன்றையும் தி.மு.க அரசு உருவாக்கியுள்ளது. அனால் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், கொண்டுவரப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றை குறித்த எந்த அறிக்கையும் இதுவரை தெளிவாக வெளியிடப்படவில்லை.
நீட் தேர்வை ரத்து செய்வதற்காக அணைத்து கட்சி கூட்டம் நடைதியது உண்மை தான். ஆனால் எதிர் கட்சியாக இருந்தபோது செய்ததை போல் இப்போதும் கடிதம் எழுதுவது, அறிக்கை வெளியிடுவது ஆகியவை கண்துடைப்பே தவிர வேறு ஏதும் இல்லை.