சேர் டோனி பிளேயரும், பத்மவிபூஷன் கோத்தா பயவும்

1,220 . Views .

1978 ஆம் ஆண்டு மகேந்திரனின் இயக்கத்தில் ரஜனியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் முள்ளும் மலரும். இப்படத்தில் ரஜனியின் நடிப்பை எல்லோரும் வெகுவாகப் பாராட்டினார்கள். அந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியத்திற்காக 2022 ஆம் ரஜினிக்கு விருது வழங்கினால் எப்படி இருக்கும்? கேட்கவே சிரிப்பாக இருக்கிறதல்லவா?, அப்பிடி ஒரு சம்பவம் தான் இலங்கையில் நடந்துள்ளது. அதுவும் ஜனாதிபதி கோத்தபாயவிற்கு நடந்துள்ளது.

அண்மையில் ஜனாதிபதி கோத்தா பயவிற்கு பெளத்த மகா சங்க சபையினர் “ஸ்ரீலங்காதீஸ்வர பத்மவிபூஷன்” என்ற பட்டத்தை வழங்கினர். இராணுவ அதிகாரியாகவும், பாதுகாப்பு செயலாளராகவும் அவர் ஆற்றிய சேவைக்கு மதிப்பு கொடுத்தே மேற்படி பட்டமானது வழங்கப்பட்டது. கோத்தபாய பாதுகாப்புச் செயலாளர் பதவியை விட்டு விலகி ஏழு வருடங்களும், இராணுவ அதிகாரி பதவியை விட்டு விலகி சுமார் முப்பது வருடங்களும் ஆகி விட்ட நிலையில் இன்று அதற்காக  விருது கொடுக்கப்பட்டிருக்கின்றது. 

உணவுப்பொருட்களின் விலை உயர்வு, உரத் தட்டுப்பாடு, அரிசி உற்பத்தி வீழ்ச்சி, பணவீக்கம்,பால்மா தட்டுப்பாடு, வெளிநாட்டுக்கடன் சுமை,அந்நியச் செலாவணியின் வீழ்ச்சி என இலங்கை அனைத்து வழிகளும் சீர்குலைந்து இருக்கும் பொழுது, பொதுமக்களின் அவநம்பிக்கைக்குரிய ஜனாதிபதிக்கு இவ்விருது வழங்குவதன் நோக்கம் என்ன? இலங்கை வரலாற்றில் மிகவும் திறமையற்றவர், ஊழல்வாதி என மக்களால் அழைக்கப்படும் ஜனாதிபதிக்கு இந்த அபத்தமான விருது வழங்கியதன் பின்னணி என்ன?. பதில் ஒன்றுதான், பழைய இத்துப்போன சாதனைக்காக விருது வழங்குவதும், அவ் விருதின் மூலம் சிங்கள பேரினவாதத்தை வளர்ப்பதுமே கோத்தபாயவின் நோக்கமாகும். அதாவது சரிந்து கொண்டிருக்கும் தனது செல்வாக்கை தட்டித் தூக்கி நிமிர்த்துவதற்காக, இனவாதத்திற்கு எண்ணெய் ஊற்றுவதே இதன் அரசியல் பின்னணியும் நோக்கமும் ஆகும். 

இதேவேளை,  பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளேயருக்கு அண்மையில் நைட்ஹூட்  விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சார் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. எந்த விருதுக்கும் தகுதி இல்லாத ஒரு நபர்தான் இந்த முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர். இதனைக்  கண்டித்து பல எதிர்ப்புக்குரல்கள் எழுந்து வருகின்றன. 700,000 க்கும் மேற்பட்ட மக்கள் இவருக்கு சார் பட்டம் வழங்கப்படக்கூடாது என கையெழுத்திட்டு மனு அனுப்பியுள்ளனர். ஈராக் யுத்தத்தில் கொல்லப்பட்ட பிரித்தானிய படை வீரார்களின் பெற்றோர்கள் கூட இன்று டோனி பிளேயருக்கு எதிராக நிற்கின்றனர். பிளேயருக்கு சார் பட்டம் வழங்கப்பட்டால் தமது மகன்களுக்கு கொடுக்கப்பட்ட பதக்கங்களை திருப்பிக் கொடுப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2007 இல் டோனி பிளேயர் பதவியை விட்டு விலகி இன்று பதினான்கு வருடங்கள் ஆகிவிட்ட பொழுதும் கூட  மக்கள் அவர் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். ஏனெனில் ஈராக் போரினால் ஈராக் மக்கள் மட்டுமன்றி அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளை, பிரித்தானியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை பிரித்தானிய மக்களும் சேர்ந்தே அனுபவித்தனர்.

ஈராக்கில் ஒரு மில்லியனுக்கும்  மேற்பட்ட மக்கள் இறக்கவும் , மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயரவும் மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானின் அழிவுக்கும் காரணமாக இருந்த டோனி பிளேயருக்கு  சார் பட்டம் வழங்குவதென்பது அவர் மீதான கறையை துடைக்கும் ஒரு செயலாகும். இன்றும் ஈராக் மக்கள் போரின் விளைவுகளை அனுபவித்துக்கொண்டிருக்க மறுபக்கத்தில் அவ்விளைவுக்கு காரணமாக இருந்த நபருக்கு சார் பட்டம் வழங்குவதென்பது வேடிக்கையானது. ஈராக் போரின் மூலம் மில்லியன் கணக்காக லாபங்களை சம்பாதித்த மில்லியனர்களும், பில்லியனர்களும் வேண்டுமானால் டோனி பிளேயரை சார் என அழைப்பதை விரும்புவரே தவிர அதன் பிரதிபலன்களை அனுபவித்த சாதாரண மக்கள் அல்ல.

இலங்கையில் ஸ்ரீலங்காதீஸ்வர பத்மவிபூஷன் என்ற விருதை வழங்கிய  மகா விகாரையின் மீதும், பிரித்தானியாவில் சார் பட்டத்தை வழங்கிய  அரச குடும்பத்தின் மீதும் அந்த் நாட்டு மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர் ஏனெனினில் கோத்த பய, டோனி பிளேயர் ஆகிய இருவரும் தங்கள் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சமூக கட்டமைப்பு மீது ஈடு செய்யமுடியாத சேதத்தை ஏற்படுத்தியவர்கள். இவர்கள்  போர்க் குற்றவாளிகள். இவர்களை மதித்து வழங்கும் எந்தவொரு பட்டத்துக்கும் தகுதியானவர்கள் அல்ல. இவர்கள் அப்பாவி பொதுமக்களினதும் படை வீரரினதும் உயிரிழப்பிற்கு முக்கிய காரணகர்த்தாக்கள். 

அதேவேளை இவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம் மிக முக்கியமானதொரு பட்டம் என்பது எமது கருத்தல்ல, இந்தப் பட்டங்களின் பின்னால் இரத்தக்கறை படிந்த வரலாறு உண்டு என்பதும் நாம் அறிந்ததே. அதனால்தான் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் கூட இவ்விருதை புறக்கணித்தார். பட்டம் வழங்கப்பட்டதன் பின்னணியை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

பத்மவிபூஷன் விருதை பெற்றுக் கொண்ட கோத்தா பய தனது நன்றி உரையில் “இந்த தேசத்தில் பௌத்த தத்துவத்தைப் பாதுகாத்து வளர்ப்பதாகவும், ஆயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட சிங்கள கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும் – எனவே, நமது விழுமியங்கள், மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து அனுசரணையை வழங்கும்” என்றார். இதன் மூலம் தமது சிங்கள பெளத்த இனவாதத்தை கிளப்பவே இந்த விருதை பயன்படுத்துகிறார் என்பது நன்றியுரையில் அவர் தெரிவித்த கருத்துக்களிலிருந்து புலனாகின்றது. அவருக்கு வாக்களித்த 69 மில்லியன் சிங்கள மக்கள் உணவுக்கும் பால்மாவுக்கும் வரிசையில் நிற்க அவர்களுக்கு உணவிற்கு பதிலாக இனவாதத்தையே ஊட்டி வளர்க்கின்றார் கோத்தா பய.  

2022 இல், அரச மற்றும் தனியார் துறையில், இலங்கை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களில் 7.3 பில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டும். திவாலாகும் நிலையிலுள்ள இலங்கை அரசுக்கு இக்கடனை திருப்பி அளிப்பதிற்கான எந்தவித வருமானமோ அல்லது செயற்திட்டமோ இல்லை ஆனால் அது பற்றிக் கவலைப்படாத அரசு சிங்கள பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதிற்கே முன்னுரிமை அளிக்கின்றது. 

கோத்தபாய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையை வளமான நாடாக மாற்றுவதாக உறுதி அளித்தார் ஆனால் அவர் பதவி வகித்த கடந்த இரண்டு வருடங்களில் வளமாக மாறியவர்கள் ராஜபக்ச குடும்பமும் அவர்களின் நண்பர்களும் மட்டுமே. இதை போன்று மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்திலும் அக்குடும்பம் செழித்து வளமாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.  2020 நவம்பரில் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி கோத்தா பய, “பொது மக்கள் கருத்துதான் எனது வெற்றி தோல்வியை அளவிடும்” என்று கூறினார் . அதன் பின்னர் சார் ஃபெயில் (Sir Fail) என்ற மீம்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி கோத்தா பய ஒரு தோல்வியடைந்த ஜனாதிபதி என்பதை உறுதி செய்தன. “எங்களுக்கு ஒரு அரசாங்கம்  தேவை, நாங்கள் இறந்து கொண்டிருக்கின்றோம், 2024 வரை காத்திருக்க முடியாது ஆகவே தயவு செய்து ஒதுங்கிக்கொள்ளுங்கள்” என இந்திய எழுத்தாளர் அருந்ததிராய் பிரதமர் மோடியிடம் வைத்த அதே கோரிக்கையைதான் நாம் இப்பொழுது இலங்கை ஜனாதிபதியிடமும் வைக்க வேண்டும். 

கோவிட் நெருக்கடியைத் தவிர, பல நெருக்கடிகளை நாடு எதிர்கொள்கிறது. வெளிநாட்டுக்கடன் சுமை, அரசுக்கு ஆதரவானவர்களை  தண்டனைகளிலிருந்து காப்பற்றுதல், சட்டத்திற்கு புறம்பான ஆட்சி, கோத்தா பய மற்றும் அவரது அமைச்சர்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தங்கள் நம்பகத்தன்மையை இழத்தல் என அப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது . இலங்கை ஒரு தோல்வியுற்ற நாடாக மாறி வருவதற்கான அடையாளங்கள் இவை. ஈராக் போரின் பின்னர் பிரித்தானியாவை வங்கிறோத்து நிலைக்கு தள்ளிய டோனி பிளேயர் போல், தமிழ் மக்களிற்கு எதிரான யுத்தத்தின் பின்னர் இலங்கையையும்  வங்கிறோத்து நிலைக்கு தள்ளியுள்ளார் இலங்கையின் டோனி பிளேயர் கோத்தா பய.  

இலங்கையில் உருவாக்கப்பட்ட கோத்தபாய அரசு மக்களை தினம் தினம் சிக்கலில் தள்ள உருவாக்கப்பட்ட அரசு போலவே செயற்படுகிறது. ஆகவே மக்களுக்கான அரசு உருவாக்கப்படவேண்டுமானால் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்த ஒரு போராட்டத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். இல்லையெனில் சிங்கள பெளத்த மேலாதிக்க இலங்கை அரசு மக்கள் உணவிற்கும் பால்மாவிற்கும் தவிக்கும்போது, சிங்கள கலாச்சார பண்பாட்டை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் இனத்துவேசத்திற்கே நீர் ஊற்றும்.