உக்ரேன் –ரஷ்ய –மேற்கு நெருக்கடியும் தேசிய கோரிக்கையும் -பாகம் 1

கிழக்கு உக்ரேனிய பகுதிகளாக இருந்த லஹின்ச்க் (Luhansk) டானியச்க் (Donetsk) பகுதிகளை சுதந்திர நாடுகளாக நேற்று (21/02/22) ரஸ்சியா அறிவித்துள்ளது. ‘சுதந்திரம் அடைந்த எந்தக் கொண்டாட்டங்களும் இந்த பகுதிகளில் இல்லை. ‘வழங்கபட்ட சுதந்திரத்தை’ தொடர்ந்து மேலதிக ரஷ்ய படையினர் அந்த பகுதிகளில் நுழைந்து ஆக்கிரமிக்கும் சந்தர்ப்பமே உள்ளது. உக்ரேனை மையமாக வைத்து மேற்குலக நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது ரஷ்யா.

உக்ரேனியர்களின் தேசிய உரிமை – மற்றும் மனித உரிமைக்காக தாம் முன்னிற்பதாக மேற்குலக அரசுகள் புலம்பித் தள்ளுகின்றன. உக்ரேனின் இறையாண்மை காக்கப்படவேண்டும் என அவர்கள் துடித்துப் பதைத்து வேலை செய்கிறார்கள்! மக்களின் தேசிய உரிமை – மனித உரிமை பற்றிய அக்கறை ரசியாவுக்கோ மேற்கு அரசுகளுக்கோ முதன்மை அல்ல. தற்போதைய உக்ரேனிய நெருக்கடிக்கு அது காரணம் இல்லை. வளங்களைக் கட்டுப்படுத்துவது – அதற்கான பிராந்திய விரிவாக்கம் ஆகியவைதான் இதன் அடிப்படை. உக்ரேனிய முக்கியத்துவம் வளங்கள் சார்ந்தே தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும் வலதுசாரி ஊடகங்களில் இது முதன்மையாகப் பேசப்படுவதில்லை. மனித உரிமை என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதை எந்த ஒரு நாட்டிலும் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ‘தேசிய நலன்’ என்று  மக்களை உசுப்பேத்தி தேசிய அரசுகளின் யுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தேடுவது அவர்களுக்கு அவசியம். யுத்த முன்னெடுப்பு முதாளித்துவ சக்திகளின் லாப நோக்கில் மட்டுமே என்று உண்மை சொல்லி மக்கள் ஆதரவு திரட்ட முடியுமா என்ன.

‘பாதுகாப்பு’ நெருக்கடி என இவர்கள் சொல்வது என்ன? பனியுத்த காலத்திற்குப் பின்பு தற்போதுதான் அதிகளவு இரானுவத்தை இரஷ்யா குவித்துள்ளது என மேற்குலகு சுட்டிக் காட்டுகிறது. இரஷ்ய இராணுவ முனைப்பு தமது பாதுகாப்புக்கு நெருக்கடி என இவர்கள் சொல்கிறார்கள். ஜேர்மனி, இங்கிலாந்து, அமேரிக்கா ஆகிய நாடுகள்மேல் படை எடுக்கவோ – அல்லது எந்த ஒரு மேற்கு நாடுகள்மேல் தாக்குதல் செய்யவோ இந்த ரஷ்ய இராணுவ குவிப்பு நிகழவில்லை. அந்த நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்ய அல்லது சீன பொருளாதார கட்டுப்பாடு வளர்ச்சியடைவதை நேட்டோ(NATO) நாடுகள் தமது பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கின்றன. மேற்கு நாடுகளின் இராணுவ கூட்டான நேட்டோ விரிவாக்கம் தமது எல்லைகளைத் தொடுவதை அனுமதிக்க ரஷ்யா தயாராக இல்லை.

பலவேறு கணிமங்களைப் பெறுவதற்கு ரஷ்ய-உக்ரேனிய நாடுகளை தங்கி இருக்கின்றன ஐரோப்பிய நாடுகள். அதிகளவு உரேனியம் – டைட்டானியம் – மங்கனேசியம் – இரும்பு வளங்கள் நிறைந்த நாடு உக்ரேன். குறிப்பாக ஐரோப்பாவின் 35% gas ரஷ்யா –உக்ரேன் குழாய்வழியாக வருகிறது. ஐரோப்பிய எரிபொருள் தேவையை கட்டுப்படுத்துவதன் மூலம் தமது பலத்தை நிலைநாட்ட ரஷ்யா  முயன்று வருகிறது. உக்ரேனில் இருக்கும் பெரும் ஆலைகள் – மற்றும் சுரங்கங்கள் சோவியத் யூனியன் காலப்பகுதியில் உருவாக்கப் பட்டவை. யூனியனின் உடைவின் பின்பும் இவை பல ரஷ்யாவின் கட்டுப்பாடில்தான் இருந்து வந்தன. இதற்கான உடன்படிக்கைகளை ரஷ்யா செய்திருந்தது. இந்த அடிப்படையில் இந்த வளங்களைத் தமது சொத்துக்களாகவே ரஷ்ய அரசும் முதலாளிகளும் கருதி வந்தனர். இருப்பினும் இவை உக்ரேனிய சொத்து என மேற்கு நாடுகளோடு புதிய உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ள உக்ரேனிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உக்ரேனிய அரசுக்கும் ரஷ்ய அரசுக்குமான இந்த நெருக்கடியின் தொடர்ச்சியாக கிரேமிய பகுதியை (Crimea) 2014 ல் ரஷ்யா ஆகிரமித்தது. அப்போதும் கிரேமிய விடுதலைக்கு ஆதரவாகவே தாம் அமைதிப் படையை அனுப்புவாதாக ரஷ்யா சொல்லிக் கொண்டது. இருப்பினும் பின்பு ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் நடந்த வாக்கெடுப்பின் அடிபடையில் கிரேமியா உக்ரேனில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ரஷ்ய இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ்தான் 2014 காலப்பகுதியில் லஹின்ச்க் (Luhansk) டானியச்க் (Donetsk) பகுதிகள் சுதநிதிர குடியரசுகளாக அறிவித்துக் கொண்டன. உக்ரேனின் பகுதிகளாக இருந்த இந்த மூன்று பகுதிகளிலும் ஏராளமான ரஷ்ய மொழி பேசும் ரஷ்ய இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர் (சில பகுதிகளில் ரஷ்ய இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்). ஆனால் உக்ரேனிய மக்கள் மட்டுமின்றி பல் இன மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் இவை. ரஷ்யப் புரட்சிக்குப்பின் நடந்த தொழில்மயமாக்கல் நடவடிக்கையின் போது இப்பகுதிகளில் இருக்கும் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கங்கள் – மற்றும் ஆலைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் வேலை செய்வதற்காக ஏராளமான ரஷ்ய தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டனர். இப்பகுதியில் ரஷ்ய மொழி பேசும் ரஷ்ய இனத்தவர் அதிகரித்ததற்கும் இது காரணம். இருப்பினும் பின்பு உக்ரேன் சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த காலப்பகுதியில் ரஷ்ய மொழி பொது மொழியாக பெரும்பாலனவர்களால் பேசப்பட்டது. உக்ரேனிய மற்றும் ஏனைய பிராந்திய மொழிகளுக்கும் ரஷ்ய மொழிக்கும் நிறைய தொடர்பு உண்டு. காலாச்சார ரீதியிலும் இப்பகுதி பல்லின மக்கள் மத்தியில் கூடிய நெருக்கமுண்டு. இருப்பினும் உக்ரேன் போன்ற சில நாடுகள் மேற்கோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. லாப நோக்கம் கொண்ட முதலாளிகள் மேற்கு நோக்கி திரும்புவது மட்டுமே இதற்கு காரணம் எனச் சொல்ல முடியாது. ரஷ்யாவின் நீண்டகால ஒடுக்குமுறை காரணமும் உண்டு.

சார் மன்னர் கால ரஷ்ய பேரரசு தனது ஆட்சியின் கீழ் பல்வேறு தேசியங்களை ஒடுக்கித்தான் அதிகாரத்தை தக்கவைத்திருந்தது. மொழி உரிமை உட்பட பல்வேறு கலாச்சார உரிமைககள மறுக்கப்பட்டிருந்தன. ரஷ்யப் புரட்சியின்போது உக்ரேனிய சோவியத்தில் போல்சுவிக்குகளுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கவில்லை. இருப்பினும் லெனின் முன்னெடுத்த தேசிய கொள்கை காரணத்தால் அவர்கள் மத்தியில் புரட்சிக்கு ஆதரவு இருந்தது. தேசிய கோரிக்கையை முன்வைத்து இயங்குவதாக கூறிக்கொண்ட தீவிர வலதுசாரிய உக்ரேனிய தேசியவாதிகள் புரட்சியை எதிர்த்தனர். பின்பு அவர்கள் எதிர்புரட்சிகரவாதிகளின் புரட்சிக்கு எதிரான யுத்தத்தில் இணைந்து கொண்டனர். அந்த தலைமைகளில் சிலர் பாசிச சக்திகளுக்கு ஆதரவு அளிப்பதிலும் தயங்கவில்லை. இன்றைக்கும் இந்தப் போக்கு உக்ரேனிய தேசியவாதிகள் மத்தியில் இருப்பதை நாம் பார்க்க முடியும். புரட்சிக்குப் பின் உக்ரேனிய சுதந்திரத்தை கடுமையாக முன்வைத்தார் லெனின். ஸ்டாலின் உட்பட கம்யூனிசக் கட்சிக்குள் இருந்தவர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். உக்ரேனிய முற்போக்குச் சக்திகளை காப்பாற்ற வேண்டும் –அதற்காக உக்ரேனை வலதுசாரிகள் கையில் விடக்கூடாது என்பது அவர்களின் தர்க்க சாராம்சம். தேசிய கோரிக்கையை முடக்கிய முறையில் சோசலிசத்தை நோக்கி உக்ரேனியர்களை நகர சொல்ல முடியாது என்பது லெனின் நிலைபாடாக இருந்தது. இருப்பினும் உக்ரேனிய சோவியத்தின் புரட்சிகர சக்திகளை காப்பாற்ற தமது பலத்தை உபயோகப்படுத்த போல்சுவிக்குகள் தயங்கவில்லை.

சோவியத் பேரரசின் கீழ் இருந்த நாடுகள் தாமாக சோவியத்தோடு இணைய வேண்டும் – அந்த அடிப்படையில்தான் ஒன்றினைந்த சோவியத் கண்பிடரேசன் உருவாகவேண்டும் என்பது லெனின் முன்வைத்த நிலைப்பாடாக இருந்தது. உண்மையில் ரஷ்யப் புரட்சி சாத்தியமானதற்கும் அது உடனடியாக தோற்கடிக்கப்படாமல் தப்பியதற்கும் இந்த நிலைப்பாடு மிக முக்கிய காரணமாக இருந்தது எனச் சொல்வது மிகையில்லை. ஆனால் இத்தகைய சர்வதேச நிலைப்பாடு விரைவில் மாறிவிட்டது. கம்யூனிசக் கட்சிக்குள்ளும் ‘பெரும் ரஷ்ய தேசியவாதம்’ உண்டு எனவும் பல தோழர்கள் தேசியக் கொள்கை சார்பாக சரியான நிலைப்பாடு இல்லாது இருக்கிறார்கள் எனவும் லெனின் அடிக்கடி சாடியது சரி என்பது லெனின் இறந்து போகும் தருணத்தில் வெளிப்படையாகியது. லெனினுக்கு பிறகு கட்டப்பட்ட சர்வதேசம் – சோவியத் யூனியன் என அழைக்கப்பட்ட கட்டமைப்பு – பெரும் ரஷ்ய தேசியத்தை தினிப்பதாகவும் – ரஷ்ய எல்லைக் காவல் செய்வதை தலையாய நோக்கம் கொண்டதாகவும் திரிந்துபோனது. சட்டத்தில் போக்குக்கு சுய நிர்ணய உரிமை உட்சேர்க்கப்பட்டிருந்த போதும் சோவியத்துக்குள் இருந்த நாடுகளுக்கு பிரிந்துபோகும் உரிமை மறுக்கப்பட்டது. அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் நிர்வாக அலகுகள் தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்டனவே தவிர தேசிய உரிமைகள் வழங்கப்படவில்லை.

இது குறிப்பாக உக்ரேனில் பெரும் பிரச்சினயை உருவாக்கியது. லெனின் வழங்கிய வாக்குறுதி மறுக்கப்பட்டது மீண்டும் உக்ரேனிய தேசிய கோரிக்கையை பலப்படுத்தியது. அங்கிருந்த புரட்சிகர சக்திகள் பல கூட வேறு வழி இன்றி ஸ்டாலினின் மடத்தனமான நிலைப்பாட்டை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த எதிர்ப்பை இரும்புக் கரம் கொண்டு முடக்கினார் ஸ்டாலின். ஸ்டாலின் தலைமையில் உக்ரேனில் மிகப்பெரும் கொடுமைகள் நடந்தேறின. சோவியத் யூனியன் மேலான வெறுப்புக்கு இதுவும் -இந்த வரலாறும்- ஒரு காரணம். இக்கால கட்டத்தில் உக்ரேனிய சுதந்திரத்துக்கு ஆதரவாகவும் – ஏகாதிபத்தியத்துக்கும் ஸ்டாலினிச சர்வாதிகாரத்துக்கும் எதிராகவும் பல புரட்சிகர சக்திகள் திரண்டன. சோசலிசத்துக்கு ஆதரவாகவும் சனநாயகமறுப்பு ஸ்டால்னிச அதிகாரத்துக்கு எதிராகவும் திரண்ட பலர் வேட்டையாடப்பட்டனர்.

சோவியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக கொண்டுவரப்பட்ட உக்ரேனிய வளங்களை உபயோகிக்கும் முறை சோவியத் பொருளாதாரத்தோடு ஒன்றிணைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் உக்ரேனிய வளங்கள் மேல் ரஷ்யா இன்றும் உரிமை கோருகிறது.

பெரும் ரஷ்ய தேசியத்தின் வாரிசாகவும் – ஸ்டாலினிச சனநாயக மறுப்பின் வாரிசாகவும் இருக்கும் தற்போதைய ரஷ்ய சனாதிபதி விளாதிமிர் பூட்டின் உக்ரேன் ஒரு நாடே அல்ல எனச் சொல்லுகிறார். உக்ரேன் என அழைக்கப் படுவதற்கு பதிலாக ‘விளாடிமிர் லெனின் நாடு’ என அழைக்கப்பட வேண்டும் என கிண்டல் செய்கிறார். லெனின்தான் உக்ரேன் உருவாக காரணம் – லெனின் செய்த தவறு இது என அவர் கருதுகிறார்.

லஹின்ச்க் (Luhansk) டானியச்க் (Donetsk) இடங்கள் சுதந்திர நாடுகள் என அறிவுக்கும் பிரகடனத்தில் கையெழுத்து போதடுவதற்கு முன் அவர் ஒரு நீண்ட உரை வழங்கினார். பூட்டின் வரலாறை எவ்வாறு பார்க்கிறார் என்பதை அந்த உரையில் பார்க்க முடியும். பழைய கம்யூனிசக் கட்சியின் பயிற்சியில் உருவான – ரஷ்ய உளவுத்துறை கே ஜி பி யின் பயிற்சியில் உருவான- பூட்டின் பார்வை என்ன?

 

பாகம் 2