இலங்கை அரசாங்கம் தனது கொடூரமான அடக்குமுறையை தொடர்கிறது

சர்வதேச நாணய நிதியம் (IMF) தலைமையிலான இலங்கைக்கான ‘இடைக்கால வரவு செலவுத் திட்டம்’ அறிவிக்கப்பட்ட நாளில், தலைநகர் கொழும்பின் தெருக்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர். 22-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு எவ்வித குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இலங்கை அரசாங்கத்தினால்  கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர்களை விடுவிக்கக் கோரி மிகவும் அமைதியான முறையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) கன்வீனர் மற்றும் பலர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு இன்னும் விடுவிக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு உடன்படிக்கையை நெருங்கியுள்ள நிலையில் மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களால் இந்த இலங்கை அரசின் மிருகத்தனமான செயலாய் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள்.

அதே நாளில்(31/08/2022), காணாமல் போன பல்லாயிரக்கணக்கானோரின் கதி என்ன என்பதை அறியக் கோரி லண்டன் மற்றும் பிற நாடுகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து முற்றிலும் போலியான ட்வீட் ஒன்றை வெளியிட்டார், ஆனால் அதே நாளில் நடந்த கைதுகள் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. கடந்த காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற மேற்கத்திய நிறுவனங்கள் இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதாக பாசாங்கு செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரின. இந்த கோரிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு GSP+ வரிச்சலுகைகளை வழங்குவதற்கான உடன்படிக்கையின் ஒரு பகுதியாகவும் இருந்தது. இப்போது, ​​தற்போதைய அரசாங்கம் மேற்கத்திய சார்பு நவ-தாராளமயக் கொள்கைகளை நோக்கிச் சாய்ந்துள்ள நிலையில் இந்த மேற்கத்திய அரசுக்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்கள் இலங்கை அரசின் அடக்குமுறைகளை கண்டுகொள்ளாமால் இருக்கின்றார்கள்.

தற்போதைய அரசாங்கத்தின் மீதான கோபம் இன்னும் நீங்கவில்லை. எரிபொருளுக்கான வரிசை மீண்டும் தொடங்குகிறது. மண்ணெண்ணெய் தட்டுப்பாடு மீனவர்கள் மற்றும் பெரும்பாலான மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. ஆனால் ஏழைகள் மீது மேலும் தாக்குதல்களை நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. மேலும் போராட்டம் வளர்ச்சியடையும் சாத்தியக்கூறுகளால் அச்சமடைந்த அரசாங்கம், அனைத்து வகையான பொது மக்களின்  ஒத்துழையாமைக்கு எதிராக ‘சட்டத்தின் முழு பலத்தையும்’ செயல்படுத்துவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றது. அமைதியான போராட்டக்காரர்களை பல மாதங்களாகக் விசாரணை எதுவும் இன்றி தடுத்து வைப்பதற்காக  கடுமையான PTA சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, மாணவர் மற்றும் தொழிலாளர் நடவடிக்கைகளை ஒடுக்குவதில் கவனம் செலுத்துவதற்கு காவல்துறை மற்றும் இராணுவம் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்ற போராட்டம் IUSF ஆல் முக்கியமாக அதன் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட கடந்த காலத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்கக் கோரி அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் கொழும்பு மருதானை  இருந்து பேரணியாக செல்லவிருந்தது. ஆனால், தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் ஏந்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலகத்தடுப்பு காவல்துறையினரால் கொடூரமாக ஒடுக்கப்பட்ட்து. எந்தவித ஆத்திரமூட்டலும் இன்றி, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் முன்கூட்டிய தாக்குதலைத் தொடங்கி, பேரணியின் முன்பக்கத்தில் இருந்த பலரைக் கைது செய்தனர். தப்பியோடியவர்களையும் விரட்டிச் சென்று தாக்கினர்.

இன்று இலங்கையில் பொது சேவைகள் மற்றும் மக்களின் வாழ்க்கைதரத்தின் மீது பல்வேறு தக்குதல்களை அரசு மேற்கொள்ள முயற்சிக்கின்றது. உதாரணமாக பொது சேவை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துதல், புதியவரிகளை அறிமுகப்படுத்துதல், கட்டணங்களை அதிகரித்தல், மற்றும் மக்களுக்கான கொடுப்பனவுகளை குறைத்தல் போன்றன. பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற கொடூரமான சட்டங்கள் மற்றும் முறைகள் மூலம் மக்களை பயமுறுத்தும் முயற்சிகள் அனுமதிக்கப்படக்கூடாது. இதற்கு மக்கள் இயக்கம் உறுதியான பதிலடி கொடுக்க வேண்டும். பொது வேலைநிறுத்தம் போன்ற உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும். ஆகஸ்ட் 24 இல், தொழிற்சங்கத் தலைவர்கள் மேற்குலக இராஜதந்திரிகள் மற்றும் தூதர்களை சந்தித்து பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பதற்கும் அடக்குமுறையை எதிர்ப்பதற்கும் தங்கள் ஆதரவைக் கோரினர். ஆடுகளை காக்க காட்டு ஓநாய் கேட்பது போல இது! மாறாக தொழில்சங்க தலைவர்கள்  அரசாங்கம் மற்றும் IMF தலைமையிலான பட்ஜெட்டுக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) எதிர்ப்பு அடக்குமுறை குறித்து ஐக்கிய சோசலிச கட்சியின் சிறிதுங்க ஜயசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கிறார்.

இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளுக்காக தொடர்சியாக குரல் கொடுத்துவரும் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (யுஎஸ்பி, இலங்கையில் உள்ள CWI) IUSF ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறது. மற்றும் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்கக் கோருகிறது.

USP கோரிக்கைகள்:

  • எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை அனைவருக்கும் அனுமதியுங்கள்.
  • பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும்.
  • இராணுவத்தை உடனடியாக வீதிகளில் இருந்து அகற்றுங்கள்.
  • அனைத்து பொது சேவைகள் மீதான திட்டமிட்ட தாக்குதலை எதிர்க்கவும், மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு சீரழிந்து வரும் நிலைமைகளை எதிர்க்கவும், போராட்ட இயக்கத்தை மீண்டும் தொடங்குவதற்காக வெகுஜன அணிதிரட்டலுடன் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு. தற்போதைய அடக்குமுறை ஆட்சியை வெளியேற்ற தொழிற்சங்கங்களும் பொது வேலை நிறுத்தம்/ஹர்த்தாலை நடத்த முன்வர வேண்டும்.
  • IMF தலைமையிலான பட்ஜெட்டுக்கு வேண்டாம்! மேற்கு, சீனா அல்லது இந்தியாவிற்கு வளங்களை விற்பதற்கு இல்லை.
  • வெகுஜனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், தொழிலாளர்கள் தலைமையிலான அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் ஒரு மாற்று வெகுஜன தளத்தை உருவாக்குவதற்கும் நாடு முழுவதும் மக்கள் மன்றங்களை உருவாக்குங்கள்.