பின்வரும் அறிக்கையானது ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியால் (இலங்கையில் உள்ள CWI) ஆகஸ்ட் 12 முதல் இலங்கையில் உள்ள சோசலிச கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அறிக்கையின் தமிழ் வடிவம்
இலங்கையில் சோசலிச எதிர்காலத்தை கட்டியெழுப்புதல்
இன்று நாங்கள் மிகவும் நெருக்கடிகள் நிறைந்த கால கட்டத்தில் நிற்கின்றோம். முதலாளித்துவ வர்க்கம், அரசு, உயரடுக்கு (Elite) மற்றும் அவர்களது நிறுவனங்கள், பிராந்திய வல்லரசுகள், சீனா மற்றும் மேற்கு ஏகாதிபத்திய சக்திகள் ஆகியன ஒரு பொதுவான இலக்கை கொண்டிருக்கின்றன. இலங்கை அரசுக்கு எதிராக வளர்ந்து வருகின்ற வெகுஜன இயக்கத்தை தோற்கடிப்பது – அதே நேரத்தில் தமது தனிப்பட்ட நலன் மற்றும் முதலீடுகளை பாதுகாப்பதும் அவர்கள் முதன்மை இலக்காக இருக்கிறது.
முதலாளித்துவ வர்க்கத்திடம் தற்போதைய நெருக்கடிக்கான தீர்வு இல்லை. பணத்தை அச்சிடுவது, வட்டி விகிதத்தை சரிசெய்தல், வரியை அதிகரிப்பது, பொதுச் சேவைகள்/நிலம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை முதலாளிகளுக்கு விற்பது, கூலியைக் குறைப்பது, கடுமையான நிபந்தனைகளுடன் அதிகப் பணத்தைக் கடனாகப் பெறுவது ஆகியவை அவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் முறைகள். இது வறுமையையும் சாதாரண மக்கள் மீதான சுமையையும் அதிகரிக்கும் என்பதால் போராடும் மக்களால் அவர்கள் முன்வைக்கும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலாளித்துவப் பிரதிநிதிகள் தங்கள் கட்டுப்பாட்டை இழக்காமல் இருப்பதுக்கு, ‘எதை வேண்டுமானாலும்’ செய்வதற்கும் அதிகபட்ச பலத்தை பயன்படுத்துவதற்கும், தயாராக உள்ளனர். அடக்குமுறையைத் தடுக்கவும், வெகுஜன இயக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்லவும் சோசலிஸ்டுகள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் தங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்.
தற்போதைய இலங்கை பாராளுமன்றம் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. ஜனாதிபதி மற்றும் அனைத்து 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் இராணுவ அடக்குமுறையை சந்தித்தன. ஆனால் பொதுமக்கள் தங்கள் சக்தியையும் பலத்தையும் காட்டியுள்ளனர், மேலும் எதையும் சாதிப்பது சாத்தியம் என்றும் காட்டியுள்ளனர். கொள்ளையடிப்பவர்களின் ‘இடைக்கால அரசாங்கம்’ என்ற போலியான முன்மொழிவை பொதுமக்கள் ஏற்கக் கூடாது. மாறாக வெகுஜன இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை ஒழுங்கமைக்க முன்வரவேண்டும், இந்த இடைக்கால அரசானது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியைத் தீர்ப்பதற்குரிய அவசர நடவடிக்கைகளை எடுக்க முடியும், மேலும் இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய ஒரு புரட்சிகர அரசியலமைப்பு சபைக்கான(revolutionary constituent assembly) தேர்தல்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் அறகலயா (போராட்டம்) இதுவரை வெளிப்படுத்திய கோரிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம், இருப்பினும் இந்தக் கோரிக்கைகள் இந்த முதலாளித்துவ நெருக்கடியின் வேர்களுக்கு சவால் விடாததால் இன்னும் ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டவையாகவே உள்ளன. ஆனால், இந்தக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கும் கூட, நமக்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் வலுவான ஈடுபாடும், மாற்று சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்கும் ஜனநாயக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட வெகுஜன அமைப்பைக் கட்டியெழுப்புவதும் தேவை. சோசலிஸ்டுகள், ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்தில் உள்ள நமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, இதற்கான முயற்சியை முன்னெடுக்க முடியும்.
குறிப்பிட்ட பிரச்சினைகளில் எங்கள் பணியை ஒருங்கிணைக்கவும் மற்றும் ஒரு பொது வேலைத்திட்டத்தில் உடன்படவும் கடந்த காலங்களில் நாங்கள் பல விவாதங்களை நடத்தியுள்ளோம். ஜே.வி.பி தலைவர்கள், தங்களை இடதுசாரிகள் மற்றும் மார்க்சிஸ்ட் என்று கூறிக்கொண்டாலும், அத்தகைய ஜனநாயக விவாதங்களில் ஈடுபடவில்லை அல்லது நடைமுறையில் முதலாளித்துவத்திற்குள் வேலை செய்வதால் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்க முயற்சிக்கவில்லை. லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இன்னும் சில சிறிய அமைப்புக்கள் வெறும் சந்தர்ப்பவாதிகள்தான். பலமுறை முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, கூட்டணி அரசாங்கத்தில் பங்குபற்றியவர்கள் இவர்கள். சோசலிசத்தின் சக்திகளைக் கட்டியெழுப்புவதில் எந்த அக்கறையும் அவர்களுக்கு இல்லை. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை நோக்கி வருவதற்கு, இந்த அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இந்த சந்தர்ப்பவாத அரசிலில் இருந்து பிரிந்து போராட்ட அரசியலை நோக்கி வருமாறு நாம் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இதே சமயம் ஒரு வெகுஜன அமைப்பை உருவாக்குவதற்கு ஒரு சில சோசலிச குழுக்களின் ஒத்துழைப்பு மட்டும் போதாது என்றும் கடந்த காலத்தில் நாங்கள் வாதிட்டுள்ளோம். ஆனால் ஒரு தெளிவான வேலைத்திட்டத்தின் மீதான கூட்டு நடவடிக்கையானது, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த பிரிவை, குறிப்பாக தொழிற்சங்கங்களில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் .
கடந்த கால வரலாற்றைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுவான திட்டத்தை உருவாக்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறோம். எவ்வாறாயினும், தெளிவான திட்டத்தில் என்ன இருக்க வேண்டும் என்பதை விவாதிக்கும் போது நாங்கள் ஒப்புக் கொள்ளும் உறுதியான கோரிக்கைகளின் அடிப்படையில் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம். USP ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக தொடர்ந்து போராடும், ஏனெனில் தற்போதைய நெருக்கடிக்கு முதலாளித்துவ அடிப்படையில் தீர்வு காண முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து இடதுசாரிக் கட்சிகள் தொழிற்சங்கங்கள் மற்றும் சோசலிஸ்டுகள் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்க முன்வர வேண்டும் என்றும் அந்த வேலைத்திட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தையும் போராடும் மக்களையும் வெற்றிபெறச் செய்ய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்து முதலாளித்துவ பிரதிநிதிகளையும் நிராகரிக்கவும்.
அனைத்து முதலாளித்துவப் பிரதிநிதிகளும் தற்போதைய அமைப்பைக் காப்பாற்ற முற்படுகையில், அவர்களை நிராகரிக்க போராடும் பொதுமக்களுக்கு நாம் ஒன்றாக அழைப்பு விடுக்க வேண்டும். முதலாளித்துவக் கட்சிகள் மீது நம்பிக்கை வைக்கக் கூடாது. முதலாளித்துவ பிரதிநிதிகளுடனான எந்தவொரு இடைக்கால ஏற்பாடும் இயக்கத்தை சீர்குலைத்து பலவீனப்படுதத்துவத்தில் மட்டுமே கொண்டு சேர்க்கும். மாறாக, எமக்கான அரசியல் தளத்தை நாமே உருவாக்க வேண்டும். ஒரு ஜனநாயக கூட்டாட்சி அமைப்பு மற்றும் தெளிவான வேலைத்திட்டத்துடன் நாம் சமூகத்தின் முக்கிய பிரிவுகளையும் பொதுமக்களையும் ஒன்றிணைக்க முடியும். முதலாளித்துவ அரசாங்கத்திற்கு உதவுவதற்காக ஒரு ‘மக்கள் சபை’ (People Council )அமைப்பது மக்களின் தேவையை நிறைவேற்றாது.
என்ன அமைப்பு?
எதிர்ப்பை ஒழுங்கமைக்கவும், மக்களுக்கான பொருள் விநியோகத்தை ஜனநாயக ரீதியாக மேற்பார்வையிடவும் என்ற அடிப்படையில் கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஜனநாயக ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை உருவாக்க முடியும். இருப்பினும், இது மக்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற முக்கிய ஆர்வலர்களின் பங்களிப்பை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் குழுக்களுக்கு பொறுப்புக்கூறும் ஜனநாயக கட்டமைப்புகள் நிறுவப்பட வேண்டும். இந்தக் குழுக்கள் ஆற்றக்கூடிய பங்கின் அடிப்படையில் விவாதம் நடத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் பணியிடங்களில் இந்தக் குழுக்களினால் , அதிகபட்ச செல்வாக்கை செலுத்த முடியுமா?, தொழிற்சங்கக் கிளைகள் எவ்வாறு நிறுவப்பட்டு இணைக்கப்படலம்?, விவசாயிகள், இளைஞர்கள் எவ்வாறு ஒன்றிணைக்க முடியம் போன்றன. குழுக்களின் தன்மை குறித்து வெளிப்படையான விவாதம் தொடங்க வேண்டும். அத்தகைய குழுக்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுவது அவசியம்- இது ஒரு அவசர பணி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் இந்த குழுக்களினால் ஒரு தேசிய அமைப்பை உருவாக்க முடியும். இந்த அமைப்பு அரசியல் பிரதிநிதித்துவத்தையும் தீர்மானிக்க முடியும் – எந்த வகையான அரசியலமைப்பு தேவை, என்பதையும் தீர்மானிக்க முடியும். பாதுகாப்புப் படைகள் மற்றும் அரசாங்க ஆதரவாளர்களின் தாக்குதலில் இருந்து எதிர்ப்பாளர்களைப் பாதுகாக்க பாதுகாப்புக் குழுக்கள் போன்ற முக்கிய துணைக் குழுக்களை உருவாக்க தேசிய அமைப்பு உதவ முடியும். இத்தகைய குழு, மக்களின் பாதுகாப்பில் ஈடுபடும் சாதாரண சிப்பாய்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும். சமூகத்தை ஒழுங்கமைக்கும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாகக் கூறும் அரச நிறுவனங்களுடன் மோதாமல் இதை ஒழுங்கமைப்பது எளிதான காரியம் அல்ல. எனவே முக்கிய நிறுவனங்களை கையகப்படுத்தி, மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
என்ன திட்டம்?
எந்தவொரு சோசலிச அமைப்புகளுக்கும் உடன்பட வேண்டிய அடிப்படையான குறைந்தபட்ச/முக்கிய கோரிக்கைகளில் நாம் ஒன்றுபட்ட குரலை நிறுவ வேண்டும். வெகுஜன அணிதிரட்டலுக்கான அழைப்பு, பொது வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்க தொழிலாள வர்க்கத்தை அழைப்பதோடு இணைக்கப்பட வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட சேவைகளைப் பாதுகாப்பதற்கும், தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் அவர்களைக் கொண்டுவருவதற்கும் – பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளை தேசியமயமாக்குவதற்கும் – அனைத்து தொழிலாளர்களுக்கும் போதுமான குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் போராட வேண்டும். சுதந்திர வர்த்தக வலயங்கள்/ மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதீத சுரண்டலுக்கான சிறப்பு சலுகைகள் ஏற்படுத்துவது ஒழிக்கப்பட வேண்டும். தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புக்கள் ஜனநாயக ரீதியாகவும், முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து விலத்தி சுயாதீனமாகவும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். கடனை முழுவதுமாக செலுத்தாமல் இருக்க வேண்டும். இதில் மைக்ரோ கடனும் அடங்கும். உதாரணமாக விவசாயிகளின் அனைத்து கடன்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். IMF மற்றும் இந்திய மற்றும் சீன முதலாளிகளின் கொள்ளையடிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் நாம் நிராகரிக்க வேண்டும். எமது நடவடிக்கைகளுக்காக ஆதரவு தரும்படி சர்வதேச வேண்டுகோள் விடுக்கப்படவேண்டும். குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு,எமக்கான ஒற்றுமை (Solidarity) நடவடிக்கைகள் மற்றும் ஆதரவுக்காக நடவடிக்கைகள் எடுக்கும்படி அழைப்பு விடுக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அழைப்பு, மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம், மற்றும் தொழிற்சங்க எதிர்ப்புச் சட்டம் ஆகியன தூக்கி வீசப்பட வேண்டும். இது போன்ற கொடூரமான சட்டங்களை இல்லாமல் செய்வது அரசியலமைப்பின் முழுமையான மாற்றம் -மற்றும் சமூகத்தின் முழுமையான மறுசீரமைப்பின் அவசியத்தை முன்வைக்கின்றன. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், சமூகத்தை மறுசீரமைக்கத் தயாராவதற்கும் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புரட்சிகர அரசியல் நிர்ணய சபைக்கான (revolutionary constituent assembly) அழைப்பு விடுவது முக்கியமானது. இது தொழிலாளர்கள் தலைமையிலான அரசு மற்றும் திட்டமிட்ட பொருளாதாரத்தை செயல்படுத்த வழிவகுக்கும்.
இத்தகைய கோரிக்கைகள் நமது அனைத்துப் பொருள்களிலும்(Material) பிரச்சாரங்களிலும் வெளிப்படுத்தப்பட வேண்டும். பத்திரிக்கை சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் மற்றும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கும் அதே வேளையில், அனைத்து இன தொழிலாளர்களையும் ஒன்றிணைக்க வேண்டுமானால், சோஷலிஸ்ட்டுக்கள் தேசிய பிரச்சினையில் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
நாம் சோசலிச மாற்றை தைரியமாக முன்வைக்க வேண்டும்
ஜே.வி.பி போன்ற சில அமைப்புகள் மார்க்சிய சொல்லாடல்களைப் பயன்படுத்துகின்றன, ஆனால் உண்மையில் சோசலிச சிந்தனைகளை முன்வைக்கவோ அல்லது சோசலிச சக்திகளை கட்டியெழுப்ப வேலை செய்வதோ இல்லை. இந்த கட்டத்தில் சோசலிச மாற்றத்திற்கு வெகுஜன ஆதரவு இல்லை என்ற வாதத்தின் மூலம் முதலாளித்துவவாதிகளுடனும் முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களுடனும் ஒத்துழைப்பது நியாயப்படுத்தப்படுகிறது. 1917 இல் லெனின் மற்றும் போல்ஷிவிக்குகள் ‘சோவியத்துகளுக்கு அனைத்து அதிகாரமும்’ என்ற அடிப்டையில் சோசலிசத்திற்கான பெரும்பான்மை ஆதரவைக் கட்டியெழுப்ப உழைத்த நடைமுறைக்கு இது நேர் எதிரானது.
எந்த ஒரு வெகுஜன இயக்கமும் தூய்மையானதல்ல – அல்லது நேர்கோட்டில் வளர்ச்சியடைவதில்லை என்பதை நாம் அறிவோம். வெகுஜனங்கள் வெளிப்படுத்தும் பொருளாதார மற்றும் சமூக கோரிக்கைகள், முதலல்லைத்துவ எல்லைக்குள் அடைய முடியாதவை. நீடித்த தீர்வுகளை அடைய இயலாமை வெகுஜனங்கள் பிரக்ஞையில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்த முடியும். ஆனால் சோசலிச மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் இது பற்றிய விவாதங்களை வெளிப்படையாகவும் தைரியமாகவும் வழிநடத்தி, தேவையான உறுதியான நடவடிக்கைகளை முன்வைக்க வேண்டும். மக்கள் மத்தியில் சோசலிசக் கருத்துக்கள் மீது நம்பிக்கையை வளர்க்கும் வகையில் நாம் செயல்பட முடியும். வெகுஜனங்கள் மாற்று வழியைத் தேடுகிறார்கள்; மாற்று சோசலிசம் என்பதை நாம் கண்டிப்பாக விளக்க வேண்டும்.