கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா?

சம்பந்தனுக்கு வயதாகிவிட்டது என்னவும் – அவர் முன்னரைப்போல் சுறுசுறுப்பாக வினைத்திறனுடன் இயங்க முடியவில்லை என்றும்- அதனால் அவரை பதவியிலிருந்து விலத்தவேண்டும் என்றும் ஒரு நிலைப்பாடு தமிழரசுக் கட்சியில் வலுத்து வருகின்றது. கண்ணாடியைத் திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும் என நகைச்சுவை நடிகர் கருணாஸ் ஒரு திரைப்படத்தில் கேட்டது போல் சம்பந்தனை மாற்றினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வினைத்திறனுடன் செயலாற்றும் ஒரு கட்சியாக மாறிவிடுமா? என நாம் கேட்க வேண்டி உள்ளது. 

தலைமையை மாற்றுவதால் கூட்டமைப்பு ஆக்ரோஷமாக செயற்படத் தொடங்கிவிடுமா? காதில் பூ சுற்றலாம் ஆனால் பூந்தோட்டத்தையே சுற்றும் கதையாகல்லவா இருக்கிறது இது. முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போது வினைத்திறனுடன் செயலாற்றும் கட்சியாக இருந்தது என்பதை இவர்கள் சொல்ல வேண்டும்.  வேண்டுமானால் தேர்தல் சமயத்தில் வாக்கு சேகரிக்க – அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏதேனும் சிக்கல் வந்தபோது அதைக் காப்பாற்ற கூட்டமைப்பு வினைத்திறனுடன் பணியாற்றியது எனலாம். 

1977 இல் தமிழர் விடுதலைக்கு கூட்டணியில் இணைந்து தமது அரசியல் பயணத்தை தொடர்ந்த சம்பந்தன் 1997 இல் முதன் முறையாக நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர் இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சம்பந்தன் பெரிதாக தமிழர்களுக்கு எதனையும் பெற்றுத்தரவில்லை. மாறாக பாராளுமன்றத்தில் ரணிலின் பதவியைக் காப்பற்றி, ஐ நாவில் ராஜபக்சவை காப்பற்றி ரணிலுக்கும் ராஜபக்சவுக்கும் விசுவாசமாக இருந்தார். யுத்தம் முடிவடைந்த பின்னர் அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சம்பந்தன் தனது நாடாளுமன்ற உரையில் போரை முடிவுக்கு கொண்டுவந்ததற்காகவும் ஜனநாயக முறையில் அரசியல் நடத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி கூறிஇருந்தார் என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்க. 

தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு யார் வருகிறார்கள் என்பதை விட அவர்கள் என்ன கொள்கையினை இனி பின்பற்றப்போகிறார்கள் என்பதே முக்கியமாகும். ஏற்கனவே சம்பந்தன் சென்ற வழியில்தான் பயணிக்கப் போகிறார்களா அல்லது இனியாவது தமது பாதையினை மாற்றி பயணிக்கப்போகிறார்களா என்பதே இங்கு முன்வைக்கப்படவேண்டிய கேள்வியாகும். தமிழ்தேசியக் கூட்டமைப்புத் தலைவராக இருக்கும் தற்போதைய காலகட்டத்தில் சம்மந்தன் தமிழ்த் தேசியத்தின் வழி சிந்திக்க கூடிய தலைவராகவோ அல்லது தமிழர் நலன் சார்ந்து செயற்படக் கூடிய தலைவராகவோ இருக்கவில்லை. எதிர்கட்சித் தலைவராக இருந்தபோதுகூட ஒட்டு மொத்த தமிழ் சிங்கள முஸ்லீம் மலையக மக்களின் பிரதிநிதியாகச் செயற்பட்டதுமில்லை. சம்பந்தன் கை காட்டிய மைத்திரி, ரணில், -பின்பு மைத்திரி இறுதி நேரத்தில் பெல்டி அடித்து கூட்டி வந்த ராஜபக்ச என அவர் முன்னெடுத்த அரசியல் தவறான பாதையிலேயே சென்றது. நாட்டின் இன்றைய அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு சம்பந்தனும் ஒரு வகையில் காரணம்தான். 

காணிகளை விடுவிக்க கோரிப் போராட்டம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரிப் போராட்டம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், பெளத்த மயமாக்கலுக்கு எதிரான போராட்டம், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிப் போராட்டம் என பல போராட்டங்கள் இன்றும் பல வருடங்களாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. சம்பந்தனால் இதற்கொரு தீர்வினை தான் ஆதரித்த கட்சிகளிடமிருந்தே பெற்றுத் தரமுடியவில்லை என்பது நிதர்சனம். இதற்குப் பின்னரும் சம்பந்தனின் கொள்கையுடன்தான் பயணிக்கப் போகின்றதா தமிழரசுக்கட்சி? அல்லது இனிமேலாவது புதிய தலைமை தமது கொள்கையினை மாற்றி பயணிக்கப்போகின்றதா?. அறிக்கைகைகளை விட்டு அரசியல் நடாத்தும் சம்பந்தனின் அரசியலுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 

சம்பந்தனை மாற்றாமல் சம்பந்தன் கொண்டிருக்கும் அரசியல் கொள்கை மாற்றப்படும்பொழுதுதான் தமிழர்களுக்கு சாதகமான ஒரு மாற்றம் நிகழக்கூடும். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மைத்திரி, ரணில், சஜித் என ஒவ்வொரு பக்கமும் நிற்கும் சம்பந்தனால் மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதைதான் கூற முடியுமே தவிர அவற்றின் மூலம் தமிழர்களுக்கான ஒரு தீர்வினை பெற்றுத்தர முடியாது. நல்லிணக்கம் என்ற பெயரில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டு சேர்ந்து தமிழ் மக்களை பகடைக் காய்களாக பயன்படுத்தும் சம்பந்தனின் கொள்கையினால் தமிழ் மக்களுக்கு நன்மை என்று எதுவும் பெரிதாக கிடைக்கப்போவதில்லை. இதே கொள்கையினை இனியும் பின்பற்றிக்கொண்டு சென்றால் வேற்று வாக்குறுதிகள் மட்டுமே வாங்க முடியும்.  ஐந்து வருடத்திற்கொருமுறை தெற்கிலிருந்து ஒவ்வொருவரும் வந்து வாக்குறுதி மட்டுமே கொடுப்பார்களே தவிர நடைமுறையில் எதையும் நிகழ்த்தமாட்டார்கள. 

சம்பந்தனாலோ அல்லது சாணக்கியனாலோ நாடாளுமன்றத்தில் அனல் தெறிக்க, நெஞ்சு புடைக்க உணர்ச்சி பொங்கப் பேசமுடியும். அது அடுத்த நாள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவக்கூடும். அதைத் தாண்டி அவர்களின் ஆக்கிரோஷப் பேச்சால் தமிழர்களுக்கு எதுவும் கிடைத்துவிடபப் போவதில்லை. நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசுவதால் உரிமைகள் கிடைத்துவிடப் போவதில்லை.  வெறுமனே பொங்கலுக்கு தீர்வு, தீபாவளிக்குத் தீர்வு, புது வருடத்தில் தீர்வு என கப்சா விடும் தமிழரசுக்கட்சியினை நம்பி பிரயோசனமில்லை என்பதே நிதர்சனமாகும். 

யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்பும் இன்றுவரை இறந்தவர்களின் பட்டியலை தயாரித்திருக்கின்றதா கூட்டமைப்பு. இல்லை. அதுதான் அவர்கள் அரசுக்கு செய்யும் விசுவாசம். ஏனெனில் இப்பட்டியல் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். மேலும், இலங்கையில் 67 லட்சம் மக்கள் போதுமான உணவு இல்லாமல் தவிக்கிறார்கள் என உலக உணவுத் திட்டம் தெரிவிக்கின்றது. சம்பந்தனோ அல்லது தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஒரு தலைவராவது உணவு இல்லாமல் தவித்திருப்பார்களா? குறைந்த பட்சம் ஒரு நாளேனும் உணவு இல்லாமல் தவித்திருப்பார்களா இவர்கள்?

தமிழரசுக் கட்சியினை உருவாக்கிய தந்தை செல்வா இறுதியில் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பற்றவேண்டும் எனக் கூறினார். சம்பந்தன் வழியில் பயணித்தால் கடவுளால் கூட காப்பாற்றமுடியாத நிலைதான் தமிழ்மக்களுக்கு ஏற்படும். சம்பந்தனை மட்டுமல்ல சீமானுக்கு போட்டியாக உரக்கப் பேசும் ஈழத்துச் சீமான் சாணக்கியன், தனது மகனை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக்கூடாக கொண்டு வந்ததின் மூலம் வாரிசு அரசியலை வளர்க்க முயலும் மாவை . இவர் போன்றவர்களால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைத்துவிடப்போவதில்லை. அது தவிர, சித்தார்த்தன், சுமந்திரன், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் என ஒவ்வொருவரும் தனித்து தமக்கென்றொரு பாதையில் இயங்குகிறார்கள். அதிகாரத்தை தம் வசம் வைத்திருப்பதற்கே அனைவரும் முயல்கிறார்கள் தவிர, தமிழ் மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து பயணிப்பவர்களாகக் காணப்படவில்லை. 

இன்றிருக்கும் தமிழ் அரசியல் தலைவர்களில் மூத்தவர் சம்பந்தன் என்பதால் அவர் சொல்லுக்கு சிங்களத் தலைவர்கள் மதிப்பளிக்கிறார்கள் என்றும், அவரது அனுபவ முதிர்ச்சியின் காரணமாக சிங்கள முஸ்லீம் தலைமைகள் அவரது பேச்சுக்கு செவி சாய்கின்றனர் எனவும் காலங்காலமாக ஒரு கருத்து நிலவி வருகின்றது. அவ்வாறு ‘சிங்களம்’ செவி சாய்த்திருந்தால் தமிழர்களின் பல பிரச்சனைகளுக்கு இதுவரைக்கும் தீர்வு எட்டப்படிருக்கும். இனிமேலாவது இது போன்ற கற்பனைக் கதைகளுக்கு தமிழர்கள் செவி சாய்க்காமல் இருக்க வேண்டும். 

அண்மையில் நடைபெற்ற காலி முகத்திடல் போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது முழு ஆதரவையும் வழங்கி சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுத்திருக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களின் இனப்  பிரச்சனைகளுக்கு ஆதரவு அளிக்கும் போக்கு சிங்கள மக்கள் மத்தியில் அதிகமாயிருந்திருக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ அப்போராட்டகாரர்களுக்கு எதுவித ஆதரவையும் வழங்காமல் மறைமுகமாக தமது ஆதரவை கோத்தபாய அரசிற்கே வழங்கினார்கள். தமது விசுவாசத்தை கோத்தபாயவிற்கே காட்டினார்களே தவிர, தமிழ் சிங்கள மக்களுக்கல்ல. இருந்த போதும் காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்பு   தமிழ் மக்களின் இனப் பிரச்சனையை புரிந்துகொள்ளும் போக்கு தெற்கில் அதிகரித்துள்ளது எனலாம். இதுபற்றிய  காணொளிகள் பல சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரப்பப்பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே. இவ்வாறு சிங்கள மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்கள் தமது இனப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்க்கு தமிழ் தலைமைகள் சிங்கள மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆனால் தமிழ் தலைமைகள் சிங்கள தலைமைகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்களே தவிர சிங்கள மக்களுடனல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் தலைமைகள் எவ்வாறு தமிழ் மக்களுக்காக வேலை செய்வதில்லையோ அது போல்தான் சிங்கள  தலைமைகளும் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுக்காக வேலை செய்வதில்லை. மாறாக தமிழ் சிங்கள தலைமைகளும் தத்தமது சுய லாப அரசியல் நோக்கங்களிற்காகவே பயணிக்கின்றன. 

சிங்கள தலைமைகளுக்கு சேவகம் செய்வதை விட்டுவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இனிமேலாவது சிங்கள முஸ்லீம் மலையக மக்களுடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும். அவர்களின் பிரச்சனைகளுக்கு எமது ஆதரவை தெரிவித்து எமது பிரச்சனைகளுக்கு அவர்களது ஆதரவை வென்றெடுக்கவேண்டும். எம் கண் முன்னே பரந்து கிடக்கும் வழி இது ஒன்றுதான். அதை விடுத்து ஐந்து வருடத்திற்கொருமுறை வரும் தேர்தலுக்காக தெற்கு கட்சித் தலைமைகளுக்கு ஆதரவு வழங்குவதால் அதன் பலனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் மட்டும் தனிப்பட்ட ரீதியாக அறுவடை செய்கிறார்களே தவிர தமிழ் மக்களல்ல. 

கஜன்