தற்போதைய சிக்கலான சூழலில் உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் தமிழர்களுக்கான முன்னுரிமைகள் என்ன?
இடதுசாரி கட்சிகள், தமிழ் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களிடையே விவாதத்திற்கான வரைவு
இந்த அறிக்கையை ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (United Socialist Party – USP) வெளியிட்டுள்ள நிலையில், Tamil Solidarity இதனை முழுமையாக ஆதரிக்கிறது.
- தற்போது நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில்,பல்வேறு சக்திகள் தீவிரமாகப் போட்டியிடுவதன் விளைவாக, உலக அரசியல் உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் மேலும் சிக்கலடைந்துள்ளன. குறிப்பாக ஆசியா மற்றும் தென் ஆசியப் பிராந்தியத்தில், வேகமாக மாறிக்கொண்டிருக்கும் புவியியல் அரசியல் சூழல் உருவாகியுள்ளது. முதலாளித்துவ நாடுகளின் அதிகாரவாதத் தன்மை உயர்ந்து வருகிறது. அவற்றுக்கிடையில் நீண்டகாலம் நிலைக்கும், நிலைத்த அல்லது நம்பகமான கூட்டணிகள் எதுவும் இல்லை. இந்தச் சூழ்நிலை, போர்களுக்கும் மோதல்களுக்கும் தயாராகும் நோக்கில் அரசுகளின் இராணுவமயமாக்கலை அதிகரிக்கச் செய்துள்ளது.இதன் மற்றொரு முக்கிய அம்சமாக, நாடுகளுக்கிடையேயும், அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும், ஒருபுறம் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதிகளும், மறுபுறம் முதலாளி வர்க்கமும் ஆகியோருக்கிடையில் தீவிரமான துருவப்படுத்தல் (polarisation) அதிகரித்து வருவது காணப்படுகிறது.
- இந்த காலகட்டத்தில் தென் ஆசியப் பிராந்தியத்தில் இந்திய அரசின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. இதற்கு மாறாக, பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. அந்த நாடுகளின் பொருளாதாரங்கள் நின்றுபோயோ அல்லது மந்தநிலைக்குள் சென்றோ உள்ளன. நடைமுறையில் அரசைக் கட்டுப்படுத்தும் பாகிஸ்தான் இராணுவம், அமெரிக்க ஏகாதிபத்யத்துடனும், அதே போல சீனாவுடனும் தமது உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மோடி ஆட்சி, தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரான கொடூரமான அடக்குமுறைகளுக்காக அறியப்படுகிறது. அதன் வெளிநாட்டு கொள்கை இரண்டு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. முதலில், அம்பானி, அதானி போன்ற இந்தியாவின் மிகப் பெரிய முதலாளிகளுக்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவது. இரண்டாவது, பிராந்தியத்தில் இந்தியாவின் இராணுவ ஆதிக்கத்தை நிறுவுவது. சீனாவின் விரிவாக்க முயற்சிகள் குறிப்பாக “பெல்ட் அண்ட் ரோட்” முனைப்புத் திட்டம் (BRI) சீனாவுக்குள் உருவான பல்வேறு மாற்றங்களால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அந்த நாடு இப்பிராந்தியத்தில் தன் நலன்களைத் தீவிரமாகவும் தாக்குதல்மிகு முறையிலும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. BRICS நாடுகள் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நலன்களுக்கும், டாலரின் மேலாதிக்கத்திற்கும் எதிரான ஒரு முக்கிய மாற்றுச் சக்தியாகத் தோன்றின. ஆனால் குறிப்பாக தென் ஆசியப் பிராந்தியத்தில், அவற்றுக்குள் உள்ள நிலையற்ற தன்மையும் முரண்பாடுகளும் வெளிப்படையாகத் தெரிகின்றன.
- இலங்கை போன்ற சிறிய பொருளாதார நாடுகள், இந்தப் பிராந்தியத்தின் புவியியல் அரசியல் அலைகளை எதிர்த்து நிற்க முடியாது. அதேபோல், இப்பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்திவாய்ந்த நலன்களுக்கிடையில் “சமநிலை” பேணுவதன் மூலம் “வெற்றிகரமாக” செயல்படவும் முடியாது. தற்போது அரசு மற்றும் சோ கோல்ட் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் இந்தக் கூற்றுகள் அனைத்தும் அடிப்படையற்ற மாயைகளாகும்.
- திவாலான இலங்கைப் பொருளாதாரம், பெரும்பாலும் உதவித் தொகைகளாலும் மீட்பு நிதிகளாலும் (handouts and bailouts) மட்டுமே இணைக்கப்பட்டு நிற்கிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற சர்வதேச நிறுவனங்களின் தலையீடுகள், இந்தியா மற்றும் சீனாவுடன் செய்யப்பட்ட இரகசிய பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் கடன்களுக்கு பதிலாக நாட்டின் சில பகுதிகளையும், பொருளாதாரத்தின் முக்கிய துறைகளையும் ஒப்படைப்பது தொடர்பான தகவல்களுடன் இதுவரை நாட்டை மூழ்காமல் வைத்திருக்கின்றன. பொருளாதார நெருக்கடியும், அதனைத் தொடர்ந்து உருவான சமூக நெருக்கடியும் தீர்வு காணப்படவில்லை. மாறாக, மிக ஆபத்தான இந்தச் சிக்கல் வெறுமனே “பின்னோக்கித் தள்ளப்பட்டு” நேரம் வாங்கப்பட்டுள்ளது.
- 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் அரகலய மக்கள் எழுச்சியால் உருவான எதிர்பார்ப்புகளினால் அனுர அரசு அதிகாரத்துக்கு வந்தது. அந்த எழுச்சி, நாட்டின் முழு அரசியல் மேல்தட்டையும் நிராகரித்த ஒரு வரலாற்றுச் சம்பவமாகும். ஆனால் அந்த மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்த அநுர அரசு எதுவும் வழங்கவில்லை. மாறாக, முதலாளித்துவ அமைப்புக்குள் தன்னைச் சிறைபடுத்திக்கொண்டே செயல்படத் தீர்மானித்துள்ளது.
- ஒருபுறம், மிக மோசமாக ஊழலால் சிதைந்த வலதுசாரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மதிப்பிழந்து வருகின்றன. மறுபுறம், உண்மையான மாற்று வழி எதுவும் இல்லாததால், இந்த அரசு இன்னும் சில அளவிலான ஆதரவைத் தக்க வைத்திருக்கிறது. “இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்தால் அரசு செயல்படும்” என்ற நம்பிக்கையே இதற்குக் காரணமாக உள்ளது.
- தன்னை “மார்க்சிய” அரசு என்றும், தொழிலாளர்களின் மற்றும் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் என்றும் காட்டிக்கொண்டு, JVP தலைமையிலான NPP தேர்தலில் மக்கள் ஆதரவைப் பெற்றது. இதுவரை அரசின் கவனம், சில மக்கள் ஈர்ப்பு (populist) நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், நடுத்தர வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்தின் சில பகுதிகளுக்கும் “நம்பகமான” மற்றும் “சுத்தமான” மாற்று என தன்னை முன்வைப்பதிலுமே இருந்துள்ளது.
- இந்த JVP–NPP அரசு, முந்தைய முதலாளித்துவ அரசுகளிலிருந்து எவ்வித வேறுபாடும் இல்லை என்பது மிகத் தெளிவாகியுள்ளது. IMF மற்றும் உலக வங்கி (WB) நிர்ணயித்த நியோ-லிபரல் திட்டங்களை முழுமையாகப் பின்பற்றியே இது செயல்பட்டு வருகிறது. நடைமுறையில், இந்த அரசு ஒரு “காவல் அரசு” (caretaker government) ஆக மாறியுள்ளது மக்களின் கோபத்தையும் எதிர்பார்ப்புகளையும் கட்டுப்படுத்தி, பழைய அரசியல் நிறுவங்களின் கழுகுகள் மீண்டும் திரும்பத் தயாராகுவதற்கு போதுமான நேரத்தை வழங்கும் அரசாகவே இருக்கின்றது.
- 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை முக்கியமான கடன் திருப்பிச் செலுத்தல்களைத் தள்ளிப்போடுவது உள்ளிட்ட “பின்னோக்கித் தள்ளும்” நடவடிக்கைகள் சமூக அமைதியைப் பாதுகாக்கப் போதுமானதாக இருக்காது. ஏற்கனவே தீவிரமான பிரச்சினைகள், வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் பெரும் மக்கள் இயக்கங்கள் பற்றிய விவாதங்கள் மூலமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன.
- “மார்க்சிய அரசு” என தன்னை அழைத்துக் கொள்கின்ற இந்த அரசு உண்மையில் இது ஒரு கடுமையான தவறான பெயரிடலே, எந்தப் பகுதியிலிருந்தும் எழும் எதிர்ப்பையும் அடக்குவதற்காக தன்னிடம் உள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தத் தயாராக இருப்பதற்கான மிக வலுவான சைகைகளை அநுர அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. இதில், JVP/NPP முன்பு கடுமையாக எதிர்த்திருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி (executive presidential powers) உட்பட அனைத்தும் அடங்கும். இது தொழிலாளர் வர்க்கம், இடதுசாரி அமைப்புகள் மற்றும் அனைத்து எதிர்ப்புச் சக்திகளும் எதிர்கொள்ளும் ஒரு உண்மையான மற்றும் அதிகரித்து வரும் அச்சுறுத்தலாகும். அதே நேரத்தில், இந்த NPP அரசு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கத் தயாராக இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது. மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள், வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர்கள் ஆகிய தமிழ் பேசும் சமூகங்கள் மிக இருண்ட எதிர்காலத்தை எதிர்கொள்கின்றன. திருகோணமலையில் நடைபெற்ற இனவாத சம்பவமானது நாட்டின் மிக மோசமான இனவாத தூண்டுதலாளர்களில் ஒருவரை அரசு வெளிப்படையாகப் பாதுகாத்மை மற்றும் அண்மையில் ஏற்பட்ட சைக்க்ளோன் “டிட்வா” (Cyclone Ditwah) தொடர்பான அரசின் செயல்பாடு, NPP/JVP அரசின் உண்மையான முகத்தை முற்றிலும் வெளிப்படுத்தியுள்ளது.
- JVP-இன் மையம், அதன் முழு வரலாறும் போற்றிப் பாதுகாத்து வந்த சிங்கள இனவாதத்தால் இன்னும் ஆழமாக ஆளப்படுகிறது. தங்கள் நீண்டகால “இந்திய விரோத” நிலைப்பாட்டை கூட, வாய்ப்புக்காக எளிதில் கைவிடத் தயாராக உள்ளனர் (உண்மையில், அவர்கள் ஒருபோதும் இந்தியத் தொழிலாளர்களை அணுகவில்லை; இப்போது வெளிப்படையாக இந்திய முதலாளி வர்க்கத்தை அணைத்துக் கொள்கிறார்கள்).ஆனால், தமிழர்களின் உரிமைகள் தொடர்பாகப் பார்த்தால், அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை ஒரு அங்குலம் கூட முன்னேற்றம் இல்லை. 1988–89 காலகட்டத்தில் தேசப்பிரேமி ஜனதா வியாபாரயா (DJVP) என்ற பெயரில் JVP நடத்திய இரண்டாவது கிளர்ச்சியை மறக்கக் கூடாது. அந்தக் காலத்தில், இந்தியா–இலங்கை உடன்படிக்கையை ஆதரித்த பல இடதுசாரி செயற்பாட்டாளர்களும் தொழிற்சங்கப் போராளிகளும் கொல்லப்பட்டனர். 13-வது திருத்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறையை எதிர்த்து JVP வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்தது. இந்த அரசுக்கு தமிழ் பேசும் மக்கள் கணிசமான அளவில் வாக்களித்தனர். பொருளாதார நெருக்கடிகளுக்காக மட்டும் அல்லாமல், நீண்ட காலமாக நிலவி வந்த ஜனநாயகக் கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றும் என்ற “நம்பிக்கையற்ற நம்பிக்கையை” (hope against hope) அவர்கள் பற்றிக்கொண்டிருந்தனர்.
- மாகாண சபைத் தேர்தல்களைத் தாமதப்படுத்துதல், அரசுக்குள் போர் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைப் பாதுகாப்பது அல்லது பதவி உயர்வு வழங்குவது, காணாமல் போனவர்கள் மற்றும் கடந்தகால அத்துமீறல்கள் தொடர்பாக எந்தத் தீர்மானமான நடவடிக்கையும் எடுக்க மறுப்பது, மேலும் தமிழ் மொழியின் பயன்பாட்டைத் தடுக்க முயல்வது இவை அனைத்தும் தமிழர்களிடையே அதிகரிக்கும் அதிருப்திக்கு காரணமாகியுள்ளன. உதாரணமாக, மலையகப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், சைக்க்ளோன் எச்சரிக்கைகள் தமிழில் வெளியிடப்படாதது. பல சந்தர்ப்பங்களில் சிங்களமும் ஆங்கிலமும் முன்னுரிமை பெற, தமிழ் மொழி மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுவது. அரசு நிகழ்ச்சிகள், கூட்டங்கள், ஊடக சந்திப்புகள் அனைத்தும் சிங்கள மொழியில் மட்டுமே நடைபெறுவது, எந்தத் தமிழோ அல்லது பிற மொழி மொழிபெயர்ப்போ வழங்கப்படாதது இவை அனைத்தும் வெறும் சில எடுத்துக்காட்டுகளே. இவை அனைத்தும் NPP-க்குள் ஆழமாகப் பதிந்திருக்கும் இனவாத (communal) மனப்பாங்கை வெளிப்படுத்துகின்றன. மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பது ஒரு தொழில்நுட்பச் சிக்கல் அல்ல; மாறாக, மாகாண சபை முறையையே முழுமையாக ஒழிக்க வேண்டுமா என்பதைக் குறித்த NPP அரசுக்குள் நடைபெறும் உள்கட்சி விவாதத்தின் பிரதிபலிப்பாகும்.
- NPP-யின் தமிழ் பிரதிநிதிகள், அரசியல் செயல்முறைகள் குறித்த புரிதலின்மையாலும், தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாலும், நாளுக்கு நாள் நம்பகத்தன்மையை இழந்து வருகின்றனர். குறிப்பாக வடக்கில் உள்ள பல தமிழர்கள், தமிழ் தேசியவாதச் சொல்லாட்சிகளாலும் வெற்று உறுதிமொழிகளாலும் தாங்கள் எவ்வாறு தவறாக வழிநடத்தப்பட்டார்கள் என்பதை இப்போது தெளிவாக உணர்ந்து வருகின்றனர். இந்த நபர்களில் பெரும்பாலோர் தற்செயலாக அரசியலுக்குள் வந்தவர்கள். சமூகத்துடன் எந்த உயிருள்ள (organic) தொடர்பும் அவர்களுக்கில்லை. நீடித்த மக்கள்திரள் பணிகளிலிருந்தும் அவர்கள் உருவாகவில்லை. இருப்பினும், தமிழர் நலன்களுக்காகப் போராட ஒரு வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால் அதற்குப் பதிலாக, அவர்கள் JVP-யின் வரலாற்று இனவாத நிலைப்பாட்டிற்கு அடங்கிப் போய், “ஒற்றுமை” குறித்து உபதேசம் செய்து கொண்டே, தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் தேசிய அபிலாஷைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை நடைமுறையில் எடுத்துள்ளனர்.
- முதலாளித்துவ UNP அல்லது SJB ஆகிய கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ள வலதுசாரி தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் சில பகுதிகள், தமிழர் உரிமைகளை முன்னெடுக்கக் கூடிய எந்த அர்த்தமுள்ள அரசியல் திட்டத்தையும் இதுவரை முன்வைக்கத் தவறியுள்ளன.அனுரா அரசுக்கு எதிரான அவர்களது மென்மையான விமர்சனம் கூட வடக்கு கிழக்கு அரசியலில் தமது தாக்கத்தையும் இடத்தையும் உறுதி செய்வதற்கான விருப்பத்தினாலேயே. தமிழர் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உண்மையான உறுதிப்பாட்டாலோ அல்லது இலங்கையில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்த நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவோ அல்ல.
- ஒருகாலத்தில் முக்கிய தமிழ் அரசியல் கூட்டணியாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) இப்போது பெரும்பாலும் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அதன் முக்கிய அங்கக் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK / Federal Party) உள்கட்சித் தகராறுகளாலும் குழப்பங்களாலும் சிதைந்துள்ளது. தமிழர் உரிமைகளை முன்னெடுக்கிறோம் என்ற பெயரில் தெற்கில் உள்ள முதலாளித்துவ அரசுடன் பேச்சுவார்த்தை மற்றும் “ஈடுபாடு” என்ற நிலைப்பாட்டை அவர்கள் தொடர்ந்து பேணுகின்றனர். ஆனால் அவர்களின் முதன்மை கவலை, தங்கள் தேர்தல் பொருத்தத்தை (electoral relevance) தக்க வைத்துக்கொள்வதே. தேர்தல் ஆதாயத்திற்காக மக்கள் ஈர்க்கும் (populist) மற்றும் தேசியவாதச் சொல்லாட்சிகளை அவர்கள் தற்போது அதிகமாக பயன்படுத்துகின்றனர்.கட்சிக்குள் முழு அதிகாரமும் இல்லாத தற்போதைய தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், வெற்று பேச்சுகளுக்காகவே அவர் பெயர் பெற்றுள்ளார்.
- இந்த அரசியல் வெற்றிடத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) வடக்கில் குறிப்பிடத்தக்க அளவிலான ஆதரவைப் பெற்றுள்ளது. இது பெரும்பாலும் தமிழ் தேசியவாதத்தின் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளது. ஆனால் சமூக-பொருளாதார (socioeconomic) பிரச்சினைகள் குறித்த அந்த கட்சியின் நிலைப்பாடுகள் பெரிதாக விளக்கப்படவில்லை. முதலாளித்துவத்தை ஆதரிக்கும் அவர்களது நிலைப்பாட்டையும், குறுகிய தேசியவாத எல்லைகளைத் தாண்டி அவர்கள் எதையும் செய்யாததையும் கருத்தில் கொண்டால், பொருளாதார விடயங்களில் அவர்கள் எவ்வளவு நம்பகத்தன்மை பெறுவார்கள் என்பது தெளிவற்றதாகவே உள்ளது. மேலும், அவர்களது செல்வாக்கு பெரும்பாலும் வடக்கின் சில பகுதிகளுக்குள் மட்டுமே சுருக்கப்பட்டுள்ளது. தெற்கில் உள்ள தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து அடக்குமுறைக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தை ஆரம்பிப்பது குறித்து TNPF எந்தக் கவனத்தையும் செலுத்தவில்லை. இவ்வாறு குறுகிய பரப்பில் மட்டுமே செல்வாக்கு கொண்ட, பரந்த மக்கள்திரள் போராட்டத்தை உருவாக்கத் தேவையான ஈர்ப்பற்ற நிலைப்பாட்டுடன், தமிழர் உரிமைகளைப் பெறுவதற்கான எந்தத் தெளிவான செயல்திட்டத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை.
- தமிழ் அரசியல் கட்சிகள் பெரும்பாலும், மனித உரிமை மீறல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை (UN) ஏதோ ஒரு வகையில் நீதி வழங்கும் என்ற பொய்யான நம்பிக்கையில் ஒன்றுபட்டு நிற்கின்றன. அதேபோல், மோடி அரசு, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ அரசுகள் தமிழர் நலனில் “தலையீடு” செய்து நியாயம் வழங்கும் என்ற மாயையும் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது. புலம்பெயர் (Diaspora) தமிழ் லாபியிங் குழுக்கள் இந்தப் பொய்யான நம்பிக்கையை சமூகத்துக்குள் மேலும் ஆழமாக விதைத்துள்ளன. முந்தைய முதலாளித்துவ அரசுகள் செய்த அத்துமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிச்சமிட்டிருந்த போதிலும், புலம்பெயர் அரசியல் மிகக் குறைந்த அரசியல் செயற்படடையே செய்கின்றது. இலங்கையில் இருப்பதை போலவே, புலம்பெயர் அரசியலும் வலதுசாரி, முதலாளித்துவ ஆதரவு கொண்ட சக்திகளின் ஆதிக்கத்திலேயே உள்ளது. அவர்கள் தங்கள் புதிய நாடுகளில் தனித்தனி தேர்தல் அடிப்படைகளை உருவாக்குவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்குச் சிறந்த உதாரணங்களாக கனடா மற்றும் ஆஸ்திரேலியா காணப்படுகின்றன. அங்கு “தமிழ் வாக்குப் பெட்டி” (Tamil bloc vote) ஒன்றை அமைப்பதே, பெரும்பாலான தமிழ் ஈழ சொல்லாட்சிகளுக்கும் செயற்பாடுகளுக்கும் பின்னணி நோக்கமாக மாறியுள்ளது.
- போர் முடிந்து பதினாறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், சர்வதேச அமைப்புகளோ அல்லது இந்த அரசுகளோ இலங்கையில் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளை ஒருபோதும் வழங்கமாட்டார்கள் என்ற பாடம் எதுவும் கற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த நிலை மாற்றப்படாவிட்டால், இன்னும் அறுபது ஆண்டுகள் கழித்தும் ஒரு முக்கியமான முன்னேற்றம் கூட இல்லாமல் “மனித உரிமைகளுக்காக நாங்கள் நிற்கிறோம்” என்ற வெற்று வாக்குறுதிகளும் நாடகங்களும் தொடரலாம். பெரும்பாலான வலதுசாரி புலம்பெயர் அமைப்புகள் நிதி திரட்டுவதிலும், அதை பயனற்ற லாபியிங் முயற்சிகளில் செலவிடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. தமிழ் சமூக வளங்கள் பொய்யான நம்பிக்கைகளைப் பேணுவதற்காக வீணடிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், மோடி, ட்ரம்ப், சீன அல்லது மேற்கத்திய ஆட்சிகளின் கபட இயல்பைப் பற்றி சமூகத்தை அரசியல் ரீதியாக கல்வி கற்பிப்பதற்கோ, போராட்டங்களை அமைப்பதற்கோ, எதிர்ப்புகளை கட்டமைப்பதற்கோ எந்த முக்கிய வளங்களும் செலுத்தப்படவில்லை.
- சிங்களத் தொழிலாளர்கள், குறைந்த வருமானம் உள்ள மக்கள் மற்றும் பிறரின் இழப்பில் போர் மற்றும் அழிவுக்காக மகத்தான வளங்களைச் செலவிட்ட பிறகு, இலங்கை அரசாங்கம் தமிழ் சமூகத்தை முற்றிலுமாகத் தோல்வியடையச் செய்தது. அதன் பின்னராவது அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் குறைந்தபட்சம் அதே அளவு, அல்லது அதற்கு மேல் செலவிட்டிருக்க வேண்டும். அதற்கு பதிலாக, மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு முதன்மையாக இந்திய அரசாங்கத்தின் உதவிகள் (நிச்சயமாக, அவர்களின் சொந்த நலன்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது) மற்றும் புலம்பெயர்ந்தோர் உதவிக்கு விடப்பட்டுள்ளது. ராஜபக்சே ஆட்சியின் கீழ் இலங்கை இராணுவத் தாக்குதலால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரங்களால் (அந்த நேரத்தில் ஜேவிபியால் ஆதரிக்கப்பட்டது) தூண்டப்பட்ட தமிழ் புலம்பெயர்ந்தோர் தங்கள் பணப்பைகளைத் தாராளமாகத் திறந்து சமூகத்திற்கு உதவ வந்தனர். எண்ணற்ற கடின உழைப்பாளி தமிழ் தொழிலாளர்கள், குறிப்பாக வடக்கில், சில நிவாரணங்களை வழங்கினர். போரின் போதும் அதற்குப் பின்னரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் துன்பங்களைத் தணிப்பதில் இது முக்கிய பங்கு வகித்தாலும், அது தமிழ் அரசியல் அணிதிரட்டலிலும் எதிர் விளைவை ஏற்படுத்தியது. இது தமிழ் “அரசியல் செயல்பாட்டை” வெறும் உதவி விநியோகமாக குறைத்தது. இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் இதை வசதியாக ஏற்றுக்கொண்டுள்ளன, ஏனெனில் அவர்களும் தமிழர் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தவில்லை. எல்லாம் “உதவி வழங்குதல்”, ஏதாவது ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா.வை வற்புறுத்துதல் மற்றும் இதே போன்ற குறியீட்டு செயல்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தமிழர்கள் கடுமையான பொருளாதார நிலைகளில் வாழ வற்புறுத்தப்பட்டுள்ள சூழலில், இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் நம்பிக்கை வைப்பது மற்றும் உதவியைச் சார்ந்திருப்பது தொடர்ந்தும் தமிழ் சமூகத்தின் அரசியல் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்துவது அதிசயமல்ல.
- தமிழ் அரசியல் கட்சிகளின் அரசியல் யோசனைகள் பெரும்பாலும், புவியியல் அரசியல் சக்திகளுக்கிடையில் தங்களைச் சீரமைத்துக் கொள்வதற்குள் மட்டுமே சுருக்கப்பட்டுள்ளன. இந்தியா, இலங்கையில் தன் நலன்களை நிலைநிறுத்துவதற்காக தமிழர்களைத் தேவைப்படுத்துகிறது. எனவே இந்தியாவுடன் இணங்கிச் செல்வதன் மூலம் தமிழர் உரிமைகள் எப்படியோ முன்னேறும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. சிலர், மோடி ஆட்சியை கவர்வதற்காக, தமிழ் இந்து தேசியவாதத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் முன்வைக்கின்றனர். இந்த வாதத்தின் வெறுமையை வெளிச்சமிட்டுக் காட்ட எந்த முன்னணி தமிழ் அரசியல்வாதியும் முன்வரவில்லை. இந்த மாயைகளை உடைப்பதற்கோ, ஒன்றுபட்ட போராட்டத்தின் அவசியத்தை விளக்குவதற்கோ, தமிழர்களிடையே பிரச்சாரம் நடத்த எந்தவொரு தலைவரும் தயாராக இல்லை. இந்திய அரசு, இந்தியாவுக்குள்ளேயே தொழிலாளர்களுக்கும் சிறுபான்மைகளுக்கும் எதிராக மிகப்பெரிய தாக்குதல்களை மேற்கொண்டு வரும் ஒரு ஆட்சியாகும். இத்தகைய ஒரு அரசு, இலங்கையில் உள்ள தமிழர்களின் உண்மையான நலன்களில் ஒருபோதும் செயல்படாது என்பதே கடந்த கால அனுபவங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் தலைவர்கள் புவியியல் அரசியல் நலன்களை எமக்கு சார்பாக “வழிநடத்தலாம்” என்ற கூற்று மற்றொரு பொய்யே. ராஜபக்ச குடும்பம் சர்வதேச ரீதியில் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்ட காலத்திலும் கூட, இந்திய அரசோ அல்லது எந்தச் சர்வதேச நிறுவனமோ எந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களின் முதன்மை நோக்கம், இலங்கை அரசுடன் “ஈடுபட்டு” தங்கள் சொந்த மூலோபாய நலன்களை முன்னெடுத்துச் செல்லுவதே. மனித உரிமைகள் அவர்களுக்குப் பயன்படும் ஒரு தூதரக கருவியாக மட்டுமே உள்ளன. இந்த உண்மையை தமிழர்களிடையே வெளிப்படுத்துவதும், தெற்கிலுள்ள சிங்கள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களிடமும், இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் சிறுபான்மைகளிடமும், இந்த ஆட்சிகளுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டத்திற்கான அழைப்பை விடுப்பதும் மிக அவசியமானதாகும். ஆனால், இந்தப் பொறுப்பை ஏற்க எந்த தமிழ் அரசியல் தலைவரும் தயாராக இல்லை.
- தமிழ்த் தலைவர்கள் மற்றும் முக்கிய அமைப்புகளிடையே தெளிவான அரசியல் உத்தி இல்லாதது, தேர்தல் கணக்கீடுகளால் மட்டுமல்ல, அவர்களின் வர்க்க நலன்களிலும் வேரூன்றியுள்ளது. கடந்த ஆயுத போராட்டத்தின் காலத்தை தவிர, பெரும்பாலானவர்கள் முதலாளித்துவத்திற்கு அப்பால் வேறு எந்த மாற்றையும் காணவில்லை. அரசை மூலதனத்தின் ஒரு கருவியாகப் புரிந்து கொள்ளவும், ஒடுக்குமுறை முதலாளித்துவ கட்டமைப்புகளில் வேரூன்றியுள்ளது என்பதை அங்கீகரிக்கவும் அவர்கள் தவறியது, அதற்கு எதிராக ஒரு புரட்சிகரப் போராட்டத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக முதலாளித்துவ அரசின் மூலம் சீர்திருத்தங்களைத் தேட அவர்களைத் தூண்டுகிறது. இதனால்தான் அவர்களில் யாரும் தமிழ் மக்களின் நலன்களை முன்னேற்றுவதற்கு என்ன தேவை என்பது குறித்து தெளிவான உத்தியை முன்வைப்பதிலோ அல்லது பொது விவாதத்தில் ஈடுபடுவதிலோ ஆர்வம் காட்டவில்லை. ஐ.நா. மூலமாகவோ அல்லது டிரம்ப், மோடி அல்லது வேறு எந்த முதலாளித்துவ சக்தியின் ஆதரவிலோ தமிழர் உரிமைகளை எவ்வாறு வெல்ல முடியும் என்று யாரும் விளக்கவில்லை. உண்மையான முன்னேற்றம் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கும், சமுதாய அமைப்புகளுக்குமான செயல்திறனுக்கே தொடர்புடையது.
- இந்த தோல்வி, “இடதுசாரி” என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற அமைப்புகள் கடந்த காலத்திலும் தற்போதும் ஆற்றிய அழுகிய பங்கினாலும் மேலும் வலுப்பெறுகிறது. ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (USP) தவிர, எந்த இடதுசாரி அமைப்பும் தமிழர்களின் தேசிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதில்லை. முன்நிலை சோசலிஸ்ட் கட்சி (FSP) கூட, தங்களை முற்போக்காளர்களாக காட்டிக் கொண்டாலும், தமிழர்களின் தேசிய உரிமைகளை ஆதரிப்பதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. LSSP மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்த மிக மோசமான துரோகம், அதனைத் தொடர்ந்து JVP மூலம் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. JVP தலைவர்கள், தமிழர்கள் மிகக் குறைந்த அளவிலான அரசியல் உரிமைகளைக் கூட பெறாமல் தடுப்பதற்காகக் கொலைவெறி நிறைந்த பிரச்சாரங்களை நடத்தத் தயாராக இருந்தனர். 1980-களின் இறுதியில், JVP 13-வது திருத்தத்திற்கு எதிராக ஆயுதக் குழுக்களை உருவாக்கியது. இந்தியா முன்னெடுத்த இந்த அரசியலமைப்புச் சீர்திருத்தம், தமிழர்களின் தேசிய அபிலாஷைகளிலிருந்து வெகுவாகத் தொலைவில் உள்ளதும், முற்றிலும் போதாததும் என்றாலும், இத்தகைய குறைந்த அளவிலான ஜனநாயக முன்னேற்றத்தையும் கூட தங்களை “மார்க்சியர்கள்” என்று அழைத்த அமைப்புகள் எதிர்த்தன.13-வது திருத்தம், தமிழ்த் தேசியக்கோரிக்கைக்கான தீர்வல்ல என்பதை நாம் வலியுறுத்துகிறோம். ஆனால் மார்க்சியர்கள், எவ்வளவு குறைந்ததாக இருந்தாலும், ஜனநாயக முன்னேற்றங்களைத் தடுப்பவர்கள் அல்ல. எனவே, இச்சூழலில், 13-வது திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், ஜனநாயகத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோருவது சரியானதே அதனால் தமிழர்களின் தேசிய அபிலாஷை தீர்ந்து விடும் என்ற எந்த மாயையும் உருவாக்காமல். தமிழ் அரசியல் கட்சிகள் சில நேரங்களில் கூட்டாட்சி அமைப்புக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளன. சமீப காலங்களில் அதனுள் சுயநிர்ணய உரிமையும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் மக்களை இயக்காமல், அதே நேரத்தில் சிங்கள மற்றும் பிற சமூகங்களிடம் முறையான அரசியல் அழைப்பு விடுக்காமல், இக்கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாது.இந்த அரசியல் பணிகள் இல்லையெனில், இக்கோரிக்கைகள் வெறும் கோட்பாடாகவோ அல்லது அலங்காரமாகவோ மட்டுமே இருந்து விடும். அடிப்படை உரிமைகளை மறுக்கும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரிக்கும் போதே, தமிழர்களுக்கான முழுமையான ஜனநாயக உரிமைகளை வலியுறுத்துவதில் நாம் எந்தத் தயக்கமும் கொள்ளவில்லை. அதே நேரத்தில், தமிழர்களுக்கான எந்த ஜனநாயக முன்னேற்றத்தையும் அது எவ்வளவு குறைந்ததாக இருந்தாலும் நாம் எதிர்ப்பதில்லை என்பதே அடிப்படை நிலைப்பாடாகும். வடக்கு–கிழக்கு இணைந்த நிர்வாக அலகிற்கான கோரிக்கையை ஆதரிப்பதும் சரியானதே. இந்தக் கோரிக்கைக்கு எதிராக, வடக்கையும் கிழக்கையும் பிரிக்க உத்தரவு வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தை நாடிய JVP இதனை எதிர்த்தது. JVP-யின் இந்தக் கோரிக்கைக்கு எதிராக நீதிமன்றம் சென்ற ஒரே கட்சியாக ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (USP) இருந்தது. எனினும், வடக்கு–கிழக்கு இணைப்பிற்கான ஆதரவு, கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரின் மற்றும் பிற சமூகங்களின் உரிமைகளைத் துறந்து வரக்கூடாது. அவர்களின் அனைத்து ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். தரையில் (on the ground) பரந்த மக்கள்திரள் ஆதரவை வெல்லாமல், இத்தகைய கோரிக்கைகள் எதுவும் நடைமுறைக்கு வராது. இந்தப் பிராந்தியங்களில் வாழும் அனைத்து தொழிலாளர்களின் மற்றும் ஏழை மக்களின் உரிமைகளும் இந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும்.தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்கள தொழிலாளர்கள் மற்றும் முதலாளித்துவத்தால் சுரண்டப்படும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் மக்கள்திரள் போராட்டம் இல்லாமல், எந்த அரசியலமைப்புச் சீர்திருத்தமும் தமிழர் உரிமைகளை உறுதி செய்யாது. ஜனநாயக மற்றும் தேசிய உரிமைகளை வெல்ல விரும்பும் எந்தத் தீவிரமான அரசியல் யோசனையிலும், இந்த அடிப்படை அம்சம் தவறாமல் சேர்க்கப்பட வேண்டும். தேசிய உரிமைகளுக்கான போராட்டம் முஸ்லிம் மக்களுக்கான சிறப்பு அல்லது தேசிய உரிமைகளையும் உட்பட குறுகிய அல்லது விலக்குவாதமான முறையில் சிந்திக்கப்படக் கூடாது. அனைத்து சமூகங்களின் உரிமைகளையும் முழுமையாக அங்கீகரிக்கும், ஒன்றுபட்ட போராட்டத்தின் அடிப்படையில், தமிழர்கள் தன்னார்வமாக ஒரு கூட்டாட்சியின் (confederation) பகுதியாக இருக்கத் தேர்வு செய்யக்கூடும். அந்தக் கூட்டாட்சி, வளங்களை ஜனநாயக ரீதியில் திட்டமிட்டு பகிர்ந்தளிப்பதன் மூலம், அனைவரின் நலனுக்காக செயல்பட வேண்டும். இத்தகைய ஒற்றுமையை உருவாக்குவது முழுமையாக சாத்தியமானதே. மேலும் அது தென் ஆசியப் பிராந்தியமெங்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் சோசலிச அடிப்படையிலான தென் ஆசியக் கூட்டாட்சிக்கான வழியையும் அது சுட்டிக்காட்டும். மீண்டும் வலியுறுத்த வேண்டியது என்னவென்றால், இந்தப் பரந்த அரசியல் இலக்குகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் போதே, எந்தவொரு ஜனநாயக முன்னேற்றத்தையும் மார்க்சியர்கள் வரவேற்கிறார்கள். ஆனால், அத்தகைய ஒவ்வொரு முன்னேற்றமும், போராட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், அதனை அடுத்த கட்ட தீர்மானமான முன்னேற்றங்களுக்குத் தள்ளிச் செல்லவும் பயன்பட வேண்டும்.
- இலங்கையின் பெரும்பாலான இடதுசாரி அமைப்புகள் NPP அரசுக்கு எதிராக இருப்பதாகக் கூறுபவர்களும் உட்பட தமிழர்களின் கோரிக்கைகளை தெளிவாக முன்வைக்கத் தவறுகின்றன. தமிழர்களை பாதிக்கும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் மிகவும் முக்கியமானவையாக இருந்தாலும், அவை மட்டும் போதுமானவை அல்ல. மொழி உரிமைகள், பண்பாட்டு உரிமைகள் உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளுடன் இணைந்த தமிழ் தேசிய அபிலாஷைகள் கூடவே எடுத்துரைக்கப்பட வேண்டும். தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்காமல், எந்த ஒன்றுபட்ட போராட்டத்தையும் கட்டமைப்பதற்கான நம்பிக்கை இருக்க முடியாது.
- தேவையானது, குறுகிய கால தேர்தல் லாபங்களுக்காக உருவாக்கப்படும் இன்னொரு அரசியல் கூட்டணி அல்ல; மாறாக, தமிழர்களின் தேசிய உரிமைகள் உட்பட, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு ஒன்றுபட்ட, தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் திட்டம் ஆகும்.
- தமிழர் உரிமைகள் குறித்து உண்மையாகக் கவலைப்படும் எந்த அமைப்பும், தெளிவான அரசியல் திட்டத்தின் அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட முன்னணியை உருவாக்க முன்வர வேண்டும். அந்தத் திட்டம், அனைவருக்கும் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை முன்வைப்பதோடு, தமிழர்களின் ஜனநாயக மற்றும் தேசிய உரிமைகளை உறுதியாகப் பாதுகாக்க வேண்டும்.
எங்கள் பரிந்துரைகள்
● தமிழர்களின் தேசிய உரிமைகள் உட்பட, தமிழர் உரிமைகளை முன்னெடுக்க வலுவான, ஒன்றுபட்ட போராட்டத்தை கட்டமைக்கத் தயாராக உள்ள அனைவரையும் இணைத்து ஒரு கூட்டத்தை அழைக்க வேண்டும்.
● எந்த அரசியல் திட்டம் தேவை, எந்த முக்கிய கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்து ஒரு திறந்த பொதுக் கலந்துரையாடலை நடத்த வேண்டும்.
● இந்தத் திட்டத்தின் அடிப்படையில், சமரசமற்ற ஒரு அரசியல் கூட்டணியை உருவாக்க வேண்டும். அது ஒன்றுபட்ட முன்னணியாகச்(United front) செயல்பட வேண்டும். இந்தக் கூட்டணி அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்க முயற்சிக்க வேண்டும்.
● இந்தக் கோரிக்கைகளை வெல்ல ஒரு தெளிவான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். அதில், சிங்கள, முஸ்லிம், மலையக மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களை, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் அனைவரின் பொருளாதார-சமூக தேவைகளை நிறைவேற்றும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் அணுகுதல் அவசியம். தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தொழிலாளர் அமைப்புகளிடமும், கோட்பாட்டின் அடிப்படையில் நிலைப்பாடு எடுத்து, இந்தக் கோரிக்கைகளை தங்கள் உறுப்பினர்களிடையே முன்னெடுக்குமாறு அழைப்பு விடுக்க வேண்டும். இந்த இயக்கம் தென் ஆசியா முழுவதும் போராடும் மக்களிடமும் தன் அழைப்பை விரிவுபடுத்த வேண்டும்.
● இந்த அரசியல் திட்டத்தை விளக்கவும், பொதுமக்களிடையே பரப்பவும், தமிழர்களிடையும் அனைத்து சமூகங்களிடையும் கல்வி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த வேண்டும்.
● இந்தப் பிரச்சாரத்திற்கும், போராட்ட சக்திகளை கட்டமைப்பதற்கும் வளங்களைத் திருப்ப வேண்டும். மக்களிடையே உள்ள ஒன்றுபட்ட கூட்டணியை வலுப்படுத்தி, அனைவரின் ஜனநாயக மற்றும் பொருளாதார உரிமைகளை ஆதரிக்கும் சோசலிசத் திட்டத்துடன் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் அரசை உருவாக்கும் நோக்கில், நீடித்த எதிர்ப்புப் போராட்டத்திற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.