இலங்கை: தேசிய மக்கள் சக்தி அரசின் வர்க்க இயல்பு என்ன?

இலங்கை: தேசிய மக்கள் சக்தி அரசின் வர்க்க இயல்பு என்ன?

பகுதி 1 

ஸ்ரீ தூங்க ஜெயசூரிய – ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி  

நன்றி socialistworld.net

அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு அதிகாரத்திற்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு பதவியேற்றதிலிருந்து, அதன் வர்க்க இயல்பு என்ன, அது எந்த வகையான சமூக–பொருளாதார திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதைக் குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. இதைப் புரிந்து கொள்ள, NPP எவ்வாறு அதிகாரத்திற்கு வந்தது என்பதை ஆய்வு செய்வது அவசியம்.

இந்த அரசின் எழுச்சிக்கான சமூக மற்றும் அரசியல் பின்னணி 2022 ஆம் ஆண்டின் மக்கள் போராட்டத்தின் மூலம் உருவானது. காலி முகத்திடல் மக்கள் போராட்டம்  (Galle Face People’s Struggle) அல்லது “அரக்கலய “ அடிப்படையில் தெளிவான இலக்கோ அல்லது திட்டமோ இல்லாத, நடுத்தர வர்க்கம் தலைமையிலான, சற்றே குழப்பமான (anarchic) இயக்கமாக இருந்தது. இருப்பினும், அதுவரை நாட்டை ஆட்சி செய்த பாரம்பரிய அதிகார கட்டமைப்புகளுக்கு எதிரான போராட்டமாக அது வளர்ந்தது. காலி முகத்திடல் போராட்டத்துடன் NPP-க்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லாவிட்டாலும், தன்னை ஊழலுக்கு எதிரான சக்தியாகவும், பழைய உயர்குடி அரசியல் கட்சிகளுடன் தொடர்பற்றதாகவும் முன்வைத்து, தேர்தல் ஆதரவைப் பிடிக்க NPP-க்கு முடிந்தது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி  முறையை (Executive Presidency) ஒழிப்பது போன்ற பல்வேறு மக்கள் கவர்ச்சியான (populist) முழக்கங்களை முன்வைத்து NPP அரசியல் வெற்றிடத்தை நிரப்பியது. முதலாளித்துவக் கொள்கைகளையோ, தேசியவாதப் போக்குகளையோ அது சவால் செய்யாததால், ஊழல் எதிர்ப்பு முழக்கங்களுக்குள் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டது. இது அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலரின் மனநிலைக்கு ஏற்றதாக இருந்தது.

போராட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (USP) மற்றும் இடதுசாரி அமைப்புகளில் சில, இந்த இயக்கம் முதலாளித்துவத்திற்கான சோசலிஸ்ட் மாற்றுகளை முன்வைத்து, தொழிலாளர் தலைமையிலான சுயாதீன அரசியல் கட்சியை கட்டியெழுப்பும் திசையில் செல்ல வேண்டும் என்று வாதிட்டன. ஆனால் இயக்கத்தின் பல்வர்க்க இயல்பும், பிற காரணிகளும் காரணமாக, இக்கருத்துகளுக்கு ஆதரவு வரம்புக்குள் இருந்தது. இருப்பினும், போராட்ட அனுபவமும் புதிய அரசும் சோசலிஸ்ட் கொள்கைகளுக்கு விரிந்த ஆதரவாளர்களை உருவாக்கும் என்று USP வலியுறுத்தியது. ஆரம்ப நிலையில், இச்சூழலில், மக்கள் கவர்ச்சியான மற்றும் ‘எளிய’ முழக்கங்களுடன் செயல்பட்ட சந்தர்ப்பவாத அமைப்புகள் ஆதரவைப் பெற்றன.

2019 இல் கோத்தாபய ராஜபக்ச அதிகாரத்திற்கு வர பயன்படுத்திய “மக்கள் சக்தி” பிரச்சாரம், 2024 இல் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வருவதற்கு உதவியது. விரைவான முடிவுகளை எதிர்பார்க்கும், தெளிவான அரசியல் கண்ணோட்டம் இல்லாத இந்த வேகமாக ஊசலாடும் NPP, விரைவில் உடைந்து போகும் அபாயம் கொண்டது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் ஜனாதிபதி  மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றனர். இந்த அரசியல் அதிகார மாற்றம், இலங்கை தேர்தல் அரசியல் வரலாற்றில் தீர்மானமான மாற்றமாகும். இது, கொழும்பு மையமான உயர்குடி வர்க்கத்திலிருந்து, கிராமப்புற அடிப்படையைக் கொண்ட, பல சமூக அடுக்குகளை உள்ளடக்கிய உயர்குடியற்ற சக்திக்கான மாற்றமாக புரிந்து கொள்ளலாம்.

தேசிய மக்கள் சக்தி (NPP) முன்னணிக்குள் செயல்படும் மையம்  ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) ஆகும். சுமார் 65 ஆண்டுகளாக மேற்பரப்பில் மார்க்சிசம்–லெனினிசம் என்று கூறிக்கொண்டிருந்த கட்சிதான் இது. 1971 மற்றும் 1988–89 ஆகிய காலகட்டங்களில், முக்கியமாக இலங்கையின் தெற்குப் பகுதிகளில், இரண்டு ஆயுத கிளர்ச்சிகளை இக்கட்சி வழிநடத்தியது. ஹரிணி அமரசூரிய போன்ற நடுத்தர வர்க்க பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலைஞர்கள், மேலும் உள்ளூர் வியாபாரிகள் ஆகியோரால் கட்டியெழுப்பப்பட்ட NPP, JVP-யை முதுகெலும்பாகக் கொண்டு செயல்பட்டது. அந்த அர்த்தத்தில், JVP–NPP கூட்டணி, நடுத்தர வர்க்க தீவிர சிறு முதலாளித்துவ (petty-bourgeois) சக்திகளை அடிப்படையாகக் கொண்ட கூட்டணியாகும். முதலாளித்துவ அமைப்புக்குள் செயல்படுவதாக உறுதி அளித்திருந்த போதிலும், மக்கள் கவனத்தை ஈர்க்க ஏராளமான கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை இக்கூட்டணி அளித்து, “ஒரு செழிப்பான நாடு – ஒரு அழகான வாழ்க்கை” என்ற திட்டத்தை முன்வைத்தது. ஆனால் அதிகாரத்திற்கு வந்த பின், முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கும் நிலையில், நவதாராளவாத (neoliberal) திட்டத்தை செயல்படுத்த, ஏகாதிபத்திய  சக்திகளுடன் வெளிப்படையாக ஒப்பந்தங்கள் செய்து, மக்கள் முன் அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் முற்றிலும் மறந்துவிட்டது என்பது தெளிவாகிறது.

சிறு முதலாளித்துவ இளைஞர் சக்திகளை ஈர்ப்பதற்காக, வரலாற்றில் மக்கள் ஏமாற்றப் பயன்படுத்தப்பட்ட சோகோல்டு  மார்க்சிசம் மற்றும் சோசலிசம் குறித்த JVP-யின் சொல்லாடல்கள்,  அதனால் மிகவும் விழிப்புணர்வுடன் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன. அனுர குமார, தில்வின் சில்வா உள்ளிட்ட JVP தலைமையினர், NPP உருவாக்கத்தை பயன்படுத்தி, தங்களிடம் எஞ்சியிருந்த இடதுசாரி கொள்கைகளையும் நீர்த்து போகச்செய்து , வலதுசாரி பாதைக்கு நகர்ந்தனர். தோட்டத் தொழிலாளர்கள் (மலையக மக்கள்) உட்பட, நாட்டின் மக்கள் தொகையில் 26%-க்கும் மேற்பட்டோர் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள். சமீபத்திய அறிக்கைகள் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு வேகமாக அதிகரித்து வருவதை காட்டுகின்றன. பொருளாதார நெருக்கடியால், பெரும்பாலான தொழிலாளர் வர்க்க மக்கள் தங்கள் தினசரி உணவு அளவைக் குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு ஒரு வருடமாக அதிகாரத்தில் இருந்தும், சமூகத்தின் கீழ்த்தட்டினருக்கு எந்தவிதமான நிவாரணத்தையும் வழங்கத் தவறியுள்ளது.

இந்த மக்கள்தொகையின் பெரும் பகுதி, அவசரமான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், திசைகாட்டி  சின்னத்திற்கு வாக்களித்தனர். 18% VAT குறைப்பு, கல்வி மற்றும் மருந்துகள் மீதான VAT நீக்கம், மின்சார கட்டணங்களை 33% குறைத்தல், எரிபொருள் விலைகுறைப்பு, பயங்கரவாதத் தடுப்பு சட்டம் (PTA) ரத்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி  முறையை ஒழித்தல் போன்ற பல வாக்குறுதிகள் இதில் அடங்கின. அமைச்சரவையின் பதவியேற்பின் போது,அதிபர் முறை ஒழிக்கப்படும் என்ற அர்த்தத்தில் NPP அரசின் சக்திவாய்ந்த அமைச்சர் சுனில் ஹண்டுனெட்டி, அனுர குமார இலங்கையின் கடைசி அதிபராக இருப்பார் என்று அறிவித்தார். கடந்த காலத்தில், 1994 அதிபர் தேர்தலில் JVP சார்பில் போட்டியிட்ட நிஹால் கலப்பத்தி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி  முறையை ஒழிப்பதாக எழுத்து மூல உறுதியை சந்திரிகாவிடமிருந்து பெற்று, தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். 1994 முதல் 2024 இல் அதிகாரத்திற்கு வரும் வரை, JVP நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி  முறையை ஒழிப்பதை ஆதரித்தே வந்தது.

1994க்கு பின் அதிபராக வந்த ஒவ்வொருவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி  முறையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தாலும், அதனுடன் இணைந்த சர்வாதிகாரத்தின்  பேராசையால், யாரும் அதை நிறைவேற்றவில்லை. அந்த வாக்குறுதிகளை மீறிய அனைத்து ஜனாதிபதிகளும்  இன்று வரலாற்றின் தூசிப் பெட்டியில் விழுந்துள்ளனர். அதேபோல், அனுர குமார திசாநாயக்கவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி  முறையை முழுமையாக ஒழிக்கும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவார் என்பது சாத்தியமற்றதாகத் தெரிகிறது. புதிய அரசியலமைப்பை கொண்டு வர உண்மையான அவசியம் இருந்தால், சமீபத்திய அரசியல் வரலாற்றில் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைக் கொண்ட ஒரே அரசு இதுவே. இதுகுறித்து அமைச்சரவையின் பேச்சாளர் சமீபத்தில், புதிய அரசியலமைப்பை விட பொருளாதார வளர்ச்சிக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். இது, கடந்த காலத்தில் ராஜபக்சர்களும் விக்கிரமசிங்கேவும் மக்களை ஏமாற்ற பயன்படுத்திய அதே மொழியிலிருந்து எவ்வித வேறுபாடும் இல்லை. தேசிய மக்கள் சக்தியும் அதே பேச்சைத் தொடர்கிறது.

“எலீட்” அல்லது “படித்தவர்கள்” அரசாக தன்னை முன்வைத்த தேசிய மக்கள் சக்தி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின்  அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்துகிறது. முன் இருந்த ஜனாதிபதிகளை  பாதித்த அதிகாரப் பேராசை நோய் அனுர குமாரையும் தாக்கியுள்ளது என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. தற்போதைய நடைமுறையைப் பார்த்தால், தொழிலாளர்களையும் ஏழைகளையும் ஒடுக்க அரசியல் அரசியலமைப்பு சர்வாதிகாரமாக இது வளரக்கூடிய பெரிய அபாயம் உள்ளது. எதிர்ப்பாளர்களை வேட்டையாட பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை (PTA) அனுர குமார வெட்கமின்றி பயன்படுத்துவது இதற்கான எடுத்துக்காட்டாகும். 

 

தொடரும்…..