பிரித்தானியா: Labour அரசின் வீடில்லாதோர் திட்டம்: நெருக்கடியை ஒப்புக்கொள்வது மட்டுமே – அது தீர்வை மறுக்கின்றது.

Photo: Huntersmith7/CC

பிரித்தானியா: Labour அரசின் வீடில்லாதோர் திட்டம்: நெருக்கடியை ஒப்புக்கொள்வது மட்டுமே – அது தீர்வை மறுக்கின்றது.

பிரித்தானியாவின் தற்போதைய Labour அரசு சமீபத்தில் அறிவித்துள்ள வீடில்லாதோர் (homelessness) குறித்தத் திட்டம், இங்கு நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கான ஒரு ஒப்புக்கொள்ளலாக மட்டுமே உள்ளது. ஆனால், அந்த நெருக்கடியை உருவாக்கிய மூல காரணங்களை எதிர்கொள்ளவும், வீடில்லாத நிலையை முற்றாக ஒழிக்கவும் தேவையான தீவிர அரசியல் துணிச்சல் இதில் எதுவும் இல்லை.

UK அரசு மற்றும் ONS தரவுகள், இன்றைய நிலைமை ஒரு “சமூக அவசர நிலை” என்பதை தெளிவாக காட்டுகின்றன. DLUHC (Department for Levelling Up, Housing and Communities) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இங்கிலாந்தில் மட்டும் 3.5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடில்லாத நிலையில் உள்ளனர் அல்லது அரசால் அப்படியே வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 1.6–1.7 இலட்சம் குழந்தைகள் தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வருகின்றனர். இது ஒரு “தவறான கொள்கையின்” விளைவு அல்ல. அது அரசின்  தொடர்ச்சியான அரசியல் தீர்மானங்களின் நேரடி விளைவு.

2024–25 காலகட்டத்தில் மட்டும், 1.1 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சட்டபூர்வமாக homeless என அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, வாடகை உயர்வு, housing benefit போதாமை, மற்றும் வெளியேற்றங்கள் (evictions) காரணமாக தங்கள் வீடுகளை இழந்த குடும்பங்களே. ONS தரவுகள் காட்டுவது என்னவென்றால், இது “தனிநபர் தோல்வி” அல்ல. மாறாக  சந்தை அடிப்படையிலான வீட்டுக்கொள்கையின்  தோல்வி.

இந்த நெருக்கடிக்கு பதிலளிப்பதாக Labour அரசு முன்வைத்துள்ள மூன்று வாக்குறுதிகள் –

  • நீண்டகால தெருவாழ்வோரின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பது.
  • குடும்பங்களை B&B தங்குமிடங்களில் வைப்பதை நிறுத்துவது.
  • மேலும் பலர் வீடில்லாத நிலைக்குள் தள்ளப்படுவதைத் தடுப்பது.

இவை அனைத்தும், உண்மையில் பார்த்தால், அரசு தன் தோல்வியின் அளவை குறைக்க முயற்சிப்பதற்கான நிர்வாக இலக்குகள் மட்டுமே. வீடில்லாத நிலையை “ஒழிப்பது” என்ற வார்த்தை கூட இதில் இல்லை. இதுவே, Labour அரசின் அரசியல் எல்லையை வெளிப்படுத்துகிறது.

உள்ளூர் கவுன்சில்கள் இன்று முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளன. ONS மற்றும் Local Government Association தரவுகளின்படி, கடந்த ஒரு தசாப்தத்தில் உள்ளூர் கவுன்சில்களின் நிதி ஆதாரம் உண்மையான மதிப்பில் 30–40% வரை குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், homelessness, social care, குழந்தைகள் பாதுகாப்பு போன்ற சேவைகளின் தேவை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, முன்தள ஊழியர்கள் கடுமையான பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தில் சிக்கியுள்ளனர்.

St Martin’s in the Field மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆய்வுகள், 85% முன்தள ஊழியர்கள் சேவை தேவைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலோர், சோர்வு மற்றும் பணியிலிருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது “சேவை திறன்” பிரச்சினை அல்ல; austerity என்ற அரசியல் கொள்கையின் விளைவு.இந்த சேவைகளுக்கான நிதிகுறைப்பால் தேவையை விட குறைவாக உள்ளை   முன்தள ஊழியர்கள் அதிக பணிச்சுமையை எதிர்கொள்கின்றார்கள்.

Labour அரசின் திட்டங்களில் மிகப் பெரிய குறைபாடு என்னவென்றால், Housing First போன்ற நிரூபிக்கப்பட்ட தீர்வுகளை பெருமளவில் விரிவுபடுத்துவதற்கான உறுதியான நிலைப்பாடு இல்லை. கடுமையான உடல், மனநல, போதைப்பொருள் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, முதலில் பாதுகாப்பான வீடு வழங்கி, அதன் பின்னர் ஆதரவு சேவைகளை இணைக்கும் இந்த அணுகுமுறை, பல நகரங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதை தேசிய அளவில் அமல்படுத்த Labour தயங்குகிறது – காரணம், அது செலவாகும், லாபம் தராது.

அதேபோல், மலிவான, உயர்தர council வீடுகளை பெருமளவில் கட்டும் அரசுத் திட்டம் பற்றிய எந்த தீவிர அறிவிப்பும் இல்லை. 1980களுக்கு முன், ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான  council வீடுகளை அரசு கட்டிய காலம் இருந்தது. இன்று, அந்த எண்ணிக்கை ஒரு சிறிய பங்காக சுருங்கியுள்ளது. சந்தை, developers, private landlords மீது நம்பிக்கை வைத்தால் வீட்டு நெருக்கடி தீரும் என்பது, கடந்த 30 ஆண்டுகளாக முற்றிலும் பொய்யென்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

UK-யில் தனியார் வாடகை சந்தை இன்று ஒரு சமூக பேரழிவாக மாறியுள்ளது. ONS தரவுகளின்படி, 2025 வரை கடந்த ஒரு ஆண்டில் தனியார் வாடகைகள் சராசரியாக 5% உயர்ந்துள்ளன. பல நகரங்களில் இது இன்னும் அதிகம். அதே நேரத்தில், சராசரி வாடகையாளர் தனது ஊதியத்தின் 36.3% வாடகைக்கே செலவிட வேண்டிய நிலை உள்ளது. குறைந்த வருமானம் பெறுவோருக்கு, இது வாழ்க்கைச் சாத்தியமில்லாத நிலை.

Local Housing Allowance (LHA) – குறைந்த விலை வீடுகளின் வாடகையை கவர வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது – பல ஆண்டுகளாக இந்த பொடுப்பனவு  உறைநிலையில் வைக்கப்பட்டுள்ளது. அரசின் சொந்த மதிப்பீடுகளின்படி, இன்று LHA ஒரு பகுதியில் உள்ள மிகக் குறைந்த விலை வீடுகளின் வாடகையின்  மூன்றில் ஒரு பகுதியை கூட கவர முடியாத நிலையில் உள்ளது. இதன் விளைவாக, வேலை செய்யும் தொழிலாளர்களே வாடகை கொடுக்கமுடியாத நிலையில்  சிக்கி, வெளியேற்றப்பட்டு, homelessness-க்கு தள்ளப்படுகின்றனர்.

Housing Benefit-ஐ உயர்த்தாமல், வாடகைகளுக்கு கட்டுப்பாடு விதிக்காமல், வீடில்லாத நிலையைத் “தடுக்கலாம்” என்பதே ஒரு அரசியல் மாயை. வாடகைக் கட்டுப்பாடு (rent control) மற்றும் housing benefit-ஐ உண்மையான வாடகை அளவுக்கு உயர்த்துதல் ஆகியவை இல்லாமல், எந்த homelessness strategy-யும் வெறும் ஆவணமாகவே இருக்கும்.

இறுதியில், கேள்வி இதுதான்:
வீடு ஒரு லாபப் பொருளா, அல்லது அடிப்படை மனித உரிமையா?

Labour அரசின் தற்போதைய அணுகுமுறை, சந்தையை சவால் செய்யாமல், அதன் மிக மோசமான விளைவுகளை “மேலாண்மை” செய்ய முயற்சிப்பதே. ஆனால், homelessness என்பது மேலாண்மை செய்ய வேண்டிய ஒரு பிரச்சினை அல்ல; அதை உருவாக்கிய அமைப்பையே மாற்ற வேண்டிய அரசியல் சவால்.

வீடில்லாத நிலையை உண்மையாக ஒழிக்க வேண்டுமென்றால், austerity-க்கு முற்றுப்புள்ளி, council வீடுகளின் பெருமளவு கட்டுமானம், rent control, Housing First விரிவாக்கம், மற்றும் housing benefit-ஐ முழுமையாக உயர்த்துதல் ஆகியவை அவசியம். இதற்கு குறைவான எந்த திட்டமும், நெருக்கடியை ஒப்புக்கொள்வதாக மட்டுமே இருக்கும் – தீர்வாக அல்ல. 

வீட்டு நெருக்கடிக்கு எதிராக போராட்டம் -தமிழ் சொலிடாரிட்டி