Views: 8
வட்டுக்கோட்டைத் தீர்மானமும் லெனினின் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையும்.
-ராகவன்-
மகேந்திரன் திருவரங்கன் எழுதிய “விடுதலையைக் காலனித்துவ நீக்கம் செய்தல்: வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அப்பால் சிந்தித்தல்” என்ற கட்டுரையை வாசிக்க நேர்ந்தது , அந்த கட்டுரை தமிழ் தேசிய அரசியலை மீளாய்வு செய்ய வேண்டிய அவசியத்தை முன்வைக்கிறது. அந்த முயற்சி முக்கியமானது. எந்த விடுதலை அரசியலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. ஆனால் அந்த விமர்சனம் வரலாற்று அதிகார உறவுகளையும், ஒடுக்குபவர் – ஒடுக்கப்பட்டவர் என்ற அடிப்படை முரண்பாட்டையும் மறந்து செய்ய முடியாது. அது விடுதலை அரசியலை தெளிவுபடுத்துவதற்குப் பதிலாக அதனைப் பலவீனப்படுத்தும்.
அந்தக் கட்டுரையில் அவர் வட்டுக்கோட்டடைத் தீர்மானத்தை விமர்சிப்பதன் மூலம் தனது கருத்தை சொல்லவருகின்றார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வெறும் “பிறரை விலக்கும் இன தேசியவாத ஆவணம்” எனச் சுருக்குகிறார், இது அதன் வரலாற்றுப் பின்னணியையும் அரசியல் உள்ளடக்கத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத நிலைப்பாடாகும். இலங்கைத் தீவில் நிகழ்ந்த சிங்கள-பௌத்த அரச அதிகாரம், மொழிச் சட்டங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாகுபாடுகள், அரச ஆதரவு குடியேற்றத் திட்டங்கள், இராணுவமயமாக்கல், இன வன்முறை ஆகியவற்றின் மூலம் தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட சூழலில்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் உருவானது. அது வெறுமனே ஒரு இன அடையாளத்தின் கற்பனை அல்ல; அது ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் எதிர்விளைவாகவும் பார்க்கப்பட வேண்டியது.
மேலும், வட்டுக்கோட்டைத் தீர்மானம் வெறும் அரசியல் தலைவர்களின் அறிவிப்பாக மட்டும் இருக்கவில்லை. 1977 பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF), வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் (அதன் குறைந்த பட்ச வரைவினை மட்டும் உள்வாங்கி) ‘தமிழீழத்திற்கான’ அரசியல் ஆணையை மக்களிடம் கோரி தேர்தலில் போட்டியிட்டது. வடகிழக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் இதை ஆதரித்தனர். எனவே, வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரு கட்சித் தீர்மானமாக மட்டுமல்லாமல், தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியாக ஏற்கப்பட்ட ஒரு தேசிய அரசியல் ஆணையாகவும் மாறியது. அதன் அரசியல் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள இந்த ஜனநாயக ஆதரவு எவ்வாறு நிகழந்தது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
லெனின் தேசிய பிரச்சினை பற்றிய மிகத் தெளிவாகக் கூறியது ஒன்றுண்டு. ஒடுக்குபவர் தேசத்தின் தேசியவாதத்தையும் ஒடுக்கப்பட்ட தேசத்தின் தேசிய சுயநிர்ணயக் கோரிக்கையையும் ஒரே தராசில் வைத்து எடை போட முடியாது என்பதே அது. ரஷ்யப் பேரரசின் சூழலில் போலந்து, பின்லாந்து, உக்ரைன் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட தேசங்களின் சுயநிர்ணய உரிமையை லெனின் ஆதரித்தார். அவர் தேசியவாதத்தை மகிமைப்படுத்தவில்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை மறுப்பது நடைமுறையில் ஒடுக்குபவர் தேசத்தின் ஆதிக்கத்தையே பாதுகாக்கும் என்று வலியுறுத்தினார்.
இந்தக் கேள்வியில் லெனினுக்கும் ரோசா லக்சம்பேர்க்குக்கும் இடையே முக்கியமான கோட்பாட்டு விவாதம் நடைபெற்றது அறிவோம். தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது தேசியப் பிரிவினையை கட்டாயமாக ஆதரிப்பதல்ல என்று லெனின் வாதிட்டார். மாறாக, ஒரு மக்களுக்கு பிரிந்து செல்லும் உரிமை இருப்பதை அங்கீகரிப்பதே சமத்துவத்தின் அடிப்படையில் தன்னார்வ ஒற்றுமையை உருவாக்கும் ஜனநாயக முன்நிபந்தனை என்று அவர் விளக்கினார். ஆகவே, தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது என்பது பிரிவினை வாதம் மட்டுமே என சுருக்கிவிட முடியாது. அது ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமையை அங்கீகரிப்பதில் இருந்து ஆரம்பிக்கின்றது.
இந்த அடிப்படையில், சிங்கள-பௌத்த தேசியவாதத்தையும் தமிழர் தேசிய சுயநிர்ணயக் கோரிக்கையையும் ஒரே அரசியல் வகைக்குள் அடைப்பது லெனினிய அணுகுமுறை அல்ல. ஒன்று அரசின் அதிகார இயந்திரங்கள், இராணுவம், அரசியலமைப்பு, நிலக் கொள்கைகள் மற்றும் மக்கள்தொகை மாற்றத் திட்டங்களுடன் இணைந்த ஆதிக்க தேசியவாதம். மற்றொன்று நீண்டகால தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக உருவான ஒரு ஜனநாயக விடுதலைக் கோரிக்கை. ஒடுக்குபவரின் வன்முறையையும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பையும் ஒரே “இன அரசியல்” என சமமாக்குவது வரலாற்றை வலிந்து சமநிலைப்படுத்தும் முயற்சி.அது அதிகாரத்தின் உண்மையான முகத்தை மறைப்பதாகும்.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரு குறுகிய இன மேலாதிக்க ஆவணம் அல்ல. அது சுதந்திரமான, இறையாண்மைமிக்க, மதச்சார்பற்ற, சோசலிச தமிழீழத்தை முன்வைத்தது. அதில் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பிறப்பின் அடிப்படையிலான சமத்துவமின்மைக்கு எதிரான சட்ட நடவடிக்கை, அதிகாரப் பரவலாக்கம், வளங்களின் மறுபகிர்வு, தொழிலாளர்களின் கண்ணியம், பொருளாதார திட்டமிடல், மொழி சமத்துவம் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இது வெறும் தேசிய அரசை உருவாக்கும் திட்டம் மட்டுமல்ல; சமூக மாற்றத்திற்கான ஒரு அரசியல் கற்பனையாகவும் இருந்தது.
மகேந்திரன் திருவரங்கன், வட்டுக்கோட்டைத் தீர்மானம் முஸ்லிம்களையும் மலையகத் தமிழர்களையும் முழுமையாக உள்ளடக்கவில்லை என்று வாதிடுகிறார். இந்த விமர்சனத்தை பொறுப்புடன் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ் அரசியலின் வரலாற்றில் முஸ்லிம் மக்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகளும், குறிப்பாக 1990 வடக்கு முஸ்லிம் வெளியேற்றம் போன்ற பேரழிவுகளும் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவை. எந்த முற்போக்குவாதியும் அதனை நியாயப்படுத்தக் கூடாது. ஆனால் 1990 இல் நடந்த குற்றத்தை வைத்து 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முழு அரசியல் உள்ளடக்கத்தையும் குற்றவாளியாக்குவது வரலாற்றை பின்னோக்கி வாசிப்பதாகும். மலையாக மற்றும் முஸ்லிம் மக்களின் பங்களிப்பும் ஆதரவும் இத் தீர்மானத்துக்கு இருந்ததை இது இருட்டடிப்பு செய்கிறது. தலைவர்கள் சிலர் தமது சொந்த தேவைகளுக்காக ஆதரவு வழங்கினர் பின்பு பின்வாங்கிக் கொண்டனர். ஆனால் மக்கள் மத்தியில் இருந்த ஆதரவை மறைத்துப் பேசுவது வசதிக்காக வரலாற்றை மாற்றும் செயற்பாடு செய்ய முடியாது. அது தவறு என்பதை மகேந்திரன் நன்கறிவார். சுட்டிக் காட்டியும் உள்ளார். ஆனால் வசதிக்காக வரலாற்று கட்டங்களை இணைக்க முடியாது. அதன் உள் இணைவை -முடிச்சை – சுட்டிக் காட்ட வேண்டும். அதை செய்யவில்லை.
உண்மையில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தில், எந்த ஒரு மதமோ அல்லது பிராந்திய சமூகமுமோ மற்றொன்றால் ஆதிக்கத்துக்கு உட்படுத்த படக்கூடாது என்ற ஜனநாயகக் கூற்று உள்ளது. ஒரு எதிர்கால அரசில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள்,சிங்கள மக்கள் , சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் மக்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் சம உரிமையுடன் வாழ வேண்டிய சமூகக் கண்ணோட்டத்தை அது குறைந்தபட்சம் கோட்பாட்டு ரீதியாக முன்வைத்தது. அதன் நடைமுறை அரசியலில் குறைகள் உண்டு. ஆனால் குறைகளைச் சுட்டிக்காட்டுவது வேறு; அதன் முழு அரசியல் திசையையே “புறமொதுக்கும் இன தேசியவாதம்” என நிராகரிப்பது வேறு.
மலையகத் தமிழர்கள் குறித்த விமர்சனமும் நுணுக்கமாக அணுகப்பட வேண்டும். மலையகத் தமிழர்களின் அரசியல் தீர்வு அவர்கள் வாழும் பகுதிகளில் நில உரிமை, குடியுரிமை, தொழிலாளர் உரிமை, மொழி உரிமை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய அடிப்படைகளில் அமைய வேண்டும். ஆனால் அதனால் வடகிழக்கு தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமை அழிந்துவிடாது. மாறாக, லெனினிய அணுகுமுறை ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கும் தமது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. வடகிழக்கு தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமையும், மலையகத் தமிழர்களின் நில-வாழ்வுரிமையும், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு மற்றும் தன்னாட்சி உரிமையும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; அவை அனைத்தும் ஜனநாயக விடுதலைப் போராட்டத்தின் பகுதிகளாக இணைக்கப்பட வேண்டும்.
கட்டுரையில் முன்வைக்கப்படும் “வசிப்பிடம்” அடிப்படையிலான அரசியல் சிந்தனை கவனிக்கத்தக்கது. ஆனால் அதற்காக தேசிய ஒடுக்குமுறையின் உண்மையை மாற்ற முடியாது. வடகிழக்கில் வாழும் அனைவரும் குடியிருப்பாளர்கள் என்பதால் அவர்கள் ஒரே மாதிரியான அரசியல் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று கருத முடியாது. அங்கு இடம்பெற்றுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, மக்கள்தொகை மாற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, சிங்கள-பௌத்தமயமாக்கல் ஆகியவை குறிப்பிட்ட தேசிய சமூகத்தை இலக்காகக் கொண்ட ஒடுக்குமுறைகளாகவே தொடர்கின்றன. இந்த வரலாற்று உண்மைகளை “வசிப்பிடம்” என்ற பொதுவான சொல்லாடலுக்குள் கரைத்துவிடுவது தேசிய ஒடுக்குமுறையின் தனித்துவமான குணாதிசயத்தை மறைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
அதேபோல், “விடுதலையைக் காலனித்துவ நீக்கம் செய்தல்” என்ற கருத்தும் ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது. ஒரு மக்களின் அரசியல் இறையாண்மைக் கோரிக்கையை நிராகரித்து, காலனித்துவ ஆட்சியால் உருவாக்கப்பட்ட அரசின் எல்லைகளையும் அதிகார அமைப்புகளையும் இயல்பானதாக ஏற்றுக்கொள்வது உண்மையில் காலனித்துவ நீக்கமா? அல்லது அது காலனித்துவ அரசின் அதிகார நிலைகளை வேறொரு வடிவில் பாதுகாப்பதா? பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட அரச அமைப்பை மாற்றமற ஏற்றுக்கொண்டு, அதன் எல்லைகளுக்குள் மட்டுமே தமிழர் அரசியல் எதிர்காலம் கற்பனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது தானே ஒரு வகையான காலனித்துவ அரசியல் கற்பனையின் தொடர்ச்சியாகக் கருதப்படலாம்.
காலனித்துவ நீக்கம் என்பது வரலாற்றுச் சுருக்க வாதமாக குறுகி நிற்கிறது. மேற்கத்தேய பாதிப்புள்ள – அல்லது அதிகார மையம் சார் – காலனித்துவ நீக்க கதையாடல் காலனித்துவத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ‘வழிநடத்த’ முயற்சிப்பது இன்னொருவகையில் அதிகாரத்தைப் பாதுகாப்பதாகவே இருக்கிறது. இது பற்றி ஆய்வு செய்யும் மகேந்திரனுக்கு இது தெரியாத ஒன்றல்ல. ஒடுக்கப்படுபவரின் குரல் விடுதலைக் குரலாக வெளிவராமல் எவ்வாறு தனித்துவத்தை எடுக்கும்? ஆதிக்கத்தின் ‘நீக்கம்’ என்பது தன்னிச்சை தன்மை உள்ளது – அது புனிதமாக வெளிப்பட வேண்டும் எனவும் திட்டமிட்ட கட்டமைப்பு கொண்டதாக இருக்க வேண்டும் என்பதும் அதிகாரத்தை மீள் நிர்மாணிப்பதே. காலனித்துவ விடுதலை அரசியல் ஐரோப்பிய தேசிய வாதத்தின் முரண் நிலை என பார்ப்பது அபத்தம். அதேபோல் ‘தமிழ் தரப்பு’ கோரிக்கை ஐரோப்பிய காலனித்துவத்தின் தொடர்ச்சி என பார்ப்பதும் அப்பத்தமே. சுருக்குதலில் குறைபாடு இவ்வாறுதான் வெளிப்படுகிறது. இந்திய தேசிய வாதம் அன்னியபடுத்தவில்லையா? தென் ஆபிரிக்க தேசிய வாதம் செய்யவில்லையா?
தேசியவாதேமோ – தேசிய அரசோ ஒரு பண்டம் போல் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றல்ல. பண்டம் உலகமாயா மாதல் நிகழ்ந்தது போல் தேசிய வாதம் உலகமய மாகியது என பேசுவது வெறும் தர்க்க வாதம் மட்டுமே – கருத்து முதல் நிலைப்பாடே. அரசியல் பொருளாதார வரலாற்று அடிப்படையில் இதை அணுகவேண்டும். பல்வேறு நுணுக்கங்களை நாம் உள்வாங்க வேண்டும். இது பற்றிய விரிவான உரையாடலுல் நிகழ வேண்டும் – அதற்கு மகேந்திரன் மற்றும் சிந்தனையாளர் முன்வர வேண்டும். குடியேற்ற ஆக்கிரமிப்பு – ஆக்ரமிப்புக்கு உட்பட்டோர் என்ற அடிப்படையில் ‘நிரந்தர’ கட்டுப்பாட்டுக்குள் இறுகும் குழுக்கள் என்ற பார்வை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஓரளவாவது பொருந்தும். இதை உலகெங்கும் பொதுமைப் படுத்த முயல்வது தவறு. ஐரோப்பிய மைய வாதம் போல் மத்திய கிழக்கு மையவாதமும் தவறே. ஒடுக்குதல் இருக்கும் வரை அதற்கு எத்ரான குரல் எழும். வரலாற்று ரீதியாக எழுந்த குழுமம் தமது அரசியல் எதிர்காலத்தை தாமே தீர்மானிக்க கோருவது ஒருவகை தேசிய வாதமே. அவ்வகையில் தேசிய உரிமை கோரிக்கை – வாதம் – தமது தனிப்பட்ட பண்புகளுக்கு ஏற்ப மாறி பன்முகத் தன்மை கொண்டதாக இருக்கிறது. அதன் நீரோட்டத்தில் பொதுமையை தேடலாம். ‘தேசிய வாதம்’ என்ற ஒற்றைப் பார்வை தவறு. அந்த அடிப்படையில் பார்ப்பதானால் லெனினையும் ஒரு தேசியவாதியாகத்தான் பார்க்க வேண்டி இருக்கும்.
லெனின் தேசிய சுயநிர்ணய உரிமையை ஆதரித்தபோது, அவர் குறுகிய தேசியவாதத்தை ஆதரிக்கவில்லை. தன்னிச்சை விடுதலை குரலையும் அது தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கோருவதையும் ஆதரித்தார். உக்ரேனில் எழுந்த விடுதலைக் குரல் மார்க்சியத்துக்கு எதிராகவும் புரட்சிகர சக்திகளுக்கு எதிராக இருந்த போதும் ஆதரித்தார். விடுதலைக் குரலை முடக்கிய நிலையில் அவர்களை புரட்சிக்கு வென்றுவிட முடியம் என லெனின் கருதவில்லை.
அவர் சர்வதேச தொழிலாளர் ஒற்றுமையையும் வர்க்கப் போராட்டத்தையும் வலியுறுத்தினார். ஆனால் உண்மையான சர்வதேச ஒற்றுமை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை மறுப்பதன் மூலம் உருவாகாது. மாறாக, ஒடுக்குபவர் தேசத்தின் தொழிலாளர்கள் மற்றும் எதிர்பாளர்கள் தம் அரசின் அதிகாரத்துக்கு எதிராக திரள்வதன் மூலம் ஒற்றுமை நோக்கி நகர முடியும்.
தமிழர் தேசியக் கோரிக்கை தீர்க்கப்படாமல் இலங்கையில் உண்மையான வர்க்க ஒற்றுமை உருவாக முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய உரிமையை அங்கீகரிக்க மறுக்கும் எந்த தொழிலாளர் ஒற்றுமையும் நடைமுறையில் ஒடுக்குபவர் தேசத்தின் ஆதிக்கத்தை மறைக்கும் ஒரு வடிவமாக மாறும் சந்தர்ப்பம் உள்ளது. இதனால்தான் லெனின், தேசிய சுயநிர்ணய உரிமை மற்றும் வர்க்கப் போராட்டம் ஆகியவற்றை ஒன்றுக்கொன்று எதிரானதாகக் கருதவில்லை. மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமையை அங்கீகரிப்பதே உண்மையான சர்வதேசவாதத்தின் அடிப்படை என்று வலியுறுத்தினார்.
இலங்கைச் சூழலில் இதன் பொருள் தெளிவானது. சிங்கள இடதுசாரிகள் உண்மையாகவே சர்வதேசவாதிகள் என்றால், அவர்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். “நாம் எல்லோரும் ஒன்றாக வாழ்வோம்” என்ற பொதுவான கோஷம் மட்டும் போதாது; “தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர்” என்ற தெளிவான நிலைப்பாடு அவசியம்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை விமர்சிக்கலாம். அதன் வரலாற்று வரம்புகளை ஆய்வு செய்யலாம். அதன் நடைமுறை அரசியல் தோல்விகளையும் பேசலாம். ஆனால் அதனை சிங்கள-பௌத்த தேசியவாதத்துக்கு ஒப்பான ஒன்றாகச் சித்தரிப்பது தவறு. ஒரு பக்கம் அரசின் இராணுவம், அரசியலமைப்பு, நீதித்துறை, நிலக் கொள்கை, கல்வி அமைப்பு, காவல்துறை, சிறைச்சாலை, ஊடகம் ஆகிய அனைத்தையும் கையில் வைத்திருக்கும் ஆதிக்க தேசியவாதம். மறுபக்கம் தன் மொழி, நிலம், உயிர், நினைவு மற்றும் அரசியல் இருப்பைப் பாதுகாக்க முயன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய விடுதலைக் கோரிக்கை. இவை இரண்டும் ஒன்றல்ல.
எனவே, நமக்கு தேவையானது தமிழர் தேசிய உரிமையை நிராகரிக்கும் “பின் காலனித்துவ தேசிய” அரசியல் அல்ல. மாறாக, லெனினிய அடிப்படையில் தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை உறுதியாக பாதுகாக்கும், அதே நேரத்தில் சாதி ஒழிப்பு, வர்க்க நீதி, முஸ்லிம் பாதுகாப்பு, மலையகத் தமிழர் உரிமை, பாலின சமத்துவம் மற்றும் சோசலிச மறுவிநியோகம் ஆகியவற்றை முன்னிறுத்தும் ஒரு ஜனநாயக விடுதலை அரசியல் ஆகும்.
தமிழ் மக்களின் தேசியக் கோரிக்கை மற்றும் சமூக விடுதலை கோரிக்கையும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. உண்மையில் ஒன்று இல்லாமல் மற்றொன்று முழுமையடைய முடியாது. சுயநிர்ணய உரிமை இல்லாத விடுதலை முழுமையற்றது; சமூக விடுதலை இல்லாத தேசிய விடுதலையும் முழுமையற்றது.
ஆகவே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அதன் வரலாற்று வரம்புகளோடு விமர்சன ரீதியாக வாசிக்கலாம். ஆனால் அதன் மைய ஜனநாயக உண்மையை மறுக்க முடியாது: தமிழர் ஒரு தேசிய இனமாக தமது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர். அந்த உரிமையை அங்கீகரிப்பதே எந்த உண்மையான ஜனநாயக, சர்வதேசவாத மற்றும் விடுதலை அரசியலின் தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும்.
இங்கு இன்னுமொரு புள்ளியையும் சுட்டிக் காட்ட வேண்டும். தமிழ் மக்களுக்கு இருந்த – இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக் கொள்ளும் கட்டுரை ஆசிரியர் அதன் பன்முகத் தன்மையை அவதானிக்கவில்லை. ‘தமிழ் தரப்பு’ என்ற ஒட்டுமொத்த – ஒற்றை பார்வையில் அணுகுவது தவறு. வட்டுக்கோட்டை மாநாட்டின் காலத்து இளையோருக்கும் தமிழ் தலைவர்களுக்கும் இருந்த மோதலையும் அவதானிக்க வேண்டும். இத்தீர்மானம் அமிர்தலிங்கத்தால் எழுதப்படவில்லை. அதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் – அதில் என்ன இருந்தது என தனக்கு அக்கறை இருக்கவில்லை என்பதையும் அவர் பதிவு செய்துள்ளார். தற்போதும் ‘தமிழ் தேசியம்’ என்ற அடிப்படையில் இயங்கி வரும் அனைவரும் இத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் எனப் பார்ப்பதும் தவறு. உதாரணமாக பிரித்தானிய தமிழர் பேரவை இத்தீர்மானத்தின் அரசியலை ஏற்றுக் கொள்வதில்லை.
இலங்கை அரசுக்கு எதிரான எத்தகைய திட்டமிடலை நோக்கி நாம் நகர வேண்டும் எனற கருத்துக்களை இங்கு உரையாடவில்லை. எமது அரசியல் நிலைப்பாடு என்ற புத்தகத்தில் தமிழ் சொலிடாரிட்ட்டி அமைப்பு இது பற்றி விரிவாக எழுதி உள்ளளது. ‘சீர்திருத்தல்’ என்ற எல்லை தாண்டி சிந்திக்காத போக்கை நாம் கடுமையாக விமர்சித்து வருகிறோம். இது பற்றியும் விரிவான உரையாடல் தேவை என்பதையும் வலியுறுத்தி வருகிறோம்.
தனிநபர் வாதமாக குறுகாத அனைத்து வாதங்களையும் நாம் வரவேற்கிறோம். அவற்றால் மேலதிக தெளிவுகள் – அறிதல்களை அடைவது சாத்தியமாகும்.