இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -01 அரசியல் வரலாற்று பின்னணி

1,570 . Views .

இலங்கையில் நடைபெற்ற முதலாவது இனக்கலவரம் 1915 ஆம் ஆண்டு முஸ்லீம் வர்த்தகர்கள் மீது சிங்கள பேரினவாதவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொழும்பு புறக்கோட்டையில் அமைத்திருந்த ஒரே ஒரு சிங்கள பௌத்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் மகனான அநாகரிக தர்மபாலவினால் பரப்பப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதம் முதலாளித்துவதுடன் பின்னி பிணைந்துள்ளது என்பது வரலாறு

2014 ஆம் மீண்டும் முஸ்லீம் மக்கள் மீது பெரும் வன்முறையும், அவர்கள் வழிபாட்டிடங்கள் மீதும் , குறிப்பாக அவர்களின் வர்த்தக நிலையங்களை குறிவைத்தும் தாக்குதல்களும் நடாத்தபட்டன.போரினை காரணம் காட்டி சிங்கள மக்கள் மீது பொருளாதரா சுமைகளை சுமத்தி வந்தது இலங்கை ஆளும் வர்க்கம். 2009 இல் போர் முடிவடைந்த பின்னர் தமது வாழ்வாதரம் முனேற்றம் அடையும் என நம்பி இருந்தனர் உழைக்கும் மக்கள். போர் சூழல் அகன்ற நிலையிலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான நிதியினை ஒதுக்காத அரசாங்கம் மறுபக்கம் சேவைகளை தனியார் மயப்படுத்தலிலும் , அந்நிய முதலீடுகளும் என நாட்டை சுடுகாடு ஆக்கினார். மாணவர்களும் ,தொழிலார்களும் விரக்தி அடைந்து வீதிகளில் இறங்கி அரசிற்க்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்திருந்தனர்.

யுத்த வெற்றி தந்த புகழ் தமது ஆட்சியை நெடுங்காலத்துக்கு தக்கவைத்திருக்கும் என நம்பியிருந்த பேரினவாதிகளுக்கு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் தமக்கான எதிர்ப்பு கட்டமைக்க `படுவதை உணர்ந்த அரசாங்கமும் , முதலாளித்துவ வர்க்கமும் பயன்படுத்திய துருப்பு சீட்டே  பொதுபல சேனவாகும்.  இலங்கையில் உள்ள வர்த்தகம்  பெருமளவு தமிழ் பேசும் முஸ்லீம் மக்களின் கரங்களில் உள்ளதால் சிங்கள மக்கள் பொருளாதார ரீதியாக பின்னடைந்து உள்ளர்கள் என்று  உண்மைக்கு புறம்பாக துவேசத்தை சிங்கள உழைக்கும் வர்க்கம் மத்தியில் பரப்ப தொடங்கியது.

மேற்குலக நாடுகளில் உழைக்கவும் வர்க்க மக்களின் பிரச்சனைகளுக்கு முதலாளித்த சக்திகளும் , வலதுசாரிய கட்சிகளும் , அமைப்புகளும் எவ்வாறு குடிவரவாளர்கள் தான் காரணம் என  மக்களிடையே பிரிவினையை தூண்டி தம் அரசியல் மற்றும் வர்த்தக லாபங்களை பேணி கொள்கிறார்கள். அதே போல் அநாகரீகா தர்மபாலா ஊற்றி வளர்த்த சிங்கள பௌத்த பேரினவாதம் எனும் தீயில் பொதுபல சேனா எனும் எண்ணையை அவ்வப்போது ஊற்றி குளிர் காய்த்து கொள்கிறார்கள் சிங்கள முதலாளித்துவ வர்க்கமும் அவர்களின் கைப்பொம்மையான ஆட்சியாளர்களும்.

2014 இல் இத் தாக்குதல்கள் உச்சம் பெற்றிருந்த வேளை அன்றைய ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்த, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (ஸ்ரீலமுகா), அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்,  தேசிய முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள், தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களைதண்டிப்பதற்கான வாக்குறுதிகளை பெறுவதுடன் திருப்திபட்டுக்கொண்டதன் மூலம், தமது அமைச்சர் பதவிகளை தக்கவைத்துக்கொண்டனர். அரசாங்கம் பன்னாட்டு ரீதியில் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் தருணத்தில் இச்சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி சந்தர்பவாத அரசியலை செய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தயாரில்லை என்றார்.

இந்த முஸ்லிம் முதலாளித்துவத் தட்டுக்கள்,  அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் தங்களது சிரப்புரிமைகளை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன.  ஆரம்பத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக அச்சுறுத்திய ஸ்ரீலமுகா தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பின்னர்,அரசாங்கத்தில் அங்கம் வகித்தால் அதிகம் செய்ய முடியும் என்று கூறி பின்வாங்கிக்கொண்டார்.

இந்த அரசியலில் இருந்து வேறுபட்டிராத பெரும்பாலான   தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்,  தமிழ் முதலாளித்துவத்தின் அரசியலுக்கு இலாபம் தேடுவதை இலக்காகக் கொண்ட, எவ்வித அரசியல் முன்னோக்கும் அற்ற கணிப்புக்களை கொண்டவை

கொழும்பு அரசியல் அதிகாரத்திடன்  பேரம் பேசலில் ஒரு அதிகாரப்பரவலாக்கல் பொறிமுறையை  பெற்றுக்கொள்வதன் மூலம், தமிழ் மேட்டுக்குடியின்  கைகளுக்கு அதிகாரத்தை மாற்ற முயலும்  தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது பெரும் வல்லரசுகளின் கவனத்தை  மையப்படுத்த முஸ்லிம்-விரோத தாக்குதல்களை பயன்படுத்திக்கொள்ளமுயற்சிக்கின்றது. முஸ்லிம் மக்களை இணைத்துக்கொள்வதன் மூலம் கொழும்பின் மீது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்தை உக்கிரமக்கா முடியும் என நம்பியது.

இனப் படுகொலைகளுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்தின் துணைகொண்டு போர்குற்ற விசாரணையை கோரி மேற்குலகில் போராடும் , ஐக்கியநாடுகள் சபையில் சாணக்கிய அரசியல் செய்யும் பல புலம்பெயர் அமைப்புகள்  முஸ்லீம்கள் மீதான இனவாத தாக்குதல்கள் தொடர்பாக கண்டும் காணாமலே இருக்கின்றன. இலங்கை  பேரினவாதத்திற்கு  அழுத்தம் கொடுப்பதற்காக ஏகாதிபத்தியத்தின் கைகால்களை பிடித்து  ஆதரவை பெறுவதே பெரும்பாலான இவ் அமைப்புகளினது தலையாய கடமையாகும். நல்லிணக்கம் பற்றி வாய்கிழிய பேசும் புலி எதிர்ப்பு மையங்கள் புலம்பெயர்ந்து வாழும்  சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் உழைக்கும் மக்களை ஒன்று திரட்ட இம்மியளவும் முயலவில்லை. போருக்கும் இனவாதத்திற்கும் எதிரான தொழிலாளர்களையும் பரந்துபட்ட மக்களினையும் ஒன்றிணைக்க தலைமைகளாக தம்மை அடையள படுத்துவோர் முயலவில்லை.

நியூயோர்க்கில் ஐ.நா. தலைமை செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த “வடஅமெரிக்காவில் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் சங்கம்” (The Association of Sri Lankan Muslims In North America) என்ற அமைப்பு அன்றைய அமரிக்கா  ஜனாதிபதி ஒபாமாவுக்கு வேண்டுகோள் விடுக்கும் ஒரு கையெழுத்து பிரச்சாரத்தையும் நடாத்தினர். லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்திய, பிரித்தானிய ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு (Sri Lanka Muslim Diaspora Initiative SLMDI-UK), “முஸ்லிம்களின் பாதுகாப்புக்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு , அழுத்தங்களை பிரயோகிக்குமாறு  அன்றைய பிரதமர் டேவிட் கமரூனிடம் கோரிக்கை விடுத்தனர்.

முஸ்லீம் புலம்பெயர் அமைப்புகள் வெறுமனவே பொதுபல சேனா போன்ற அமைப்புகளுக்கு எதிராக போராடுகிறார்களே தவிர பின்னணியில் இருந்து இயக்கும் அதிகார மையங்களை எதிர்க்கும் நிலைப்பாட்டில் இல்லை

இத்தகைய அமைப்புகள்,  ஏகாதிபத்திய சக்திகளுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் அவர்களின்  குற்றங்களை மூடி மறைத்து அவற்றுக்கு சனநாயகப் போர்வையை போர்த்தும் அதே வேளை, இத்தகைய இனவாத தாக்குதல்கள் முதலாளித்துவ அமைப்பு முறையினது விளைவுகள் என்பதையும் மூடி மறைக்கின்றன.

முஸ்லீம் மக்கள் மீதான சமய, பொருளாதாரா, கலாச்சார விழுமியங்கள் மீது விழும் அடியானது நாளை தமிழ் மக்களை நோக்கி திரும்ப வெகு காலம் தேவை படாது. தமிழ் ,முஸ்லீம் தலைமைகள் சமூக நல்லிணக்கத்தை பற்றிய எந்த சிந்தனையும் இன்றி தமது நாற்காலிகளை இறுக பற்றிய வண்ணம் உள்ளனர்.  நமக்கு ஒரு இராமநாதனும் , ஒரு ஹக்கீமும் , ஒரு தொண்டமானும் போதும்.  தமிழ் பேசும் இளையோரும் , மக்களும் முற்போக்கு தளத்தை நோக்கி நகர வேண்டிய தருணம் இது

 

தொடரும் …….