சொலிடாரிட்டி நாள் (Solidarity Day) 2017

777 . Views .

2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day ) கடந்த சனிக்கிழமை யுனைட் (Unite) தொழிற்சங்க தலைமை காரியாலத்தில் நடைபெற்றது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினால் ஒழுங்கு செய்யபட்ட இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகளுடன் வெவ்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

லொபி அரசியல் தான் எம்மக்களுக்கு ஒரே வழி என்போருக்கும் , வேறு வழியில்லை எனக்கூறி நல்லிணக்கம் ,சாணக்கியம் மூலம் தருவதை பெற்று வாழ்வோம் என்போருக்கும் அரசியல் உரையாடலுக்கு அழைப்பு விடப்பட்டது. மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் முன்னோக்கு அரசியல் உள்ளடங்கலான தமிழ் சொலிடாரிட்டியின்  அரசியல் நிலைப்பாடு பற்றியும் ஒரு சிறு நூல் வெளியிடபட்டது. அத்துடன் பிரித்தானிய அரசியல் நிலமை மற்றும் வட மாகண சபை பிரச்சனை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு மக்களின் கேள்விக்கும் பதிலளிக்கப்பட்டது.

தொடர்ந்து எழுத்தாளர், கவிஞர் , மொழிபெயர்ப்பாளர் மீனா கந்தசாமி அவர்கள்  எழுதிய இரண்டாவது நாவல் “When I Hit You: Or, A Portrait of the Writer as a Young Wife” பற்றிய உரையாடல் நிகழ்ந்தது. பெண்களின் மீதான வன்முறையைப் பேசுவதாக இந்த நாவல் அமைகிறது. அவரது சொந்த வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட வன்முறையின் உண்மை அனுபவத்தில் இருந்து இந்த நாவல் எழுதப்பட்டிருகிறது.  நாவலின் ஒரு சில பகுதிகளை அவர் வாசித்துக் காட்டிய பொழுது, கேட்டுக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு  மிகுந்த அதிர்ச்சியாகவும், வலி மிகுந்ததாகவும் இருந்தததை  காணக்கூடியதாகவிருந்தது.

ஒரு மணி நேர மதிய நேர இடைவேளையின் பின்னர் தொழிற்சங்கங்கள் பங்கு கொண்ட  கலந்துரையாடல் இடம்பெற்றது. BFAWU, UNISON, UNITE, NUT, போன்ற தொழிற்சங்கங்கள், உழைக்கும் மக்கள் இங்கு எதிர்கொள்ளும்  பிரச்சனைகள் பற்றியும் , தாயகத்தில் இடம்பெறும் அடக்குமுறைகள் பற்றியும் தமது  கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் அகதிகளின் உரிமைக்காகவும், இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடை செய்யும் தொழிலாளர் கட்சியின் கொள்கைக்காவும் எவ்வகையில் தொழிற்சங்கங்கள் பங்களிப்புச் செய்யும் என்பது பற்றிய மக்களின் கேள்விகளுக்கு தொழில்சங்க உறுப்பினர்கள் தமது பங்களிப்பு பற்றி விரிவாக விளக்கமாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் குர்திஸ் மக்கள் அமைப்பும் கலந்துகொண்டமை மிக முக்கியமான அம்சமாகும்..

இறுதியாக அகதிகள் உரிமைகளுக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த உரையாடலில் அகதிகள் சட்ட ரீதியாக இன்று எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக உரையாடப் பட்டது. பிரித்தானிய நாட்டின் தற்போதய அரசியல் நிலைமைகளால் விசா பற்றிய முடிவுகள் எடுக்கப்படுகின்றமை கால தாமதப்படுவதை எவ்வாறு எதிர் கொள்வது மற்றும் இலவச சட்ட சேவையினை பயன்படுத்தல் பற்றிய கேள்விகளுக்கு பரிஷ்டர் சிவானி ஜெகராசா பதிலளித்தார்.

போராட்டச் சக்திகள், தொழிற் சங்கங்கள், பல்வேறுபட்ட மக்கள் அமைப்புகள், பல்லின மக்கள் என பல தளங்களில் இணைந்து இயங்க கூடிய நட்புச் சக்திகளை ஒரு நாளில் ஓன்று கூட வைக்கும் முயற்சியாக இன் நிகழ்வை வருடா வருடம் நடத்தி வருகிறது தமிழ் சொலிடாரிட்டி. இதன் மூலம் எமது போராட்ட அரசியலின் செல்வாக்கை விரிவு படுத்தி வரக் கூடியாதாக இருப்பது குறிப்பிடத் தக்கது.