லண்டன் ஊர்வலம் -அகதிகள் உரிமை அமைப்பும் இணைந்து போராட்டம்.

1

கடந்த சனிக்கிழமை லண்டனில் நடந்த பெரும் ஊர்வலத்தில் அகதிகள் உரிமைகள் அமைப்பும் பங்கு கொண்டது. தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரேமி கோர்பினின் கொள்கைகளுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தும் அந்தக் கொள்கைகள் தடுக்கப் படுவதற்கு எதிராகவும் தெரசா மேயின் கன்சவேட்டிவ் கட்சிக்கும் அவர்தம் கொள்கைகளுக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனில் திரண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு மற்றும் அகதிகள் உரிமைகள் அமைப்பு ஆகியன இந்த ஊர்வலத்தில் பங்கு பற்றி இருந்தன. அகதிகள் உரிமைகள் அமைப்பின் முக்கிய கோரிக்கைகள் இந்த ஊர்வலத்தின் போது பிரச்சாரம் செய்யப் பட்டது. வேலை செய்யும் உரிமையை வழங்கு – தடுப்பு முகாம்களை மூடு ஆகிய கோரிக்கைகளுக்கு பலரும் தமது ஆதரவை வழங்கினர். தமது அமைப்பு ரீதியாக கலந்து கொள்ளாத போதும், மக்கள் கோரிக்கைக்கு ஆதரவான மற்றைய தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

2

இந்த போராட்ட ஊர்வலத்தில் பங்கு பற்ற முதல் அகதிகள் உரிமைகள்  அமைப்பு வெளியிட்ட சிறு தகவல் பின்வருமாறு.

‘எமது உரிமைகளை போராடாமல் பெற முடியாது.

தற்போதய அரசின் கொள்கைகள் குடிவரவாளர் மற்றும் அகதிகளுக்கு எதிரானது. இந்த நிலைப்பாட்டை நாம் மாற்றுவதானால் இந்தக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டச் சக்திகளுடன் நாம் இணைய வேண்டும். நாம் இந்தக் கொள்கைகள் சரி என ஏற்றுக் கொள்ளவில்லை என்ற செய்தியைப் பதிய வேண்டும்.

நாம் போராட்டச் சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை உட்துறை அமைச்சுக்கு தெரியப் படுத்துவது அவசியம். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் சரியான கொள்கைப் பக்கம் நிற்பது மட்டுமின்றி எமது கோரிக்கைகளுக்கான ஆதரவையும் நாம் திரட்ட முடியும்.

அகதி கோரிக்கையாளர் வேலை செய்யும் உரிமையை வழங்கு – தடுப்பு முகாம்களை மூடு போன்ற கோரிக்கைகளுக்கு ஆதரவு தரும்படி நாம் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளோம். அகதிகள் உரிமை இயக்கத்திற்கு ஆதரவும் உதவியும் திரட்ட உள்ளோம். அகதிக் கோரிக்கையாளர்கள் எதிர் கொள்ளும் பல இன்னல்கள் இந்த நாட்டு மக்கள் பலருக்கு தெரியாது. எமது பிரச்சார நடவடிக்கைகள் மூலம் எமது நிலவரத்தை விளக்குவது மட்டுமின்றி – அதை மாற்றுவதற்கான பெரும்பான்மை மக்கள் ஆதரவையும் திரட்ட உள்ளளோம்.

ஆதரவானவர்களின் கையெழுத்து மற்றும் விபரங்கள் திரட்டுவது மட்டுமின்றி முடிந்தவர்க அகதிகள் உரிமை இயக்கத்தில் இணைந்து எமது கோரிக்கைகள் வெல்ல உதவுமாறும் கோர இருக்கிறோம். இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க திரண்டு வரும்படி கேட்டுக் கொள்கிறோம்.’

3

இத்தகைய போராட்ட நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த நிலை தற்போது மாறத் தொடங்கி இருப்பது கவனத்துக்குரியது.

தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் போராட்டச் சக்திகள் ஏன் இத்தகைய அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனச் சிந்திக்க வேண்டும்.

ஆட்டம் காணும் தெரசா மேயின் தொங்கு பாராளுமன்றம் முதல் செயற்படுத்திய கடமை என்ன? இங்கிலாந்தில் வாழும் ஐரோப்பியர்களின் உரிமையை பறித்துள்ளனர். குடும்பம் மற்றும் வெவ்வேறு தொடர்புகளுடன் இங்கு வலது வருகிறார்கள் என்ற எந்தக் கவலையும் இன்றி அவர்களை பிரக்சிட் பேச்சுவார்த்தைக்கு பகடைக் காயாக பயன்படுத்தி வருகிறார்.

இதேபால் அரச ஊழியருக்கு ஊதியம் ஒரு வீதத்துக்கு மேல் உயர்த்தக் கூடாது என்ற முடிவும் உடனடியாக எடுக்கப் பட்டுள்ளது. பெரும் கார்பரேட்டுகளுக்கு வரி குறைப்பு நிகழும் அதே தருணம் தொழிலாளர்களும் வரியா மக்களும் வெளிநாட்டவர்களும் பழிவாங்கப் படுகின்றனர்.

குடிவரவை ஒரு லட்சத்துக்கும் குறைவாக குறைப்பேன் எனத் தீர்மானம் எடுத்திருந்த தெரசா மே தற்போது அத்தகைய கொள்கையை நிறைவேற்ற முடியாத நிலையில் பலவீனமடைந்துள்ளார். இருப்பினும் குடிவரவாளர்கள் மற்றும் இங்கு வாழும் வெளிநாட்டவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோரின் உரிமைகளைத் குறி வைத்துத் தாக்குவதை தனது முக்கிய கொள்கையாக கடைப்பிடித்து வந்தவர் இவர்.

இவரது கொள்கைகள்  கடுமையாக எதிர்க்கப் படாமல் எமது உரிமைகளை நாம் நிலை நாட்ட முடியாது. தேர்தலில் இவருக்கு எதிரான வாக்குகள் அதிகமாக பதிவாகி இருந்த பொழுதும் – மில்லியன் கணக்கானவர்கள் மக்களை முதன்மைப் படுத்திய கொள்கைகளுக்கு வாக்களித்திருந்த பொழுதும் அவர்கள் பற்றிய எந்த அக்கறையும் இன்றி பெரும் வியாபர நல கொள்கைகளை வலிந்து திணிக்கும் முயற்சியை செய்து வருகிறார் தெரசா மே.

இதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மக்கள் விரோத கொள்கைகளுக்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தே ஆக வேண்டும் என விரும்புவோர் யூலை சனிகிழமை முதலாம் திகதி ஓன்று கூடினர். டோரி அரசே வெளியேறு என்ற கோசத்துடன் அவர்கள் கலந்து கொண்டனர். தொழிற்சங்கங்கள் மற்றும் பல போராட்ட அமைப்புக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டன.

மேயின் அரசுக்கு எதிரான முதலாவது முக்கிய எதிர்ப்பாக இது சொல்லப் படுகிறது. ஆனால் இந்த எதிர்ப்பு இத்தோடு நின்று விடப் போவதில்லை. இது ஒரு தொடக்கம் மட்டுமே –இனித்தான் இருக்கு போராட்டம் என பல போராட்டச் சக்திகள் உறுதி கொண்டுள்ளதை பார்க்கக் கூடியாதாக இருந்தது.

[robo-gallery id=”1997″]