இலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -02 – புத்துருவாக்கம் பெறும் பொதுபல சேனாவும் (BBS) மதவாதமும்.

மஹிந்த அரசு வீழ்த்தப்பட்ட பின்னர் மைத்திரி-ரணில் ஆட்சி காலத்தில் பொதுபல சேனா (BBS) தமது இருப்பை காட்டுக்குவற்காக  தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் மீது இனவாத தாக்குதலை நடாத்தியதன் ஊடாக புத்துயிர் பெற்றது. தேசிய கலந்து உரையாடலுக்கான அமைச்சரான மனோ கணேசனின் அலுவலகத்துக்குள் புகுந்து அடாவடித்தனங்களை காட்டினார் பொதுபல சேனாவினர். அநாகரீக தர்மபாலாவின் வாரிசுகளிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

 

பொதுபல சேனா என்பது வெறும் முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பு என்ற ரீதியில் புரிந்து கொள்ள முடியாது. பர்மாவில் முஸ்லிம்களை படுகொலை புரியும் 969 என்னும் அமைப்போடு பொதுபல சேனாவுக்கு நேரடி தொடர்புகள் உண்டு. அதுமட்டும் அல்லது BBS ஆனாது 2009 ற்கு பின்னர் அதிகாரகளின் துருப்பு சீட்டே ஆகும். அரசியல் , பொருளாதார ரீதியாக முஸ்லீம் மக்களின் பலத்தையும் கட்டமைப்பையும் உடைத்தலையே சிங்கள பேரினவாதம் BBS ஊடக  நிகழ்த்த முற்படுகிறது.

 

ஜாதிக ஹெல உருமய” என்ற புத்த பிக்குகளின் அரசியல்  கட்சியில்  செயல்பட்டு கொண்டிருந்த, கலகொட அத்தே ஞானசர தேரர் மற்றும் கிரம விமலஜோதி ஆகிய இரு பிக்குகளும் ஜதிக ஹெல உருமய தீவிரமாக பௌத்தர்களுக்காக செயல்படவில்லை எனக்கூறி  அதிலிருந்து பிரிந்து பொது பல சேனா என்ற புதிய அமைப்பை உருவாக்கினர். “புத்த தத்துவங்களைக் காப்பது” என்ற நோக்கத்தை முதலில் கூறினாலும் பின்னர் இலங்கையைச் “சிங்கள புத்த தேசமாக” மாற்றுவதையே தம் பிரதான நோக்கமாக அறிவித்தனர் .

2011 மே மாதம் 15 ஆம் தேதியே கிரம விமலஜோதியின் தலைமையில் புத்த கலாச்சார மையத்தை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே திறந்து வைத்திருந்தார். தற்போது பொது பல சேனாவின் தலைமையகமும் இந்தப் புத்த கலாச்சார மையத்திலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மந்திராவில்தான் இயங்குகிறது.

மகிந்த அரசோ , மைத்திரி – ரணில் அரசோ தமது ஆட்சியை தக்க வைக்க  சிங்கள பேரினவாதத்தை சட்டைப்பையில் கொண்டே திரிகிறார்கள்.  பொருளாதார சுமையாலும் , அடிப்படை தேவைகளுக்கான சேவைகள் மிகவும் மோசமடைந்து செல்வதாலும் மக்கள் அரசுக்கு எதிராக செயற்பாடாமலும் இருக்க BBS மீன்டும் களமிறக்கபட்டுள்ளது.

பல குற்ற வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்து எவ்வித எதிர்ப்பும் இன்றி பிணை பெற்று வெளியேறுகிறார். நான்கு படை அமைத்து தீவிரமாக இயங்கிய போலீசாரோ வாய்மூடி நிற்கின்றனர்.

நல்லிணக்க அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க UKIP இன் முனைய தலைவர் நைஜில் வராஜ் யையும் ,  Party for Freedom இன் ஸ்தாபகர் மற்றும் தலைவர் கீர்ட் வில்டர்ஸ் ஐயும் உதாரணம் காட்டி BBS அவசியமானது என்கிறார். மேலும் குஜிராத்தில் மோடியின் ஆட்சி காலமே அம் மக்களுக்கு பாதுகாப்பை அளித்தது என வேதாந்த BBS நடவடிக்கைகளை வரவேற்கின்றார். நீதி அமைச்சரான விஜயதாஸ ராஜபக்‌ஷ ISIS போன்ற தீவிரவாத கும்பல்கள் இலங்கையில் உருவாகாமல் தடுப்பதற்கு டொனால்ட் டிரம்ப் போன்ற ஒருவர் வேண்டும் என்கிறார். அதவாது 2020 இல் நடைபெற உள்ள தேர்தலில் கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கும் முன்னெடுப்புகள் பலமடைகிறது எனலாம்.

நீதிமன்ற அவமதிப்பு உட்பட பல வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ஞானசார தேரர் சரணடைந்து மூன்று மணித்தியாலங்களில் பிணையில் விடுதலையாகிறார். 2015 தை 8ஆம் திகதி தொடக்கம் 2017 மே மதம் வரை 195 சம்பவங்கள் கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் மீதும் 20 கிறிஸ்தவ மக்கள் மீதான வன்முறை சம்பவங்களும்

தம்மிடம் பதியப்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய கிறிஸ்தவ கூட்டணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. மதம் சார்ந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கட்டில் அமர்ந்தவர்கள் கட்சிகளுக்குள் நல்லிணக்கம் காணுதலில் மூழ்கி போனார்கள்.

பௌத்தர்களும் , இந்துக்களும் சேர்த்து முஸ்லீம் மக்களை விரட்டி அடிப்போம் என்கிறார்கள் BBS. சிவசேனாவுடன் சேர்த்து இந்துக்கள் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும் என்கின்றனர் சிலர். கத்தோலிக்க தேவலயங்கள் ஒன்றும் தாக்க படவில்லை என்கிறார் ஆண்டகை மலகம் ரஞ்சித். எப்போதெல்லாம் பொருளாதார சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுகிறதோ அப்போது மக்களை துவேச நடவடிக்கைகளை தூண்டி தம் நலன் காத்துகொள்கிறார்கள்

பொதுபல சேனாவோ , சிவசேனாவோ ஒருபோதும் மக்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வல்ல. இனவாதத்தால் இனவாதத்தை வெல்லமுடியாது.