மீண்டும் லண்டனில் போர் குற்றவாளி பிரியங்கா பெர்னாண்டோ வழக்கு தொடரப்பட்டது.

பிரியங்கா பெர்னாண்டோ குற்றம் செய்தது நிருபிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதை அறிவோம். இந்த தீர்ப்புக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் அழுத்தத்தால் வழக்கு மேல்முறையீடு செய்யபட்டது. பிரித்தானியா ரோயல் கோர்ட்டில் இந்த வழக்கு 2-12-2020 அன்று நடந்தது. கொரோனா அடைப்பு காரனத்தால் இவ்வழக்கு ஆன்லைன் மூலம்  நடை பெற்றது. இதில்  சாட்சிகள் உட்பட  தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர், நாடுகடந்த அரசாங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் இந்த வழக்கின் தீர்ப்பின் படி, அமைதியாக போராடிய தமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுவித்த  priyanka fernando வெஸ்ட்மின்ஸ்டர்  மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றவாளி என நிருபிக்கப் பட்டிருந்தார். அவர் செய்த நடவடிக்கைகள் உண்மையில் அவமதிப்புக்குரியவை என உறுதிப் படுத்தப்பட்டிருந்தது. அவருக்கு அபராதமாக   ​​£4000  செலுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. ஆயினும் பிரியங்கா  பெர்னாண்டோ  எதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்ட உடன்  அவர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டதும் நிகழ்ந்தது. இவ்வழக்கு சார்பாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கம் இதை கண்டு கொள்ளவில்லை. மாறாக பிரியங்கா பெர்னாண்டோவுக்கு மேலதிக பதவிகளை கொடுத்து அவரை காத்து வருகிறது  இலங்கை அரசாங்கம். ஒடுக்கப்படும் மக்கள் தொடர்ந்து நியாயமற்று அநீதிகளையே சந்தித்து வருகின்றனர் என்பதை வெளிப்படையாக காண முடிகின்றது.  

மீண்டும்  மேல்முறையீடு செய்யபட்ட வழக்கை பாதிக்கபட்ட மக்கள் சார்பாக  பிரித்தானியா சட்டதரணி Paul Heron போன்றோர் முன்னெடுத்து சென்றனர். பெர்னான்டோ சார்பாக Hugh Southey QC வாதாடினார். 

பெர்னான்டோ சார்பாக வாதிட்டவர்- ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்ட தீர்ப்பில் தவறுகள் இருப்பதாக சொல்லி மீண்டும் பழைய வாதங்களையே முன்வைத்தார். ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் தொழில்நுட்ப தவறுகள் மற்றும் தாமதம் சுட்டிக்காட்டப்பட்டு – பிரித்தானியா சட்ட திட்டங்களை வைத்து விவாதம் வைக்கப்பட்டது. இந்த வழக்கு நிராகரிக்ப்பட்டிருக்க வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.  

ஏற்கனவே நடந்து முடிந்த வழக்கில்  இலங்கை தூதரகத்தில் பிரியங்கா பெர்னாண்டோவுக்கு கொடுக்கபட்ட வேலைகள் சுட்டிக் காட்டப் பட்டிருந்தது. இவரது பிரதானமான வேலை புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை கண்காணிப்பதும் தூதரகத்தை பாதுகாப்பதுமாக இருந்தது அறிவோம். ஆனால் இவர் பிரித்தானியா சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்படவில்லை என கூறப்பட்ட நிலையில் அவர்மேல் இந்த வழக்கு தொடரப் பட்டது.

அவர் தனது கொடுக்கபட்ட வேலையை விட்டு விட்டு ஏன் போராட்டக்காரர்கள் மீது கழுத்தறுப்பு செய்கை செய்தார் என கேட்ட போது, போராடிய மக்கள் அவரை கோபத்தை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டதாகவும், தன்னை பாதுகாக்க முயன்றதாகவும் அவர் தரப்பினர் வாதிட்டார்கள்.  ஒருவரை தாக்க வந்தால் தன்னை பாதுகாக்க பிரித்தானியா சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதையே பெர்னாண்டோ செய்ததாக வாதிடப்பட்டது.

மக்கள் அமைதியான முறையில் போராடியிருந்தார்கள் – அதற்கான காணொளிகள் ஆதாரங்கள் என பலதடவை வெளிகாட்டியிருந்தோம் பெர்னாண்டோ சட்டத்துக்கு புறம்பாக பிரித்தானியாவிலும் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்த புள்ளிகள் கோர்டில் வாதிடப்பட்டது.

இவ்வழக்கு முடிவுகள் ஒரு மாதங்களில் வெளி வருமென எதிர் பார்க்கப்படுகிறது. பெர்னாண்டோ வழக்கை முடிவுக்கு கொண்டு வர முடியாதபடி இழுத்தடிப்பு செய்வதில் இதுவரை வெற்றி கண்டுள்ளது இலங்கை அரசு. எத்தகைய இழுபறி நடந்தாலும் விடாது போராடுவதில் தமிழ் செயற்பாட்டாளர்களும், தமிழ் சொலிடாரிட்டியும்  மிக உறுதியாக இருகின்றனர்.

 

Mathan@tamilsolidarity.org