தொழில் சங்கங்களில் இணைக!

625 . Views .

தொழில் சங்கங்களில் இணைவதனால் என்ன பயன் என்ற கேள்வி எம்மில் பலருக்கும் உண்டு.

எமது உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்த பலத்தை தொழில் சங்கங்கள் தருகின்றன.

ஒன்றாக இணைந்து எமது உரிமைகளுக்காக போராடுவதன்  மூலம் மிகவும் சாதகமான பணி நிலைமைகள் மற்றும் பிற தொழில் சார் நன்மைகளை அடைய முடியும்.

ஒன்றிணைந்து போராடுதல்  என்பது தொழிலாளர் சங்கத்தின் அடிப்படை அணுகுமுறையாகும்.  ஒரு நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்கள் ஒரு குழுவாக தாம் அன்றாடம் எதிர் கொள்ளும் தொழில் சார் பிரச்சனைகள் அசௌவ்கரியங்களை முன் வைக்கும் போது மிகவும் பலப்படுகிறது. அதேசமயம் பேரம் பேசும் சக்தியையும் அதிகரிக்கின்றது.

உதாரணமாக, ஒரு தொழிலாளி தனது தொழிற்சாலையில் ஒரு குறிப்பிட்ட புதிய பாதுகாப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட வேண்டும் என்று உணரக்கூடும்-

ஆனால் புதிய பாதுகாப்பு வழிமுறைகளை நிறுவ வைப்பதற்கு நிறுவனத்தைப் வற்புறுத்துவதற்கு அவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமே இருக்கலாம். அல்லது அவரது கோரிக்கையை  நிறுவனம் கணக்கில் கொள்ளாது புறக்கணிக்கலாம்.

புதிய பாதுகாப்பு வழிமுறைகளை அமுல்படுதுவதற்காக தொழிலாளர்கள் அணைவரும் ஒன்றிணைந்து அதை நிறுவுமாறு நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் நிறுவனம் பாதுகாப்பு வழிமுறைகளை அமுல்படுத்த இணங்குவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதையும்  தனிப்பட்ட தொழிலாளர்களின் குரல்களைக் கேட்க செய்வதையும், இலக்காக கொண்டு இயங்கி வருகின்றன.

தொழிற்சங்க உறுப்பினராக இருப்பதனால் இன்னுமொரு நன்மை உண்டு. உங்களுக்கு முதலாளியுடன் தனிப்பட்ட பிரச்சினை இருந்தால் அது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகள் உங்கள் சார்பாக பிரதிநிதித்துவம்  செய்வார்கள். சிக்கலைத் தீர்க்க உதவும் ஒரு தொழிற்சங்க பிரதிநிதி உங்களுக்கும் முதலாளிக்கும் இடையே ஒரு சந்திப்புக்கு வருவார்.

தொழிற்சங்க அங்கத்துவம் அற்ற ஊழியர்கள் உதவிக்காக நிறுவனத்தின் மனிதவளத் துறையைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் அந்தத் துறை அந்த நிறுவனத்தின் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஒரு முதலாளி மற்றும் முதலாளியின் மனிதவள பிரதிநிதியுடனான சந்திப்பு நியாயம் அற்ற தீர்வையே தரும் என்பதனை  உணர வேண்டும்.

வேலை செய்யும் இடங்களில் இனம், நிறம், பால், வர்க்கம் ரீதியான அடக்குதல் ஒடுக்குதல் புறக்கணிக்கப்படுதல் ஏற்றதாழ்வு போன்ற பல் வேறு பிரச்சனைகளை முறையீடு செய்யவும் அதற்கான தீர்வை பெறவும் தொழில் சங்கங்கள் உங்களுக்காக போராடும்.

இது தவிர தொழில் சங்க உறுப்பினர்கள் தொழில் சார் பிரச்சனைகளின் போது இலவச சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது உறுதி படுத்தப்பட்ட சந்தர்பங்களில் நட்ட ஈடு பெற்றுக்கொள்ளவும் உதவும்.

தொழிலாளர்களுக்கு இருக்கும் உரிமைகளை பதுப்காபது – மேலதிக உரிமைகளை வெல்வது என்பது தனிப்பட்ட முறையில் சாதிப்பது கடினம். தொழிலாளர்கள் ஓன்று பட்டு திரண்ட சக்தியாக கோரிக்கைகளை முன்னெடுப்பது அவர்களுக்கு பலத்தை வழங்குகிறது. இதனால் முதலாளி தனது இஸ்டப்படி வேலையாட்களை சுரண்ட முடியாத நிலைமை உருவாகிறது. இந்த பலம் அனைத்து வெளியாட்களுக்கும் தேவை. அதனால்தான் தொழிற்சங்கத்தில் சேரும்படி அனைத்து தொழிலாளர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் தொழிற்சங்கத்தில் சேருவதற்கு எந்த வேலைத் தளமும் தடை போடா முடியாது. உங்கள் வேலை இடத்தில் என்ன தொழிற்சங்கம் இருக்கு என தெறிந்து கொண்டு அதில் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் வேலை தளத்தில் தொழிற்சங்கள் இல்லை என்றால் எவ்வாறு இணையலாம் எந்த தொழிற்சங்கத்தில் இணைய வேண்டும் என அறிந்து கொள்ள எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். தொழிற்சங்கத்தில் இணைவதால் நீங்கள் அடையக் கூடிய பலன்கள் மிக அதிகம். இது பற்றி உரையாட எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ் சொலிடாரிட்டி தொழிற்சங்க குழுவோடு இணைந்து இந்த முக்கியமான வேலைக்கு உதவ முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

contact

admin@tamilsolidarity.org