இலங்கையின் நீரோ கோட்டாபய ராஜபக்ச  

உரோம் பற்றி எரியும்போது தன் நாட்டு மக்களை பற்றி கவலை கொள்ளாது ரோமானியப் பேரரசர் நீரோ பிடில் வாசித்துக்கொண்டிருந்தாராம். அதேபோல் பொருளாதார வீழ்ச்சி, கொரோனா நெருக்கடி, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, எரிபொருள் விலை அதிகரிப்பு , விவசாயிகளின் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம் என இலங்கை பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது இலங்கையின் நீரோ கோட்டா பிடில் வாசித்துக்கொண்டிருக்கிறார். நாட்டு மக்கள் அனைத்து  வகையிலும் அல்லல்படும்பொழுது அதிலிருந்து மக்களை விடுவிக்க காத்திரமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாது அமெரிக்காவில் புலம்பெயர் நண்பர்களுடன் அவர் விருந்து வைத்துக் கொண்டாடியது அவர் வாசித்த பிடிலின் அதி உச்சம்.

நாட்டின் நிர்வாகக் கட்டமைப்புகள் திறமையின்மை மற்றும் அக்கறையின்மையின் காரணமாக ஆட்டம் கண்டுபோயுள்ளது. பொருளாதார வீழ்ச்சி மற்றும் கொரோன நெருக்கடி போன்றனவற்றிலிருந்து நாட்டை  மீட்டெடுக்கத் தேவையான உத்திகளோ தந்திரோபாயங்களோ அற்ற ஒரு அரசாகவே கோட்டாவின் அரசு காணப்படுகின்றது. மேலும், நெருக்கடிகளைத் தவிர்க்க மக்கள் சார்பான நடவடிக்கைளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான அறிவார்ந்த அணுகுமுறை அற்ற ஒரு அரசாகவே  காணப்படுகின்றது.

ஒரு குடும்பம் (ராஜபக்ச குடும்பம்) நாட்டை பணயக் கைதியாக பிடித்துவைத்து நாட்டின் அனைத்து சாரத்தையும் பிழிந்தெடுத்து அதனை தமது சுய நலனுக்காக அனுபவிக்கின்றது. அபிவிருத்திக்குப் பதிலாக வேலைத்திட்டங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அதை வெளிநாட்டு காப்ரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றது . இதன் மூலம் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு பெரிய கொமிசன் உட்பட பல வழிகளில்  கொள்ளை லாபம் கிடைக்கின்றது. இதனால் ‘தேசத்தின் அபிவிருத்தி’ என்ற போலி  பேச்சு மூலம் நாட்டு மக்களுக்கு எந்த வித நலனும் கிட்டவில்லை. ஹம்பாந்தோட்டை பந்தய பாதைகள், கப்பல் வாராத துறைமுகம், விமானம் ஓடா விமான நிலையம் என பல உதாரணங்கள் உண்டு . இவை அனைத்தும் ராஜபக்ச குடும்பத்தின் செல்வத்தை அதிகரித்ததே தவிர நாட்டு மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன் தரவில்லை.

மக்கள் சேவையை விட சுய தேவையே ராஜபக்ச குடும்பத்திடம் மேலோங்கி இருக்கின்றது. இதற்காக அவர்கள் பயன்படுத்தும் ஆயுதமே சிங்கள பெளத்த பேரினவாதம். ஒரு பகுதி மக்களை உசுப்பேத்தி, இன முரண்பாடுகளுக்கு மேலும் எண்ணெய் ஊற்றி , அதில் குளிர் காய்கின்றது ராஜபக்ச குடும்பம். 

கொலைக் குற்றவாளியை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமித்தமை, ஒரு நாடு ஒரு சட்டத்தை அமுல்படுத்த முனைவது, அச் செயலணியின் தலைவராக எந்தவித சட்ட அறிவுமற்ற, சண்டித்தனத்துக்கு பெயர் போன சிங்கள இனவெறி ஞானசார தேரரை நியமித்தமை போன்றன சில உதாரணங்கள். ஊழல் சிக்கித் திளைக்கும் கோட்டாவின் அரசு தீர்வுகளை முன்வைப்பதை விட மேலும் விரிசல்களை முன்னெடுக்கவே விரும்புகின்றது என்பதை தெட்டத் தெளிவாக காட்டுகின்றது 

இரண்டு பெரிய அரச நிதி நிறுவனங்களில் ஒன்றான மக்கள் வங்கி மிகுந்த நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்து பல பொருட்களின் விலை பணக்கார வர்க்கத்தால் கூட வாங்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளது . வாங்குவதற்கு பணம் இருந்தாலும் கூட பொருட்கள் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. மக்களின் வாழ்வாதராம் இவ்வாறு நெருக்கடியில் இருக்க மறுபக்கத்தில் ராஜபக்ச குடும்பமோ வர்ணிக்க முடியாத அளவுக்கு ஆடம்பரத்தை அனுபவித்து வருகின்றது.  

இலங்கையின் அரசியல் பொருளாதார நிலைமையை நோக்கும்போது மிகுந்த மோசமான வங்கிரோத்து  நிலையிலேயே உள்ளது. இதனை விட மோசமான நிலைமை வரும் வரை காத்திருக்க முடியாது. இதனை விட மோசமான நிலைமை வரும்போது அது மிகத் தாமதமாகிவிடும். ஆகவே அனைத்து தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களும் அமைப்பாகத் திரண்டு கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும். 

இவ்வாறு பல வழிகளிலும் சிறுபான்மை மக்களை ஒடுக்கும் -இனத்துவேசத்தை இன்னமும் இலங்கையில் விதைக்கும்- தமிழர்களைப் இனப்படுகொலை செய்த இனப்படுகொலையாளி கோட்டாபய- காலநிலை மாற்றத்தைப் பற்றிக் கவலை கொண்டு அதற்குரிய தீர்வைக் காண COP26 மாநாட்டிற்கு வருகை தந்திருப்பது நகைப்புக்குரியது. மனித உரிமைகளை மீறிய கோட்டாபய ராஜபக்ச பிரித்தானியாவுக்கு வருகை தந்தபோது அவர் கைது செய்யப்பட்டிருக்க வேணும். இங்கிலாந்து அரசு பல போர் குற்றவாளிகளை காப்பாற்றியதுபோல் கோட்டாபய வையும் அரவணைத்துச் செல்வது கடுமையாக எதிர்க்கப்படவேண்டியதே. கிளாஸ்கோவிற்கு  வருகை தந்த கோட்டாபயவிற்கு எதிராக புலம்பெயர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருன்தனர். இனப்படுகொலையாளி, போர்க்குற்றவாளி கோட்டா கைது செய்யப்படவேண்டும், தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இலங்கையை எல்லா வகையிலும் மாசுபடுத்தும் செயலை செய்து வருபவர் கோட்டாபய. பொருளாதார நெருக்கடி – சனநாயக மறுப்பு – இனவெறி தூண்டுதல் – போன்றவை மட்டுமின்றி இலங்கைக்குள் சூழல் மாசுபடுத்தும் முதன்மை உற்பத்தியாளர்களின் நெருங்கிய நண்பராகவும் இருக்கிறார் கோட்டாபய. பூமிப்பந்தை – இந்தக் குற்றவாளிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமானால் இவர்களுக்கு எதிரான எல்லா போராட்டங்களிலும் நாம் இணைய வேண்டும். 

சூழல் மாசுபடுதலுக்கு எதிராக போராடுபவர்கள் அனைவரும் கோட்டாபயவை எதிரியாக பார்க்க வேண்டும். வரும் 6ம் திகதி சனிக்கிழமை சூழல் மாசுபடுதலுக்கு எதிரான போராட்ட நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதன் பகுதியாக லண்டனில் நடக்கும் போராட்டத்தில் தமிழ் சொலிடாரிட்டி கலந்து கொள்கிறது. போராட்டத்துக்கு முன்வரும் அனைவர் மத்தியிலும் இலங்கை அரசின் கோர – போலி முகத்தை அம்பலப்படுத்தவேண்டியது எமது கடமை. இவ்வாறுதான் எமது எதிர்ப்பை நாம் வளர்த்து பலப்படுத்த முடியும். இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ் சொலிடாரிட்டி கேட்டுக்கொள்கிறது. கலந்துகொள்ள வருபவர்கள் இசைக் கருவிகள் இருப்பின் எடுத்து வரவும். எமது எதிர்ப்புச் சத்தம் இந்த போராட்டத்தில் ஓங்கி ஒலிக்கட்டும். 

Saturday 6th November

BANK of England 

Threadneedle Street

EC2R 8AH 

London

Marching to trafalgar Square 

மேலதிக விபரங்களுக்கு மதனை பின்வரும் இலக்கத்தில் (07454 471030) தொடர்பு கொள்ளுங்கள்.