தீயில் இலங்கை

860 . Views .

ஸ்ரீநாத் பெரேரா, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி

இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல வாரகால போராட்டங்களுக்குப் பிறகு நேற்று ராஜினாமா செய்வதற்கு சற்று முன்பு பின்வரும் கட்டுரை எழுதப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரனைப் பின்பற்றி பதவியை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் அவர் தொடர்ந்தும் இடத்தில் இருக்கிறார்.

இலங்கையில் நேற்று, மே 9, கொழும்பில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற போராட்டத்தின் இரண்டு இடங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் குண்டர்கள் தாக்கியதை அடுத்து, தீப்பற்றி எரிந்தது. அவர்கள் ஆண்களையும், பெண்களையும், புத்த துறவிகளையும், கிறிஸ்தவ பாதிரிகளையும் இரும்பு மற்றும் மரக்கட்டைகளால் ஈவிரக்கமின்றி தாக்கினர்.

பிரதமர் மற்றும் அவரது சகோதரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரையும் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை, தொழிற்சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் தீவின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தியது. எவ்வாறாயினும், மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமர் பதவி விலக  மறுத்ததால், அவர் பதவி விலக வேண்டும் என்று மேலும் பல கோரிக்கைகள் எழுந்தன. பல மாதங்களாக எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் பால் பவுடர் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள வெகுஜன அதிருப்தியைத் தணிக்க, புதிய பல கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை மிதக்க அனுமதித்ததன் பின்னர் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.

மஹிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை பதவி விலகுவார் என ஊகங்கள் நிலவிய போதிலும், கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தனது ஆதரவாளர்களை வரவழைத்து உரையாற்றினார். தாய்நாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும், அவர் பதவி விலக வேண்டுமா என்றும் தனது ஆதரவாளர்களிடம் கேட்டார். கூட்டம் வேண்டாம் என்று கூச்சலிட்டது, ராஜபக்ஷ அவர்களைக் கைவிடமாட்டேன் என்று கூறி அவர்களை உற்ச்சாகப்படுத்தினர். இந்த ஆதரவாளர்கள் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பொல்லுகளுடன் வெளியேறி, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கத் தொடங்கினர். இரண்டு வாரங்களுக்கும் மேலாக அங்கு இருந்த போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்களுக்கு அவர்கள் தீ வைத்தனர்.

இந்த குண்டர்கள் அதன் பின்னர், கொழும்பின் மையத்தில், ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு முன்னால் உள்ள எதிர்ப்பின் முக்கிய தளத்திற்குச் (Gotta Go gama) சென்று, அங்கிருந்த போராட்டக்காரர்களை  தாக்கத் தொடங்கினர். காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோது அவர்கள் இரக்கமின்றி தாக்கினர்.

அனைத்து ஊடக சேனல்களும் நேரலையில் செய்திகளை ஒளிபரப்பியதால், கொழும்பிலும் வெளியூர்களிலும் ஏராளமான மக்கள் ஆளும் கட்சியுடன் இணைந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்த வந்தனர்.

இளைஞர்கள் வீதிக்கு வருகிறார்கள்

அந்த குண்டர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளைப் பிடிக்க கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் இளைஞர்கள் வீதிகளில் இறங்கினர். பிடிபட்டவர்களில் சிலர் ஆடைகளை அவிழ்த்து பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் உள்ள ஏரியில் போட்டுள்ளனர். மற்ற போராட்டக்காரர்கள் பேருந்துகளைத் தாக்கினர் மற்றும் சில வாகனங்கள் தீவைக்கப்பட்டன. சுமார் 50 பேருந்துகள் சேதமடைந்தன.

நேற்று மாலையில், கிராமப்புறங்களில் உள்ள நகரங்களில் ஏராளமான மக்கள் திரண்டு, ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்தனர். வன்முறை காரணமாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஹர்தாலால் நாடு முடக்கப்பட்டதை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மூன்று நாட்களுக்கு முன்னர் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார். அமைதியின்மையை அடக்கும் வகையில், திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ‘சட்டம் ஒழுங்கை பராமரிக்க’ பாதுகாப்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குண்டர்களின் தாக்குதலை கண்டித்தும், ஜனாதிபதி பதவி விலகுமாறும் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த காலவரையற்ற வேலைநிறுத்த அழைப்புக்கு தொழிலாளர்களின் பதில் புதன்கிழமை காலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரே தெரியவரும்.

அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டங்களுக்கு மத்தியிலும் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை இந்தப் பிரச்சாரம் தொடரும் என போராட்டக்காரர்கள் உறுதியாக உள்ளனர்..