இன்று USP- சோஷலிச கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை

336 . Views .

நாடு இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் இப்போது ஊழல் நிறைந்த முதலாளித்துவ பாராளுமன்றத்தை செல்லாததாக்கியுள்ளது. புதன் கிழமைக்குள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம் ராஜினாமா செய்வோம் என்று வழங்கிய வாக்குறுதி போதாது. ஜனாதிபதி மீண்டு வருவதற்கு அல்லது மீண்டும் தனது ஆதரவு சக்திகளை ஒருங்கிணைக்க நேரம் வாங்க முயற்சிக்கிறார் என்பதைப் பலர் உள்ளுணர்வாக புரிந்து கொண்டுள்ளனர். எனவே, அவர் பதவி விலகும் வரை, ஆக்கிரமிப்பைத் தொடர மக்கள் போராட்ட இயக்கம் முடிவு செய்தது சரியே.

பழைய ஆட்சி மற்றும் ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளும் நிராகரிக்கப்பட வேண்டும். ஏற்கனவே அமெரிக்கா/மேற்கு/இந்தியா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகள் தங்களது உள்ளூர் கூட்டாளிகளுடன் சேர்ந்து அதிகாரத்தின் மீது தங்கள் பிடியை தக்கவைத்துக்கொள்ள அனைத்து கட்சி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றன. ‘பழைய’ அரசியல்வாதிகளை ‘புதியவர்கள்’ என்று மீண்டும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.
போராடும் மக்களின் பார்வையில் இருந்து தற்போதைய நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி சிந்திக்க அவர்கள் எவருக்கும் தகுதியோ அல்லது யோசனையோ இல்லை. அவர்களில் பெரும்பாலானோர் ஜூலை 9ஆம் தேதி வரை கோட்டாபய மற்றும் ரணில் இருவருடனும் கைகோர்த்துக் செயற்பட்டு வந்தனர்- மேலும் தொழிலாளர்கள் விவசாயிகளின் இளைஞர்கள் மற்றும் ஏழைகள் மீது கடுமையான தாக்குதல்களைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத்தான் இவர்கள் இதுவரை சொல்லியும் செய்தும் வந்திருக்கின்றனர். நாடுகளின் நிலங்களையும் வளங்களையும் கழுகு முதலாளிகளுக்கு விற்க அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கின்றனர் – அதன்மூலம் தங்கள் பைகளை நிரப்புகிறார்கள்.
இப்போது என்ன மாறிவிட்டது? எந்த வகையில் இவர்கள் மாறினார்கள்? இப்போது என்ன மாற்றை முன்வைகிறார்கள்? இவர்கள் மக்கள் விரோதிகள். அதனலால்தான் இவர்களிடம் இருந்து அதிகாரத்தை மக்கள் பறித்துள்ளனர். இவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க ஏன் அதிகாரம் கொடுக்க வேண்டும்? ஆனால் பழைய தலைவர்களை நீக்குவது மட்டும் பிரச்சினை இல்லை. அதிகாரத்தில் கைவைக்கத் தங்கள் ‘டர்ன்’க்காகக் காத்திருக்கும் ‘புதிய’ அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களையும் நாம் மறுக்க வேண்டும்.
இலங்கைக்கு புதிய எதிர்காலம் தேவை. இந்த மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தின் முன்மொழிவு – அல்லது அதிகாரத்தைப் பகிர்வது கூட – அவர்கள் மீள்வதற்கு மட்டுமே உதவும். ஓடிப்போகாமல் மிஞ்சி இருக்கின்ற மேல்தட்டு உறுப்பினர்கள் இப்போது ‘ஒற்றுமை’, ‘அனைத்துக்கட்சி’ அரசாங்கம் என்று பேசுகிறார்கள். ஆம், நாங்கள் ஒற்றுமை விரும்புகிறோம். உழைக்கும் மக்கள், ஏழைகள் மற்றும் சுரண்டப்பட்டவர்களின் ஒற்றுமையை விரும்புகிறோம். ஒரு சிறந்த எதிர்காலத்தை வென்றெடுக்க வேண்டும் என்கிறோம். ஆனால் சுரண்டுபவர்கள் மற்றும் ஒடுக்குமுறையாளர்களுடன் ‘ஒற்றுமை’ சாத்தியமில்லை! ஒரு மாற்று உள்ளது. மக்கள் தமது சக்தியைத் திரட்டிக் காட்டியுள்ளனர். இந்த மக்கள் அதிகாரத்தை நாடாளுமன்றத்தின் சுவர்களுக்கு வெளியே ஒழுங்கமைக்க முடியும்.
பணியிடங்களிலும் நகரங்களிலும் ஒவ்வொரு கிராமத்திலும் குழுக்களை உருவாக்கி அவற்றை பலப்படுத்துவோம். உடனடியாக மக்களுக்கு ஜனநாயக முறையில் பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த அமைப்புகள் தங்கள் பிரதிநிதிகளை தேசிய சபைக்கு அனுப்ப முடியும். அவ்வகையில் ஒரு தேசிய பேரவை உருவாக்கப்பட முடியும். இந்த இடைக்கால அமைப்பு அரச விவகாரங்களையும் கட்டுப்படுத்த முடியும். அதன்மூலம் புரட்சிகர அரசியல் நிர்ணய சபைக்கான ஜனநாயகத் தேர்தலுக்குத் தயார்படுத்த முடியும். இந்த சபை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் அபிலாசைகளையும் சரியான முறையில் பிரதிபலிக்க முடியும்.
இடைக்கால ஆட்சியில் பழைய ஆட்சியின் கூறுகள் இருக்க வேண்டியதில்லை. அது முதலாளித்துவ ஊழல் நபர்களை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், அரகலியத்(போராட்டத்) தலைவர்கள், விவசாயிகளின் தலைவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சோசலிஸ்ட்டுகள் , செயற்பாட்டாளர்கள் ஆகியோரால் உடனடியாக இதை உருவாக்க முடியும்.

இந்த அமைப்புதான் அரகலியாவின் கோரிக்கைகளை செயல்படுத்தி அதிலிருந்து மேலும் வளர்ச்சியடையும். இடைக்கால ஆட்சியானது பழைய கூறுகளை உள்ளடக்கியிருந்தால், அவர்களின் முக்கிய நோக்கம் வெகுஜனங்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதாக இருக்காது. மாறாக நேரத்தை இழுத்தடிப்பதையே அவர்கள் செய்வர். ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் தங்களைத் தாங்களே மீண்டும் ஒருங்கிணைத்து மீண்டும் தம்மைப் புதிதாக கண்டுபிடிப்பதை செய்வதற்கு அவர்களுக்கு அவகாசம் தேவை. இறுதியில் வெகுஜனங்களின் முக்கிய கோரிக்கைகளை தோற்கடிப்பர். வெகுஜனங்கள் என்ன செய்ய முடியும் என்பதை நேரில் பார்த்த பிறகு இந்த கட்டத்தில் சில சலுகைகளை அவர்கள் ஒப்புக் கொள்ளலாம். ஆனால் முழு கோரிக்கைகளை வழங்குவது அவர்களின் நலனுக்காக இருக்காது. ஊழல் பிணங்களுக்கு இடைக்கால அரசு என்ற பெயரில் மீண்டும் உயிர் கொடுக்க வேண்டாம்.

அனைத்துக் கடனையும் உடனடியாக ரத்து செய்யக் கோர வேண்டும் – மேக்ரோ கடனை திருப்பிச் செலுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். முதலாளிகள் தங்கள் செல்வத்தை எடுத்துக்கொண்டு ரகசியமாக ஓடுவதையும் நிறுத்த வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை உடனடியாக பறிமுதல் செய்து, இப்போது நடைமுறையில் உள்ளதை விட கடுமையான மூலதனக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் மட்டுமே உணவு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் உடனடிப் பிரச்சனைகளைச் சமாளிக்கப் போதுமான பணம்/வளங்களைக் கொடுக்கும். அவசர பொருளாதார திட்டத்தை செயல்படுத்த அவசர திட்டக்குழு உடனடியாக அமைக்க வேண்டும்.

தற்போதுள்ள நாடாளுமன்றம் மற்றும் பிற முதலாளித்துவ சார்பு சக்திகளில் இருந்து உருவாக்கப்பட இருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டணி அமைப்பை நிராகரிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். போராட்டத் தலைவர்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ள முற்பட்டாலும், இடைக்கால அரசில் எமக்கு என்ன அதிகாரம் வழங்கப்படும் என்று கேட்க வேண்டும்? நாம் என்ன பங்கு வகிக்கிறோம்? நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை பாராளுமன்றம் முழுமையாக ஏற்றுக்கொள்கிறதா? சமரச அடிப்படையில் எந்த ஒப்பந்தத்திலும் நாம் நுழையக்கூடாது. தேசிய ஒற்றுமை அரசு என்ற பெயரில் இலங்கை மக்களையும் உலக மக்களையும் ஏமாற்றி மறைமுகமாக அழுகிய முதலாளித்துவ நடைமுறையைக் காப்பாற்றுவதே அவர்கள் நோக்கம்.
வெற்றி அரகலியவுக்கு