அரகலியாவிடம் தமிழ் சொலிடாரிட்டியின்  வேண்டுகோள்

லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் இலங்கை நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ் சொலிடாரிட்டி ஒழுங்கு செய்த போராட்டம்
398 . Views .

தற்போதைய மக்கள் இயக்கம் சார்பான கோரிக்கைகளை தமிழ் சொலிடாரிட்டி முன்வைத்திருந்தது (பார்க்க பின் இணைப்பு) இந்த வேண்டுகோள் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் பங்களிப்பு சார்பானது.

நாங்கள் யார்:

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த காலத்தில் அனைவரின் அனைத்து ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடும் நோக்கத்துடன் தமிழ்சொலிடாரிட்டி  (TS) உருவாக்கப்பட்டது.

யுத்தம் மற்றும் போர்க்குற்ற விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை  TS முன்வைத்து வந்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை என்பது பொருளாதார மற்றும் ஜனநாயக கோரிக்கைகளுடன் தொடர்பு பட்டது. பல ஆண்டுகளாகத் தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறைகள் இந்தக் கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. எனினும் இந்தக் கோரிக்கை எந்த வகையிலும் சிங்கள மக்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல. தமிழ்த் தேசியம் என்பது  சிங்களமக்களை விரோதிகளாக பார்ப்பது  என்று கூறும் சில  தமிழ்த் தலைவர்களை   தமிழ் சொலிடாரிட்டி  நிராகரிக்கின்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் முழு ஜனநாயக உரிமைகளுக்காக TS போராடி வருகிறது. இலங்கையிலும், பிராந்தியத்திலும் உள்ள அனைத்து வலதுசாரி கட்சிகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம். தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு ஐ.நாவுடனோ அல்லது எந்தவொரு மேற்குலக அரசாங்கத்திடமோ நாம் வேண்டுகோள் விடுக்கவில்லை. அதனடிப்படையில் எந்த ஒரு தீர்வையும் கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. அனைத்து சமூகங்களிலும் உள்ள தொழிலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் முற்போக்கு பிரிவினர் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நாங்கள் எப்போதும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இத்தகைய போராட்டத்தின் மூலமே அனைவரும் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

தற்போதைய போராட்டம் பற்றி நாம் கூறுவது:

தற்போதைய போராட்டத்திற்கு தமிழர் சொலிடாரிட்டி தனது  பூரண ஆதரவை வழங்கியதுடன், தமிழர்களை இந்த போராட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. போராட்டத்திற்கு ஆதரவாக பிரிட்டனில் நடந்த முதல் சொலிடாரிட்டி  போராட்டம் TS ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது. நாங்கள் ஜூலை 9ம் திகதி அன்றும் லண்டன் இலங்கை தூதரகத்துக்கு முன்பு ஒரு போராட்டத்தை    ஏற்பாடு செய்தோம். அத்தோடு மற்றைய ஆதரவு  போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்கிறோம். இந்த போராட்டங்களுக்கு  ஆதரவை வழங்கும் அதே வேளையில், பல விடயங்கள் குறித்தும் கவலை தெரிவித்துள்ளோம். அனைத்து சமூகத்தினரின் கோரிக்கைகளையும் உள்ளடக்கி போராட்டக் கோரிக்கைகள் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக  தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவிக்க  கோரி வடக்கில் தாய்மார்கள் இரன்டு  வருடத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே போல் பொதுவாக தமிழர்களால் முன்வைக்கப்படும் பல கோரிக்கைகள் அடிப்படை ஜனநாயகக் கோரிக்கைகள்,  இவை அரகலியவின்  கோரிக்கைகளில் இணைக்கப்பட வேண்டும்.

கொடி பிரச்சினை

தமிழ் சொலிடாரிட்டி ஒரு இடதுசாரி அரசியல் அமைப்பு. அனைத்து தேசிய கொடிகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தவில்லை. இருப்பினும் இந்தக் கொடியை போராட்டத்தின் அடையாளமாகவும் அடக்குமுறை இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாகவும் பயன்படுத்துபவர்களை நாங்கள் எதிர்ப்பதில்லை. அதற்கான உரிமையை மதிக்கிறோம். இலங்கைக் கொடியை நாங்கள் நிராகரிக்கிறோம் – அது அரசியல் உயரடுக்கின் சின்னம். இந்தக் கொடியின் கீழ் பல மோசமான கொடுமைகள் நடந்துள்ளன. அதே சமயம் இந்தக் கொடியை ஏந்திய பலருக்கு வெவ்வேறு அர்த்தங்கள் இருப்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும் ஒரு புதிய ஐக்கிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் புதிய போராட்டச் சின்னங்களைக் கண்டறியுமாறு சிங்கள தமிழ் செயற்பாட்டாளர்கள்  அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் வேண்டுகோள்

தமிழ் வலதுசாரி தலைவர்கள் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கவில்லை என தமிழ் சொலிடாரிட்டி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில், அவர்கள் கடந்த காலத்தில் வலதுசாரி அரசாங்கங்களுடன், குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) ஒத்துழைத்துள்ளனர். தமிழர்களின் உரிமைகளை மேற்கத்திய/இந்திய அரசாங்கங்களால் வழங்க முடியும் என்ற தவறான மாயையையும் அவர்கள் உருவாக்கி, மனித உரிமைகளை வழங்க ஐ.நா.வை நம்புகிறார்கள். தற்போதைய இயக்கத்திற்கு பயந்து, தங்கள் சொந்த நிலையைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் தமிழர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை உணர்வுப்பூர்வமாக விரும்புகிறார்கள். இதை நாங்கள் நிராகரிக்கிறோம். மற்றும் தொடர்ச்சியாக மக்களை அணிதிரட்டுமாறு கூறிவருகின்றோம்.

இருப்பினும் இயக்கத்தில் தமிழ் மக்களின்  பங்கேற்பு குறைவாக இருப்பதற்கு இது முக்கிய காரணம் அல்ல. தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தமது தலைவர்களின் தவறான வழிமுறைகளை எதிர்த்து மீறியிருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் பங்களிப்பு குறைவாக இருப்பதுக்கு முக்கிய காரணம், இந்த போராட்டம்  தங்கள் கோரிக்கைகளை முன் எடுக்கவில்லை என்றும், அது இன்னும் தமிழ்/முஸ்லிம்களுக்கு எதிரான  சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஆதிக்கத்தில் உள்ளது என்றும் அவர்கள் கருதுவதுதான். ஒற்றுமைக்கான வேண்டுகோள் மற்றும் சில கோரிக்கைகள்  இந்த இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அது இன்னும் தமிழர்கள் / முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தவோ அல்லது இணைக்கவோ இல்லை.

இந்த இயக்கம் குறைந்த பட்சம் பின்வரும் பிரச்சினைகளையாவது உள்வாங்க வேண்டும்

  • ராஜபக்சேவின் குடும்பத்தினர் அனைத்து சமூகங்களுக்கும் எதிராக கொடூரமான குற்றங்களை இழைத்துள்ளனர். தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கும் அவர்களே காரணம். போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்தக் குடும்பமும், இராணுவ உயர்பீடத்தில் உள்ள அவர்களது கூட்டாளிகளும் அந்த குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும்.
  • அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
  • காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி – புதிய மற்றும் போதுமான விசாரணை தொடங்கப்பட வேண்டும்.
  • எந்தவொரு சிவிலியன் விடயங்களிலும் இராணுவப் பங்கேற்பு ஏற்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மற்றும் இராணுவம்  அனைத்து சிவிலியன் பகுதிகளிலிருந்தும் திரும்பப் பெறப்பட வேண்டும்.
  • அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களும் அதன் உரிமையாளருக்கு மீளக்கையளிக்கப்படவேண்டும்.- தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிலம் உரிமையாக்கப்பட வேண்டும்.
  • அனைத்து மத உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் – எந்த வடிவிலான  இஸ்லாமிய வெறுப்புகளும்   அனுமதிக்கப்படக் கூடாது.
  • PTA போன்ற கொடூரமான சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
  • புரட்சிகரமான அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்துதல் – இந்த அமைப்பு எந்த அரசியலமைப்புச் சட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளலாம்  என்பது பற்றிய புதிய விவாதத்தை ஆரம்பிக்கலாம்.

வெகுஜனங்கள் ஒரு அரசியலமைப்புச் சபையை நிறுவினால், அது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் வழங்க முடியும். அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் புரட்சிகரக்  தீர்வுக்கு செல்ல  மக்கள் தீர்மானித்தால், அது தனிநாடுகளாக மட்டுமின்றி, தேசிய உரிமைகளைப் பாதுகாக்கும் கூட்டு அராசா அமைப்பை (confederation) உருவாக்க முடியும். வேண்டும். இந்த புரட்சிகர கூட்டமைப்பு (confederation) தேசிய இனங்களின் தேசிய உரிமைகளை பாதுகாப்பதோடு  அனைவருக்கும் அனைத்து  வளங்களையும் திட்டமிட்ட முறையில் வழங்கி  அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்கும்.

புலம்பெயர் தமிழர் பங்கு

புலம்பெயர் இலங்கையர்களில் பெரும்பாலோர் போரில் இருந்து வெளியேறிய அகதிகளால் உருவாக்கப்பட்டவர்கள். இலங்கையில் அரசியலில் பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும். வலதுசாரி முதலாளித்துவவாதிகள் தங்கள் கூட்டாளிகளை பணத்துக்காக இலங்கைக்கு வரவழைத்து நீண்ட கால வசிப்பிட அனுமதிகளை கூட வழங்கினர். மாறாக தமிழ் சொலிடாரிட்டி  போன்ற புலம்பெயர் அரசியல் குழுக்கள் குரல் முடக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் சொலிடாரிட்டி எந்த சூழ்நிலையிலும் வலதுசாரி அரசாங்கங்களுடனோ அல்லது சிங்கள மக்களுக்கு எதிராக அடக்குமுறை அல்லது சுரண்டலை மேற்கொள்ளும் எந்தவொரு கட்சிகளுடனும் அல்லது அமைப்புகளுடனும் ஒத்துழைக்கவோ அல்லது வேலை செய்யவோ மாட்டாது. ஆனால் நாம் வெகுஜன இயக்கம் மற்றும் முற்போக்குப் பிரிவுடன் ஒத்துழைத்து தமிழர் பகுதிகளில் புரட்சிகர மாற்றங்களுக்கு சக்திகளை கட்டியெழுப்புவதில் பங்களிக்க விரும்புகிறோம். இப்போது வரை புலம் பெயர் தமிழ் சமூகத்தின்  பங்கு அடுத்தடுத்த அரசாங்கங்களால் பாரியளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அவர்கள்  புலம்பெயர் தமிழர்களை பயங்கரவாதிகள் என்று பொய் பிரச்சாரம் செய்தனர். இந்த அரசாங்கங்களின் தேசபக்தி பிரச்சாரம் என்பது  அதிகாரம் மற்றும் வளங்களின் மீது தங்கள் சொந்த பிடியைப் பாதுகாப்பதற்காக மட்டுமே. இது மாறி இலங்கையின் வெகுஜன அரசியலில் புலம்பெயர் அமைப்புக்கள் குரல் கொடுக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

-தமிழ் சொலிடாரிட்டி –