தமிழ் சொலிடாரிட்டியும் புலிகள் இயக்கக் கொடியும்.

புள்ளி 1: தேசம் – தேசியம் – தேசிய அரசு பற்றிச் சிறு குறிப்பு.

     நிலப்பிரபுத்துவ கால கட்ட மன்னராட்சி என்பது முதலாளித்துவக் கால கட்டத் தேசிய அரசில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தேசம் என்ற பெரும் சொல்லாடல் வரலாற்று ரீதியான ஒரு குறியீடாக இருக்கிறதே தவிர அது வரையறை உள்ள ஒன்றல்ல. தேசிய அரசு என்பது எல்லைகள் உட்பட பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டது – அதன் பண்பு மன்னர்காலத்து ‘நாடு’ எனபதில் இருந்து முற்றிலும் வேறுபாடுள்ள ஓன்று. இவற்றைப் போட்டுக் குழப்பிக் கொள்வது தவறு. தேசியம் – அல்லது தேசியக் கோரிக்கை இருப்பதற்கு பின்னால் வரையறுக்கப்பட்ட தேசிய அரசு முன் கூட்டியே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வரலாற்று ரீதியாக எழுந்த தேசியக் கோரிக்கை என்பது இன்று ஒரு தேசிய அரசை உருவாக்கும் நோக்கிலேயே வைக்கப் பட முடியும். தேசியக் கோரிக்கை என்பது பழைய மன்னராட்சி முறையைத் திருப்பிக் கட்டமைப்பதற்காக முன் வைக்கப் படுவதில்லை. இவை சாதாரண புள்ளிகளாக இருப்பினும், பல்வேறு செயற்பாட்டாளர்கள் மத்தியில் மிக குழப்பமான புரிதல்கள் இருப்பதால் இவற்றைச் சுட்டிக் காட்டுவது அவசியமாக இருக்கிறது.

தேசியக் கோரிக்கையை முன் வைக்கும் போராட்ட அமைப்புக்களுக்கு தாம் எத்தகைய பண்புள்ள தேசிய அரசை உருவாக்க போராடுகிறார்கள் என்ற தெளிவு வேண்டும். இது போராட்டத்தின் பண்பு –கோரிக்கைகள் –சுலோகங்கள் – மற்றும் திசைகளைத் தீர்மானிக்கும் ஒன்றாகவும் இருக்கும்.

புள்ளி 2 : புலிகள் இயக்கக் கொடி- மற்றும் போராட்டச் சக்திகளின் சின்னம் பற்றி.

     சோழ அரசின் பாயும் புலி படமுள்ள கொடியைப் பின் பற்றித் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கொடியை வடிவமைத்துக் கொண்டார்கள்.  புலிகள் இயக்கத்தை அடையாளப் படுத்த மட்டுமே இக்கொடி பயன்பட்டு வந்தது.

தமிழீழத்தின் ஒரு பகுதியைப் புலிகள் இயக்கம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொழுது ஒரு மாற்று அரசதிகாரத்தைக் கட்டியமைக்கும் முயற்சிகள் நிகழ்ந்தது. தேசியக் காவல்துறை போன்ற நடைமுறைகளை நிறுவிய பொழுது, அத்தகைய தேசிய அடையாள உபயோகத்திற்கு எனப் புதிய கொடி வடிவமைக்கப் பட்டது. விடுதலைப் புலிகள் என்ற பெயரை மட்டும் நீக்கி விட்டுத் தேசியக் கொடிக்கான சர்வதேச அளவு கணக்குகளுக்கு ஏற்ப தயாரிக்கப் பட்ட புதிய கொடி தேசியக் கொடியாக புலிகளால் அறிமுகப் படுத்தப்பட்டது. புலிகளின் அதிகாரத்தின் கீழ் இருந்த இடங்களில் பாவனைக்கு வந்த இக்கொடியில் இருந்த இரண்டு துவக்குகள் மற்றும் முப்பத்தி மூன்று தோட்டாக்களை நீக்குமாறு அன்று நடந்த அழுத்தத்துக்கு புலிகளின் தலைமை உடன்படவில்லை. தமிழீழத்தின் ஒரு பகுதி எமது கட்டுப்பாட்டில் இருந்த பொழுதும் எமது போராட்டம் தொடர்கிறது – அதனால் அந்தப் போராட்ட இலட்சினையை விட்டு விட முடியாது எனவும் – முழு விடுதலை அடைந்த பின் புதிய தேசியக் கொடி வடிவமைக்கப்படும் எனவும் விளக்கம் கொடுக்கப் பட்டது.

மாபெரும் படுகொலையுடன் யுத்தம் முடிவுக்கு வந்த பின் தடை செய்யப்பட்ட இயக்க இலட்சினைகளை யாரும் பாவிக்க முடியாத நிலை தோன்றியது. இதைத் தொடர்ந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நீங்கிய கொடியை வெளிநாடுகளில் சிலர் பாவித்து வருகின்றனர். இதை மறுத்து பலர் தேசியக் கொடியாக புலிகள் இயக்கம் அறிவித்த கொடியைத் தொடர்ந்து பாவித்தும் வருகின்றனர். இன்றும் புலிகளுக்கு ஆதரவானவர்கள் தவிர வேறு யாரும் இக்கொடியை தாமாக ஏற்றுக் கொண்டு பாவிப்பது இல்லை.

புள்ளி 3: தேசியக் கொடியும் ஒரு இயக்கத்தின் கொடியும்.

     ஒரு இயக்கம் தனது அதிகாரத்தில் இருந்த போது சிலதைத் ‘தேசியச் சின்னங்களாக’ அறிவித்தனால் மட்டும் அவை தேசியச் சின்னங்களாகி விடாது. தேசிய அரச அதிகாரங்களால் அறிமுகப்படுத்தும் சின்னங்களும் ஒட்டு மொத்த மக்களும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை என்றில்லை. மக்கள் தாமாக எதை ஏற்றுக் கொள்ளுகிறார்கள் – தூக்கிப் பிடிக்கிறார்கள் என்பது அச்சின்னத்துக்கும் – மக்களின் நலனுக்கும் இருக்கும் தொடர்பைப் பொறுத்தது.

இது தவிர போராட்டச் சக்திகள் தூக்கிப் பிடிக்கும் அடையாளங்கள் முற்றிலும் வேறானவை. ஆயுதப் போராட்ட அடையாளத்தை விட முடியாது எனத்தான் புலிகள் இயக்கம் தமது கொடியை முழுமையாக மாற்ற மறுத்தனர். போராட்டச் சக்திகள் அதிகாரத்தின் அடையாளங்களுக்கு எதிர் திசையில் நிற்கின்றனர். இதனால்தான் உலகில் இருக்கும் எந்த ஒரு போராட்டச் சக்தியும் அமெரிக்க – இங்கிலாந்து கொடிகளைத் தமது நட்புச் சின்னங்களாக பார்ப்பதில்லை. ஏகாதிபத்திய அதிகாரத்தின் சின்னங்களாக இருப்பவை எந்த ஒரு போராட்டச் சக்திகளினதும் நட்பு வட்டத்துக்குள் வர முடியாது.

இதே சமயம் ‘தேசிய’ அடையாளம் என்பது ஒருவகை இளகிய தன்மை கொண்டது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும்.  ஒரு தேசிய அரசின் கீழ் வாழும் மக்கள் அந்த அரசு கட்டமைக்கப்பட்ட வரலாற்றுப் பின்னணி மற்றும் ‘தேசிய’ அடையாளங்களின் செல்வாக்குக்கு உள்ளானவர்களே. இதனால் இந்த அடையாளங்களை மக்கள் பார்க்கும் விதம் காலத்துக்கு ஏற்றபடி –புற நிலைச் சூழலுக்கு ஏற்றபடி –சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி மாறக் கூடியவையாகவும் இருக்கின்றன. கிரிக்கட் நடக்கும் போது இந்தியக் கொடி காட்டி ஆதரவு செய்யும் ஒருவர் மிக வெறுப்புடன் அந்தக் கொடியை எரிக்கும் போராட்ட அமைப்பின் உறுப்பினராகவும் இருக்கும் முரண்நிலையை நாம் அவதானிக்க வேண்டும்.

கறுப்பு வெள்ளை அடிப்படையான முடிவுகளுக்கு நாம் தாவி விடக் கூடாது. எல்லா அதிகார சக்திகளும் பாராட்டும் ‘தேசிய சின்னங்கள்’ போராட்டச் சக்திகளுக்கு எதிரானவையே. இலங்கை தேசியக் கொடி மட்டுமல்ல இந்தியத் தேசியக் கொடியும் தெற்காசிய போராட்ட சக்திகளுக்கு எதிர்தான். அது போல்தான் இங்கிலாந்து தேசியக் கொடியும்.

போராட்டச் சக்திகள் தூக்கிப் பிடிக்கும் சின்னங்கள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அவை அதிகாரத்தை எதிர்ப்பவை. கற்பனையில் ‘தேசிய அதிகாரத்தை’ கட்டமைத்து ‘அரச பாவனை’ செய்பவர்கள் தம்மைப் போராட்டச் சக்திகள் என சொல்லிக் கொள்ள முடியாது. ஏகாதிபத்திய மயிலாட பார்த்து நாமும் அதுவாக ஆடுவது செய்யும் அதே வேளை எம்மைப் போராட்டச் சக்திகள் எனவும் நாம் சொல்லிக் கொள்வது என்ன நியாயம்?

மக்கள் நலன்கள் சார்ந்த ஒரு தேசிய அரசு உருவாகும் வரையும் நாம் எடுத்துக் கொள்ளும் எந்தச் சின்னங்களும் போராட்ட அரசியல் சார்ந்தவைதான். ‘அதிகாரத்தைக்’ கற்பனை செய்வதால் எமக்கு அதிகாரம் கிடைக்கப் போவதில்லை. மாறாக போராட்டத்தை முன்னெடுத்து அடக்கும் அதிகாரங்களை ஒட்டு மொத்தமாக உடைப்பது நோக்கி நாம் நகர வேண்டும். அதிலிருந்துதான் மக்கள் தாமாக ஏற்றுக் கொள்ளும் புதிய அடையாளங்கள் பிறக்கும்.

ஒரு இயக்கத்தின் அடையாளங்கள் மக்கள் மயப்படுவது அந்த இயக்கம் எவ்வாறு மக்கள் நலன்சார் போராட்டத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது? இலங்கையில் லங்கா சம சமாஜக் கட்சி மக்கள் சார்பாக ஓர் காலத்தில் இயங்கியதற்கும் தற்போது இருக்கும் நிலைக்கும் நிறைய வித்தியாசமுண்டு. தற்போது புலிகள் இயக்க கொடியை முதன்மைப் படுத்துபவர்களின் கொள்கை – அரசியல் என்ன? இது முக்கியமான அடிப்படையான கேள்வி.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் புலிக் கொடியைத்தான் பயன் படுத்துகிறார்கள். இது தவிர முஸ்லிம்களை எதிர்க்கும் ஒரு சிறு அமைப்பு – இனவாதக் கும்பலுடன் இணைந்து வேலை செய்து கொண்டு பயன்படுத்துவதும் புலிக் கொடிதான். புலிகள் இயக்கக் கொடியில் இருந்து பிறந்த இந்தச் சின்னங்களை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

எந்தக் கொள்கை அடிப்படையில் அடையாளங்கள் குவிகின்றன என்ற கேள்வி அனைத்து அரசியற் போராட்டச் சக்திகளும் அவசியம் கேட்க வேண்டிய கேள்வி. ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் வலதுசாரிகள் பின்னால் திரிபவர்கள்-அவர்கள் தீர்வு ஏதாவது தருவார்கள் என்ற நம்பிக்கையில் மக்களின் காசை வாரி இறைப்பவர்கள். ஐ.நா வுக்குள்ளால் தீர்வு வரலாம் என்ற பொய் நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்ப்பவர்கள். பிரித்தானிய ஏகாதிபத்தியக் கொடியை நட்போடு தூக்குபவர்கள். இலங்கை தவிர்ந்த அனைத்து அதிகார சக்திகள் மேலும் நட்போடு இருக்கும் கொள்கையை முன்னெடுப்பவர்கள். ஆகியோர் இதுவரை எத்தகைய அரசியல் திட்டமிடலைச் செய்கிறோம் என்பதை மக்கள் முன் வைக்காதவர்கள். தமிழ் வலது சாரியப் – போராட்டத்துக்கு எதிரான நடைமுறைகளைத் திட்ட வட்டமாக எதிர்க்க மறுப்பவர்கள். இவர்கள் தூக்கிப் பிடிப்பது எந்தச் சின்னமாயினும் –அதை மறுப்பதை நாம் செய்தாக வேண்டியதாகிறது.

உங்கள் போராட்ட அரசியல் அடிப்படை என்ன ? கொள்கை என்ன ? திட்டமிடல்கள் என்ன ? ‘எங்களுக்கு வேண்டும் தமிழ் ஈழம்’ என்ற ஒற்றைக் கோசம் வெறும் வேஷம். அதை சம்மந்தனும் அவர் போன்ற போலிகளும் கூடத்தான் செய்வர். அத்தகைய வெற்றுக் கோஷத்துக்காக மட்டும் உயிரைக் கொடுக்க இளையோர் முன் வரவில்லை. ஆரம்பகாலத்தில் போராட எழுந்த ஏக்கங்கள் – மற்றும் கொள்கை முன்னெடுப்புகளையும் தாண்டி நாம் வளர வேண்டிய நிலையில் – அரசியலை பின் நோக்கி இழுப்பதை எவ்வாறு நாம் ஏற்றுக் கொள்வது.

இந்த அடிப்படைகளில் இருந்து – வரலாற்று ரீதியான பார்வையில் இருந்து – எமது திட்டமிடல்கள் மற்றும் நடைமுறைகள் பிறக்கின்றன. புலிகள் இயக்கம் பல்வேறு காலங்களில் மாற்றத்துக்கு உள்ளாகிய இயக்கம். ஆரம்பிக்கும்போது இருந்த திட்டமிடல் மற்றும் அரசியலுக்கும் தொன்னூறுகளில் இருந்த இராணவ நடவடிக்கை முதன்மைப்பட்ட காலத்துக்கும் நிறைய வித்தியாசமுண்டு. புலிகளின் இராணுவப் பாரம்பரியத்தை பின்பற்ற விரும்புவர்கள் இன்னுமொரு இராணுவம் கட்டும் வேலையில் ஈடுபடலாம். நாம் அத்தகைய நடைமுறைக்கு எதிரானவர்கள். அரசியல் மற்றும் மக்கள் பலமின்றி இரானுவமயப்படலின் பலவீனத்தை அறிந்தமையால் அதை நாம் திட்ட வட்டமாக மறுக்கிறோம்.  இது அகிம்சா நிலைபாடல்ல. மாறாக ஆயுதமயப்படுதல் பற்றிய அரசியல் அறிதலில் இருந்து பிறக்கிறது. ஆயுத மயப்படுதலை முற்றாக மறுக்கும் நிலைபாடல்ல. மாறாக அதற்கான தருணம் எது என்ற அறிதலில் இருந்து முன் வைக்கப் படுகிறது.

புலிகளின் அரசியல் நிலைப்பாடு பேசுபவர்கள் போராட்டத்தின் ஆரம்ப காலத்தை நோக்கி கொஞ்சமாவது நகர வேண்டும். போராட்ட அரசியலை உள்வாங்க வேண்டும். போராட்ட அரசியலை உள்வாங்கிய அமைப்புக்களை நட்புச் சக்திகளாக நாம் அடையாளப் படுத்துகிறோம். தொலை தூரப் பார்வை உள்ள அரசியலை உள்வாங்கிய போராட்டச் சக்திகளோடு உடன் சேர்ந்து வேலை செய்யவும் தயாராக உள்ளோம்.

ஆனால் இன்று தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அமைப்புகளுக்கு அத்தகைய பார்வை இல்லை. போராட்டம் என்ற சொல்லே சிலருக்கு கசப்பாக இருக்கிறது. அரசியல் உரையாடல் என்றாலே நடுக்கமாக இருக்கிறது. பொதுத் தளத்தில் விவாதத்துக்கு வந்து தமது நிலைப்பாட்டை முன்வைக்கத் தயாரில்லை. மக்களிடம் உண்மை சொல்லத் தயாரில்லை. நட்புச் சக்திகள் யார் – எந்த அரசியல் முன்னெடுக்கப் பட வேண்டும் என்ற எந்தத் தெளிவும் இல்லை. ஒரு போராட்டத்தில் இணைந்து வேலை செய்வது எவ்வாறு என்ற எந்தத் தெளிவும் இல்லை. ஆனால் ‘சட்டாம்பிகள்’ வேலைகளுக்கு மட்டும் குறை இல்லை. நாம் தான் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகள் என எந்த அமைப்பும் சொல்லிக் கொள்ள முடியாது. மக்களைச் சரியான அரசியல் நோக்கி வென்றெடுக்க நாம் பாடுபட வேண்டும். பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். அதைவிட்டு அதிகாரம் காட்டுவதன் மூலம் அதை நிறுவி விட முடியாது.

ஒரு அமைப்பு தனது இலச்சினைகளை திணிக்க முயல்வது தவறு. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் தாம் பங்குபற்றும் போராட்டத்தில் தமது சின்னங்களை பிடிக்க வேண்டும்.  போராட்டத்துக்கு வரும் எல்லோரும் அவ்வாறுதான் செய்ய வேண்டும் என்ற அதிகாரத்தை செலுத்த முடியாது. விரும்புபவர்கள் – ஆதரவாளர்கள் தாமாக அதைப் பிடிக்கட்டும். வலிந்து திணிக்காதீர்கள். நீங்கள் முன் வைப்பதை மக்கள் தாமாக ஏற்றுக் கொள்வதற்காக பாடுபடுவதற்கு உங்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு – திணிப்பதற்கு அல்ல.

புள்ளி 3: போராட்ட அடையாளங்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவையா ?

கடந்த முப்பது வருட கால ஆயுதப் போரடாத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் உயிர் இழந்துள்ளனர். சமூக விடுதலை மற்றும் தேசிய விடுதலை என்ற நோக்கில் உயிர் இழந்தோரை நினவு கொள்வதும் ஒரு சமூக செயற்பாடுதான். இது தவிர போராட்டக் காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட விடயங்களைப் புறக்கணிப்பது எம்மை மேலும் பலவீனப் படுத்தும் என பலர் அந்தரப்படுவதில் ஒரு நியாயமுண்டு.

கடந்த முப்பது வருடகால வரலாற்றை தமிழ் பேசும் மக்களின் நினைவில் இருந்து முற்றாக அளித்து விடவேண்டும் என மும்முரமாக வேலை செய்யும் சக்திகள் பல உண்டு. இதை இலங்கை அரசு மட்டும் செய்யவில்லை. ஐக்கிய நாடுள் சபை – மேற்கத்தேய அரசுகள் ஆகியன தமிழ் செயற்பாட்டாளர்களை நோக்கி வலியுறுத்தும் ஒன்றில் இது முதன்மையாக இருக்கிறது. தமிழ் மக்கள் மத்தியில் புலி எதிர்ப்பை தமது வாழ்நாள் கடமையாக எண்ணி இயங்கி வரும் சக்திகளும் இந்த வரலாற்றுக் கால கட்டத்தை எப்படியாவது புதைத்து மறைத்து விட வேண்டும் எண்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. இது தவிர இடது சாரிய – அல்லது போராட்டக் கருத்தாடல் நிலைப்பாட்டுக்கு மக்கள் போய்விடக்கூடாது என துடிக்கும் வலது சாரியச் சக்திகளும் இந்த வரலாற்றை ஒதுக்குவதற்கு ஆவன செய்து வருகின்றன.

இது ஏன் என்பதை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். அரச அதிகாரத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி எதிர் நிலையில் நின்ற வரலாறின் ஞாபகம் எல்லா அதிகாரங்களையும் திடுக்கிட வைக்கும் ஞாபகமே. மீண்டும் இளையோர் இத்தகைய எதிர் நிலைக்கு வரமால் – அதிகாரத்தை எதிர் திசையில் நின்று எதிர்க்காமல் – ஒத்தோடி வாழப் பழக்க வேண்டும் என்பது – அதிகாரத்தின் தொடர் இருத்தல் நலன் சார்ந்ததாக இருக்கிறது. இதை விட்டு நாமும் அதிகாரம்தான் என அந்த எதிர் வரலாற்றை இணக்க வரலாறாக மாற்றும் தவறை நாம் செய்வது வரலாற்றுத் துரோகம்.

வலது சாரிய சக்திகளின் எதிர் நிலையால் வரலாறு முற்றாக மறந்து போகும் – அதனால் விடுதலைப் போராட்டம் மேலும் பலவீனப் படும் எனச் சிலர் பயப்படுவதில் அர்த்தமுண்டு. இலச்சினைகளை பாதுகாக்கும் நடவடிக்கையால் மட்டும் இதை எதிர் கொள்ள முடியாது. மாறாக அது அதிகார சக்திகளுக்கு ஒரு காரணத்தை வழங்கும் எதிர் விளைவையே ஏற்படுத்தும். போராட்ட அரசியல் மக்கள் மத்தியில் பலப்படாமல் போராட்ட வரலாறைக் காப்பாற்ற முடியாது. வலது சாரிய சக்திகள் சமூகத்தில் பலப்படுவதுதான் போராட்ட வரலாற்றை சாகடிக்கிறது. வரலாறு பற்றிய இந்த அடிப்படை அறிதலை நாம் உள்வாங்க வேண்டும்.

அதிகாரத்துடன் உடன்பட்டு நிற்பது – அடக்குமுறைக் கருவியாக அடையாளப்படுவது – ஆகியன ஒரு போராட்டச் சக்தியை பலப்படுத்தாது. மாறாக பலவீனப் படுத்த மட்டுமே செய்யும். வலது சாரியத்துடன் கை குலுக்கி கூடிக் கழிப்பது ஒரு பக்கம் – மறு பக்கம் போராட்டத்தை தக்க வைக்க வேண்டும் என்ற அவா! இது இரண்டும் ஒருமித்து வாழ்தல் சாத்தியமில்லை. இரண்டும் எதிர் எதிர் நலன் கொண்டவை. ஒன்றின் சாவில்தான் மற்றதன் இருப்பு சாத்தியம்.

உணர்வுபூர்வமாக அணுகுவதற்கு பதிலாக அரசியல் நிலைப்பாட்டை எடுங்கள் என நாம் வலியுறுத்துவது இதனால்தான். மக்கள் மத்தியில் போராட்டத்தை முடக்கும் வேலைகளைச் செய்து கொண்டு போராட்டத்தைக் காப்பதாகப் பாவனை செய்வது கபடத்தனம். ஐ,நா பற்றிய மாயையை மக்கள் மத்தியில் உடைப்பதற்கு வேலை மற்றும் பிரச்சாரம் செய்யாதது. மேற்கத்தேய அதிகாரத்துக்கு எதிர் நிலை எடுக்காதது. வலது சாரியத்துக்கு எதிர் நிலைக்கு வராதது. போராட்ட திட்டமிடல்களை செய்ய முன்வராதது. மக்க்களை அரசியல் மயப்படுத்தி அனைத்து அதிகாரத்துக்கும் எதிர் நிலையில் நிறுத்த முன்வராதது. இவை போன்ற நடவடிக்கைகள்தான் போராட்ட வரலாற்றை சிறுகச் சிறுகச் சாகடிக்கும்.

புள்ளி 4: வலமா இடமா ?

இடதுசாரிய அமைப்பு என்பதை தெட்டத் தெளிவாக மக்கள் மத்தியில் முன் வைத்து இயங்கி வருகிறது தமிழ் சொலிடாரிட்டி. இடது சாரியக் கொள்கைகள் நோக்கிச் சரிவது போராட்ட அமைப்பு எனச் சொல்லிக் கொள்ளும் எந்த ஒரு அமைப்பினதும் உயிர் நாடியாக இருக்க வேண்டும். ஆனால் பல அமைப்புக்கள் தங்களை இடதும் அல்ல வலதும் அல்ல எனச் சொல்லி வருவதை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அப்படி எதுவும் கிடையாது. நடுநிலை என்பது வெறும் பொய் மட்டுமே. தமது உண்மை அரசியல் நிலைப்பட்டை மறைத்து மக்களிடம் பொய் பேசுபவர்கள் மட்டுமே அவ்வாறு பேசுகிறார்கள். அவாறு சொல்பவர்களில் பெரும்பாலானோர் வலது சாரியக் கொள்கை உடையவர்களே.

தமிழ் சொலிடாரிட்டியை ‘இடதுசாரிகள்’ எனத் திட்டும் நீங்கள் என்ன கொள்கையை முன் வைக்கிறீர்கள்? உங்கள் உண்மை நிலைப்பட்டை ஏன் ஒழித்து மறைத்து நடந்து கொள்கிறீர்கள்?

புள்ளி 5 : தமிழ் சொலிடாரிட்டி நிலைப்பாடு

நாம் வலது சாரியக் கொள்கைகளுக்கு நேர் எதிர் திசையில் நிற்பவர்கள். போராட்ட அரசியல் மற்றும் திட்டமிடலை முன்னெடுத்து அதற்காக மக்களைத் திரட்டவும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அயராது உழைப்பவர்கள். இன்னொரு அமைப்பின் இலச்சினைகளை நாம் நட்புச் சக்தியாக பார்க்க வேண்டுமாயின் அந்த அமைப்பின் கொள்கையில் எமக்கு உடன்பாடு இருக்க வேண்டும். நாம் வலது சாரிகள் போற்றும் அதிகார அடையாளங்கள் அனைத்தையும் மறுக்கிறோம். புலித்தோல் போர்த்த நரிகளையும் மறுக்கிறோம்.

வலது சாரியத்தின் பக்கம் நின்று கொண்டு தம்மைப் போராட்டச் சக்திகளாக அடையாளப் படுத்திக் கொள்பவர்களின் முகத்திரையை நாம் அகற்றுவதற்கான எல்லா வேலைகளையும் செய்யத் தாயாராக உள்ளோம். அதனால் நீங்களே முடிவெடுங்கள். நீங்கள் எந்த அரசியல் பக்கம் நிற்கிறீர்கள் எனச் சொல்லுங்கள். நாம் மக்கள் முன் விவாதத்துக்கு என்றும் தயாராகவே இருக்கிறோம்.

நாம் போராட்டச் சக்திகள் இலட்சினைகளை தடை செய்வதை எதிர்க்கிறோம். புலிகள் இயக்க கொடி தடையை திட்ட வட்டமாக எதிர்க்கிறோம். புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் – ஆதரவாளர்கள் அந்தக் கொடியை பயன்படுத்த இருக்கும் உரிமைக்காண கோரிக்கை குரலில் எமது குரலும் இணையும். ஆனால் அதை அத்துமீறி அதிகாரத்துடன் திணிப்பதை கடுமையாக எதிர்க்கிறோம். தாமாக ஏற்றுக் கொள்வது வேறு திணிக்கப்படுவது வேறு.

புலிகள் – மற்றும் ஏனைய இயக்கங்கள் ஆரம்பித்த வரலாற்றுக் கால கட்ட அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சி நாம். ஆனால் அன்று இருந்த அரசியல் தாண்டிச் சென்று மேலும் தெளிவான அரசியல் நிலைப்பாட்டை முன் வைக்க வேண்டியது அவசியம். வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்டு நகர விரும்புகிறோம். நடந்த பிழைகள் எமதல்ல. விட்ட பிழைகளை மீண்டும் விட முடியாது. இவை பற்றி மக்கள் முன் உண்மை பேசி – அதன்மூலம் அரசியல் வளர்ச்சியை ஏற்படுத்த விரும்புகிறோம். நாம் போராட்ட வரலாற்றின் தொடர்ச்சியே தவிர பிழைகளின் மற்றும் தவறான அரசியலின் தொடர்ச்சி அல்ல.

புலிகளின் இலச்சினைகளை – அவர்கள் முன் வைத்ததை ஏற்றுகொள்ள – முன்னெடுக்க ஒரு அமைப்புக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. ஆனால் அதை வைத்து ஒட்டு மொத்த வரலாறுக்கும் உரிமை கூற முடியாது. அத்தகைய நடைமுறை அராஜகம். புலிகள் இயக்கம் இன்று இல்லை. இவர்களின் பெயரால் வியாபாரம் செய்வதை நாம் கைவிட வேண்டும். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட நீங்கள் செய்வது வெறும் வியாபாரமே. தமிழ் நாட்டில் இதைச் சகஜமாகச் செய்கிறார்கள். இது போராட்டத்துக்கு தியாகம் செய்தோரை அவமானப் படுத்தும் செயல். ‘ஒருநாள் தலைவர் வருவார்’ போன்ற வெற்றுச் சுலோகங்களும் பொய்களும் நிறுத்தப் பட வேண்டும். புதிய தலைமைத்துவத்தை கட்டி அமைக்க வேண்டியது ஒரு போராட்ட இயக்கத்தின் கடமை. எத்தகைய தமிழ் ஈழம் வேண்டும் அதற்கான திட்டமிடல்கள் என்ன என்ற எந்த அடிப்படையுமற்ற ‘எமக்கு வேண்டும் தமிழ் ஈழம்’ சுலோகன் வெறும் வெற்றுச் சுலோகனே. இது போன்ற வெற்று நடைமுறைகளை ஒரு அரசியல் அமைப்பு முன்னெடுக்க முடியாது.

இது தவிர நாம் முன்னெடுக்கும் வேலைகள் தனித்தன்மையானவை. இன்று இருக்கும் அமைப்புக்கள் எவையும் ‘தமிழ் ஈழத்துக்கான’ திட்ட மிடல்களை முன்னெடுப்பதில்லை. வடக்கு கிழக்குப் பிரிவினையை எதிர் கொள்ளும் சக்தி கூட யாரிடமும் இல்லை. இதனால் வட மாகாணத்துக்குள் சுருங்கி நிற்கின்றன தமிழ் அமைப்புக்கள். அவர்கள் இன்று பேசுவது ‘வடக்கு தமிழ் ஈழம்’ – அல்லது ‘யாழீழம்’ என்ற சுருங்கிய பார்வையாகவே இருக்கிறது. கிழக்கில் ஒடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் முஸ்லிம் மக்களுக்கான போராட்டத்தையும் முன்னெடுப்பதே எமது திட்டம். அதே போல் மலையக ஒடுக்கப்படும் தொழிலாளர்கள் மற்றும் தெற்கில் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுபான்மை சிங்கள மக்கள் ஆகியோரையும் எமது போராட்ட அரசியல் நோக்கி வென்றெடுக்க வேலை செய்து வருகிறோம். இதற்கான  சுலோகங்கள் மற்றும் அரசியலை நாம் முன் வைக்கிறோம். இந்த ஒடுக்கப்படும் சக்திகளை முரண் நிலைக்கு தள்ளும் வேலைகளை – அல்லது இலச்சினைகளை நாம் தூக்கி நிறுத்த மாட்டோம். ஒரு இலச்சினை இவர்களுக்குமானதாக – அவர்தம் போராட்டத்தை முன்னெடுப்பதாக மாறட்டும். அப்போது அது எமது நட்பு சக்தியாகும்.

நாம் எமது அமைப்பின் அரசியல் நிலைப்பாடைதான் முன்னெடுப்போம் எனச் சொல்வது என்ன குற்றம். தங்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு நாமும் வர வேண்டும் என ஒரு அமைப்பு சிந்திக்குமாயின், வாருங்கள் உரையாடுவோம். என்ன அரசியல் ஒற்றுமை சாத்தியம் எனப் பார்க்கலாம்.