பாராளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் மற்றும் போராட்டக்காரர்களை கைது செய்தமையை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கின்றது

பொலிஸாரினால் தாக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் படம் டிலாக்ஷன்
428 . Views .

யாழ்ப்பாணத்தில் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக போராடிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் மற்றும் போராட்டக்காரர்களை கைது செய்தமையை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கின்றது.

இலங்கை அரசு தனது 75 ஆவது சுதந்திர தினத்தை 4ம் திகதி கொண்டாடியது.இந்த கொண்டாட்ங்களின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வோடு இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டப திறப்பு விழா என்பவற்றையும் இணைத்து ஏற்பாடு செய்திருந்தார் கள். தொடர்ச்சியாக தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு பொருளாதார ரீதியாகவும் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நிலையில் இந்த கொண்டாட்டத்தினை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தின் போது போலீசாரினால் மிகவும் மிலேச்சத்தனமாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு திரு கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், தொழிற்சங்க வாதிகள், மாணவர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். இங்கு போராட்டக்காரர்கள் தாக்குதலுக்கு உள்ளாக பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு ஜனநாயக ரீதியாக எவ்வாறு நாட்டை முன்னேற்றுவது என்பது சம்பந்தமாக பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். இது நகை முரணானது. நான்கு நாட்களுக்கு முன்னர் பௌத்தப்பிக்குகளால் இனவாத ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு எந்தவித தடையும் இல்லாமல் இந்த அரசு அதை நடத்துவதற்கு அனுமதித்தது எவரையும் கைது செய்யவில்லை. ஆனால் இலங்கை முழுவதும் மக்கள் தாங்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராடும் பொழுது மிகவும் மோசமாக தாக்குதலை நடத்தி போராட்டக்காரர்களை கைது செய்கின்றது. மறுக்கபடும் தமது உரிமைக்காக போராடுவது ஒன்று கூடுவது தமது கருத்துக்களை பரப்புவது மக்களின் உரிமை என்பதை தமிழ் சொல்லிடாரிட்டி மீண்டும் வலியுறுத்துகின்றது.

இலங்கை முழுவதும் மக்களுக்கான போராட்டங்களுக்காக கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் சொலிடாரிட்டி முன்வைக்கின்றது. மக்களின் விடுதலைக்கான அனைத்து போராட்டங்களிலும் தமிழ் சொல்லிடாரிட்டி தனது தோழமையை வழங்கும் என்பதோடு புலம்பெயர் தேசங்களிலும் அந்தப் போராட்டங்களை வலுப்படுத்துவதற்குரிய வேலைகளை முன்னெடுக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ் சொலிடாரிடி