துருக்கிய/சிரிய நிலநடுக்கம்: மோசமாக கட்டப்பட்ட கட்டிடங்கள், ஊழல், லாபம் ஈட்டுதல், உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பு மற்றும் வளங்களின் பற்றாக்குறை

துருக்கிய மக்கள்  எதிர்கொண்டிருக்கும் பேரழிவில் இருந்து மீள்வதற்கு எம்மாலான உதவிகளை தமிழ் சொலிடாரிடி தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கிறது. இந்த கட்டுரை துருக்கிய Devrimci Sosyalist Sol – CWİ Türkiye  அமைப்பின் தோழர் Berkay Kartav எழுதியதின் தமிழாக்கம் 

பிப்ரவரி 6 அதிகாலையில் தென்கிழக்கு துருக்கியை 7.7 ரிக்டர் அளவு கொண்ட பயங்கரமான பூகம்பம் தாக்கியது, இதுவரை 11,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 648 க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் ஏற்பட்டன, இந்த அதிர்வுகளில் ஒன்று கிட்டத்தட்ட முதல் ஏற்பட்ட நிலநடுக்கம் அளவுக்கு  பெரியதாக இருந்தது. இந்நிலநடுக்கத்தின் மையம் சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள கஹ்ராமன்மாராஸ் (Kahramanmaras) நகரத்தில் ஏற்பட்டுள்ளது. .

துருக்கியின் மிகவும் பின்தங்கிய பிராந்தியங்களில் ஒன்றான கஹ்ராமன்மாராஸ்  மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு சிரியாவில் 23 மில்லியன் மக்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை 20,000 ஐத் தாண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டு இஸ்தான்புல் அருகே 17,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற இஸ்மித் நிலநடுக்கத்திற்குப் பிறகு துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் அழிவுகரமான நிலநடுக்கம் இதுவே ஆகும்.  

24 ஆண்டுகளில் அடிப்படையில் எதுவும் மாறவில்லை என்பதை அறிய இந்நிலநடுக்கத்தின் பேரழிவு ஓர் அளவுகோள். இம்முறையும் கட்டுமான குறியீடுகளுக்குக்குள் இணங்காத ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, மக்களை மீட்கவும், உயிர் பிழைத்த மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கவும் அரசு தவறிவிட்டது. மறுநாள் எடுத்த கணிப்பின்படி 

11,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக அரசாங்க உதவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகள் கூட இடிந்து விழுந்துள்ளன,  முதல் சில நாட்களில் விமான நிலையங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் கூட கடுமையாக சேதமடைந்ததால் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் திண்டாடினர். 

புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 1999 க்குப் பிறகு புதிய கட்டுமானத் தரநிலைகள் அரசினால் வகுக்கப்பட்டு  இருந்தபோதிலும், ஊழல் அரசாங்கங்கள் விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக இருந்ததால், இந்த தர கட்டுப்பாடு அமுலாக்கப்படாமல் இருந்தது. நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய கட்டிடங்களைக் கட்டுவதற்குப் பதிலாக, செலவுகளை மிச்சம் செய்ய, இலாபம் சேர்க்கும் சொத்து ஈட்டுவோர் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் குறுக்குவழிகள் மற்றும் மலிவான பொருட்களைப் பயன்படுத்தின.

மேலும், அரசு மற்றும் உள்ளூர் அதிகாரசபையின் உதவியின்றி, உறையும் குளிரில் வெளியில் காத்திருக்கும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் முதல் நாளிலேயே வைரலாகி வருகின்றன.

ஆனால் அவர்கள் மட்டும் அல்ல. துருக்கியில் 10 நகரங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் 13.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிலநடுக்கங்களால் அழிந்த இந்த நகரங்கள் மற்றும் கிராமங்களில், 150,000-க்கும் அதிகமானோர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதிய மீட்புக் குழுக்களை அரசு அனுப்பாதது குற்றமாகும். இடிபாடுகளுக்குள் சிக்கி உதவிக்காக காத்திருக்கும் நிலையில் பலர் உயிரிழந்து வருகின்றனர். உள்ளூர் மக்களும் தன்னார்வலர்களும் தங்கள் குடும்பங்களுக்கு உதவ முயற்சி செய்கிறார்கள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் வழங்கும் மீட்பு கருவிகள் அல்லது உபகரணங்கள் இல்லாததால் தங்கள் வெறும் கைகளைப் பயன்படுத்துகின்றனர்.

சிரியாவின் எல்லையில் இருக்கும் பன்முக கலாச்சார நகரமான Hatay, மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாகும், ஆயிரக்கணக்கானோர் இன்னும் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குக்குள் உள்ளனர், இன்னும் மீட்புக் குழுக்கள் வரும் வரை காத்திருக்கிறார்கள்.

டிவியில், ஹடேயில் உள்ள பிரபல கால்பந்து பயிற்சியாளரான கோகன் ஜான், நகரத்தில் பயன்படுத்தப்படாத excavators பயன்படுத்துமாறு அதிகாரிகளிடம் கெஞ்சினார். பயன்படுத்தக்கூடிய அனைத்து ஃபோர்க்லிஃப்ட் (forklifts) மற்றும் பிற வாகனங்கள் மற்றும் உபகரணங்களும் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து எடுக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படவேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் எரிபொருள், உணவு, தண்ணீர், கழிப்பறை வசதிகள், மருந்துகள், கூடாரங்கள், மின்சாரம் மற்றும் பல தேவைகளுக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது.

பெரும்பாலான மக்கள் இன்னும் தங்கள் கார்களில் தூங்குகிறார்கள் அல்லது உறைபனியில் வெளியில் தங்குகிறார்கள். வீடற்ற பலரைக் குடியமர்த்துவதற்கு, காலியான சொத்துக்கள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள அறைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மூன்றாவது நாள் தனது தொலைக்காட்சி உரையில், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் முதல் இரண்டு நாட்களில் அரசாங்கத்தால் திறம்பட  செய்யப்பட முடியவில்லை என்று ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த இரண்டு நாட்களில் தான் இடிபாடுகளில் இருந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான சரியான திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் செயல்படுத்தியிருக்க வேண்டும். 

Zonguldak (வடக்கு துருக்கியில் ஒரு நிலக்கரி சுரங்க நகரம்) இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த சுரங்கத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்ல 60 மணிநேரம் ஆனது.

பூகம்பத்திற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, சர்வதேச உதவிக் குழுக்கள் துருக்கியை அடைந்தனர். இன்னும், பல குடும்பங்கள் மீட்புக் குழுவின் வருகைக்காக காத்திருக்கின்றன.

இந்த பேரழிவிற்கு காரணமான கட்டுமான  மேம்பாட்டாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை அடையாளம் காண, தொழிற்சங்கங்கள் மற்றும் உள்ளூர் சமூக ஆர்வலர்கள் சுயாதீன விசாரணை ஒன்றை நடத்த வேண்டும்.

துருக்கியும் சிரியாவும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் நாடுகள். ஆனால், நிலநடுக்கங்களால் உயிரிழக்க வேண்டிய அவசியமில்லை: பலவீனமாக கட்டப்பட்ட கட்டிடங்கள், லாபம் ஈட்டும் நிறுவனங்கள், திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் வளங்களின் பற்றாக்குறை ஆகியவை மக்களை கொன்று அழித்திருக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவம் கொன்றிருக்கின்றது.

மக்களின் பாதுகாப்பைக் காட்டிலும் இலாபத்தை முதன்மைப்படுத்தும் கேவலமான முதலாளித்துவ அமைப்பின் தோல்விகளின் மற்றொரு குற்றச்சாட்டாக இப்பேரழிவு உள்ளது. 

‘அரசு எங்கே இருக்கிறது?’

‘எங்கே அரசு’ என்பது துருக்கி முழுவதும் உள்ள மக்களால் பலமுறை திரும்பத் திரும்ப கேட்கப்படுகின்றது. கட்டிட தரம்  அமலாக்கமின்மை மற்றும் அரசின் மோசமான செயற்பாடு, மோசமான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இன்மையும் சேர்ந்து, எர்டோகனுக்கு எதிராக வளர்ந்து வரும் வெறுப்பை அதிகரிக்கக்கூடும். ஜனவரி 2023 இல் 121 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள பணவீக்கத்தின் உயர்வு காரணமாக எர்டோகனின் புகழ் ஏற்கனவே வரலாற்று ரீதியாக குறைவாக இருந்தது.

தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புகள், சமூகக் குழுக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், உயிர் பிழைத்த மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கவும் முயற்சித்து வருகின்றனர். இந்த முன்முயற்சிகள் மிகவும் நம்பிக்கைக்குரியவை. மீட்புப் பணிகளில் அடிப்படை மற்றும் உடனடித் தேவைகளை வழங்குவதற்காக தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் ஒருங்கிணைப்பு ஓர் உள்ளூர் ஜனநாயக தொழிலாளர்கள் மற்றும் மக்கள் அணிகளை உருவாக்குவதற்கான முதல் படியாக அமையக்கூடும். 

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அடிப்படைத் தேவைகளை அனுப்ப துருக்கி முழுவதிலும் மற்றும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் நம்பமுடியாத அளவிற்கு சாதாரண மக்கள் அணிதிரள்கின்றனர். அரசாங்கத்துடன் தொடர்பில்லாத அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு சாதாரண மக்கள் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். எர்டோகனின் கட்சி இன்னும் சிறிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தாலும், பூகம்பத்தைத் தொடர்ந்து அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறைந்தந்தை இது பிரதிபலிக்கின்றது.

மிகப்பெரிய வளங்கள் மற்றும் திறன்களைக் கொண்ட உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்த போதிலும், துருக்கி இந்த பேரழிவுக்கு தன்னை தயார் செய்துகொள்ள தவறிவிட்டது. மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக முதலீடு செய்து, அனைத்து கட்டிடங்களும் நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடியவையாக இருப்பதை உறுதிசெய்வதற்குப் பதிலாக, லாபம் ஈட்டும் பணக்காரர்கள் பணத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். அரசாங்கமும் பெருவணிகங்களும் தங்கள் குறுகிய கால நலன்களில் ஆர்வம் காட்டுவதால், இத்தகைய நிகழ்வைச் சமாளிப்பதற்கான எந்த திட்டமும் தயாரிப்பும் இல்லை.

கட்டிடக் தர குறியீட்டை  மீறும் கட்டுமான நிறுவனங்களை அரசாங்கம் கண்டும் காணாமல் விட்டது மட்டுமல்லாமல், எர்டோகனின் அரசாங்கம் 2018 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அவை பாதுகாப்பானதாக இருக்கின்றதா  என்பதை உறுதிப்படுத்தாமல் பொது மன்னிப்பு வழங்கி  பத்திர பதிவு செய்ய அனுமத்தித்தது  . தங்கள் சட்டவிரோத கட்டிடங்களை பதிவு செய்த விண்ணப்பதாரர்களிடமிருந்து அரசாங்கம் $3 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது.

அவசரநிலை 

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நகரங்களில் அதிபர் எர்டோகன் அவசர நிலையை அறிவித்தார். அவசரகால நிலை 10 நகரங்களை உள்ளடக்கும் மற்றும் 3 மாதங்களுக்கு நீடிக்கும், மே 14 அன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு சற்று முன்பு முடிவடையும்.

அரசாங்கம் எந்தவொரு எதிர்ப்பையும் மௌனமாக்க விரும்புகிறது மற்றும் அரசாங்கத்தின் இயலாமையை வெளிப்படுத்தும் எந்தவொரு தகவலையும் பரப்புவதை விரும்பவில்லை. இது அப்பகுதியில் மக்களை  நிறுத்துவதற்கும் தேடுவதற்கும் காவல்துறைக்கு விரிவான அதிகாரங்களை வழங்குகிறது, மேலும் இது எந்தவொரு எதிர்ப்பும் மற்றும் அங்கீகரிக்கப்படாத செய்தித்தாள்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை தயாரிப்பதையும் விநியோகிப்பதையும் தடை செய்கிறது.

எர்டோகனும் ஆளும் கட்சியும் பூகம்பத்தை தங்கள் அதிகாரங்களை அதிகரிக்கவும் ஜனநாயக உரிமைகளை அடக்கவும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவார்கள். அரசாங்கத்தின் திகிலூட்டும் பதிலைக் கருத்தில் கொண்டு, மே தேர்தல்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது ஒத்திவைக்கப்படலாம். .

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய இந்த பூகம்பத்தில் சிதைந்து வரும் முதலாளித்துவ அமைப்பின் தோல்வி வரைபடமாக விளக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள், பாதுகாப்பு மற்றும் அடிப்படை ஆதாரங்களை வழங்க இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகள் தவறிவிட்டனர்.

போரால் பாதிக்கப்பட்ட சிரியாவில், உள்நாட்டுப் போர் காரணமாக உள்கட்டமைப்பு ஏற்கனவே மிகவும் பலவீனமாக இருந்தது. வடக்கு சிரியாவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் இரண்டும் நெருக்கடிக்கு தகுந்த முறையில் பதிலளிக்க  தவறிவிட்டன. இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், உயிர் பிழைத்தவர்கள் குளிரில் வெளியில் தூங்குகிறார்கள். சுத்தமான குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கத்திய அரசாங்கங்களும் வெகுஜன ஊடகங்களும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மக்களின் அவலநிலையை பெரும்பாலும் புறக்கணித்துள்ளன அல்லது இரண்டாம் நிலையாகக் கருதுகின்றன. ஆயினும்கூட, நீண்டகால உள்நாட்டுப் போரில் மேற்கத்திய சக்திகளின் இராணுவத் தலையீடுகள் சிரியாவை மண்டியிட உதவியது. பைடன் நிர்வாகம் ஜனாதிபதி அசாத்தின் ஆட்சிக்கு எதிராக அதன் தடைகளை தொடர்கின்றது, இது பூகம்ப பேரழிவு பகுதிகளுக்கு நிவாரணம்  சென்றடைவதற்கு தடையாக உள்ளது.

துருக்கியில், கட்டிடக் தர குறியீடுகளை புறக்கணித்த எர்டோகனின் ஆட்சியின் திறமையின்மையால் இந்தப் பேரழிவின் அளவு மோசமாகியது மற்றும் மக்களை மீட்கும் திட்டம் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை . அதுமட்டுமின்றி, உதவி செய்ய விரும்பும் சாதாரண மக்களுக்கும், அமைப்புகளுக்கும் தமது அதிகாரத்தால்  முட்டுக்கட்டைகளை வைகின்றனர்.

பூகம்பத்தைத் தாங்கக்கூடிய, மலிவு விலையில் வீடு கட்டும் திட்டம், சுகாதாரப் பணியாளர்களுக்கான பணவீக்கத்துக்கு ஏதுவான ஊதிய உயர்வுடன் கூடிய முழு நிதியுதவி அடங்கிய தேசிய சுகாதார சேவை ஆகிய சோசலிச கொள்கைகள் மூலம்  இந்த இழப்பை நிவர்த்தி செய்ய தொடங்க வேண்டும். இந்த உடனடி நடவடிக்கைகளுடன், பெருவணிகங்களின் இலாபவெறியைத் தடுக்க, ஜனநாயக தொழிலாள வர்க்கக் கட்டுப்பாட்டின் கீழ் வீடுகள், உணவு மற்றும் நீர் விநியோகத் தொழில்களை தேசியமயமாக்குவது அவசியம். 

சோசலிச திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தில், தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உற்பத்தி மற்றும் விநியோகத்தை கொண்டு வருவதன் ஊடாக மட்டுமே, இந்த அவலங்களைத் தவிர்க்க முடியும்.