Trinco 5: ஐந்து தமிழ் மாணவர்கள், இருபது ஆண்டுகள் – இன்னும் மறுக்கப்படும் நீதி
2006 ஜனவரி 2 அன்று திருகோணமலையில் நிகழ்ந்த “Trinco 5” படுகொலை, இலங்கை அரசின் பாதுகாப்புப் படைகள் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தின் முக்கியமான சான்றாக இன்று வரை திகழ்கிறது. அந்த நாளில், Special Task Force (STF) படையினரால் ஐந்து தமிழ் மாணவர்கள் கைது செய்து, திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இருபது ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொலைக்கான நீதி இன்னும் மறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
அன்று மாலை, திருகோணமலையின் கடற்கரை காந்தி சிலை (Dutch Bay) பகுதியில், நண்பர்களுடன் நேரம் கழித்துக் கொண்டிருந்த இளம் வயது தமிழ் மாணவர்கள் STF படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் எந்தவொரு ஆயுதமும் ஏந்தவில்லை. எந்த மோதலும் அங்கு இடம்பெறவில்லை. இருப்பினும், மாணவர்கள் முழங்காலில் அமர வைத்து, நெருக்கத்தில் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது ஒரு திடீர் சம்பவமல்ல; திட்டமிட்ட அரசியல் படுகொலை.
படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள்:மனோகரன் ரஜீகர் ,யோகராஜா ஹேமச்சந்திரா ,லோகிதராஜா ரோஹன், தங்கத்துரை சிவானந்தா ,சண்முகராஜா சஜேந்திரன் அவர்கள் அனைவரும் வாழ்வைத் தொடங்கிக் கொண்டிருந்த ஒரு தலைமுறையின் பிரதிநிதிகள். அவர்களை இலங்கை அரசு “தீவிரவாதிகள்” என முத்திரை குத்த முயன்றது. ஆனால் உண்மைகள் அந்தப் பொய்யை உடைத்தன.
சம்பவத்துக்குப் பிறகு, இலங்கை அரசு இதை “பாதுகாப்புப் படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலில் கொல்லப்படார்கள்” என அறிவித்தது. ஆனால் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூல்கள், மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் விசாரணைகள், இந்த விளக்கம் முழுமையாக பொய் என்பதை உறுதிப்படுத்தின. மாணவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது தெளிவான உண்மை. இந்த கொலைகளை கண்டித்த புத்த மத குருவான ஹந்துங்கமுவே நந்தரதன, இந்த சம்பவத்தை பத்திரிகையில் எழுதிய ஊடகவியலாளர் சுகிரதராஜன் ஆகியோர் ஆயுததாரிகளால் சுட்டு கொல்லப்பட்டனர்.
Human Rights Watch, Amnesty International, உள்ளிட்ட அமைப்புகள், இந்த வழக்கில் இலங்கை அரசின் பாதுகாப்புப் படைகளே பொறுப்பாளிகள் எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. குறிப்பாக “இந்த வழக்கில் அரசு நடத்திய விசாரணைகள் நம்பகமற்றவை; சாட்சிகள் அச்சுறுத்தப்படுகின்றனர்” என வெளிப்படையாக அறிவித்தது. இது, இலங்கை அரசின் தண்டனை இன்றி தப்பிக்கும் (Impunity) கொள்கையை உலகிற்கு அம்பலப்படுத்தியது.
இருப்பினும், 2006 முதல் இன்று வரை ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டன. சாட்சிகள் பாதுகாப்பின்றி விடப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட STF அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றனர். இது நிர்வாகத் தவறு அல்ல; திட்டமிட்ட அரசியல் முடக்கம். Trinco 5 என்பது தனி சம்பவமல்ல; அது முள்ளிவாய்க்கால் வரை நீண்ட அரச இனப்படுகொலைப் பாதையின் ஒரு கட்டம்.
2026 ஆம் ஆண்டில், இந்தப் படுகொலைக்கு இருபது ஆண்டுகள் நிறைவடைகின்றன. இரு தலைமுறை கடந்துவிட்டது. ஆனால் மாணவர்களின் பெற்றோர்கள் இன்னும் நீதிக்காக காத்திருக்கிறார்கள். குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாக வாழ்கிறார்கள். அரசு இன்னும் பொய்யை பாதுகாக்கிறது. நீதியை மறுப்பது தொடரும் குற்றம் என்பதற்கான உயிருள்ள சான்றே Trinco 5.
அப்படியென்றால், இருபது ஆண்டுகள் கழித்தும் நாம் ஏன் Trinco 5 பற்றி பேச வேண்டும்?
ஏனெனில் மறக்கடித்தல் என்பது அதிகாரத்தின் ஆயுதம்.
மௌனம் என்பது குற்றத்திற்கான உடந்தை.
Trinco 5 குறித்து பேசுவது, ஐந்து மாணவர்களை நினைவுகூர்வதற்காக மட்டும் அல்ல; தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அரச இனப்படுகொலையை அம்பலப்படுத்துவதற்காக. உலகெங்கும் வாழும் தமிழர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் இன்றும் நீதிக்கான போராட்டத்தை தொடர்கிறார்கள்.
இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகள் தெளிவானவை:
Trinco 5 படுகொலைக்கு வெளிப்படையான சுயாதீன விசாரணை,
STF மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கை,
இலங்கை அரசின் Impunity கொள்கைக்கு முடிவு,
மற்றும் இனப்படுகொலை குற்றங்களுக்கு சர்வதேச பொறுப்பேற்பு.
Trinco 5 கடந்த காலம் அல்ல.
அது இன்னும் திறந்த காயம்.
இன்னும் முடிவடையாத நீதிப் போராட்டம்.
நீதியில்லா அமைதி – அமைதி அல்ல.
இருபது ஆண்டுகள் கடந்தும், நாம் இன்னும் நீதிக்காகப் போராடுகிறோம்.
இந்தப் போராட்டம் நிற்காது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவலுக்கு
https://www.hrw.org/news/2019/07/08/sri-lanka-no-justice-trinco-5
https://www.amnesty.org/en/latest/campaigns/2013/08/they-killed-my-son/

