இலங்கை சுதந்திர தினம் – இது யாரின் சுதந்திரம்?

இலங்கை அரசு தனது 78ஆவது சுதந்திர தினத்தை இம்முறையும் வளமை போல் கொண்டாடுகின்றது. இம்முறையும் புதிய என்.பி.பி அரசாங்கம் முன்னைய அரசுக்களை  போல ஒரு பெரிய சுதந்திர தின திரையை இழுக்கின்றது. அந்தத் திரையின் பின்னால், இந்த சோக் கோல்ட் “சுதந்திரம்” யாருக்கானது என்ற அடிப்படை கேள்வி மறைக்கப்படுகிறது.

இந்த சுதந்திர தினம் என்பது இலங்கையில் தமிழ்மொழி பேசும் மக்களுக்கும், நாட்டின் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆன சுதந்திரமல்ல. இந்த தீவில் எப்போதும் சுதந்திர உணர்வை அனுபவிக்காத மக்களே நாம்.

இலங்கையின் அரசியல் அதிகாரம் தொடர்ச்சியாக சிங்கள–பௌத்த மேலாதிக்க வாதத்தின் (Sinhala Buddhist supremacist) கீழ் இயங்கிவருகிறது. தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல், அரசியல் கைதிகள், காணாமல் போனோர், மொழி–கலாச்சார ஒடுக்குமுறை—இவை அனைத்தும் “சுதந்திரம்” என்ற வார்த்தையைப் பொய்யாக்குகின்றன. ஜனநாயக உரிமைகள் நாடு முழுவதும் ஒடுக்கப்பட்டு வரும் நிலையே இருக்கிறது. குறிப்பாக தமிழ்மொழி பேசும் பகுதிகள் தொடர்ந்த தாக்குதல்களை எதிர்கொள்கின்றன.

இன்றைய ‘புதிய’ ஆட்சியிலும் மாற்றமில்லை. புதிய NPP அரசு, பழைய சிங்கள–பௌத்த மேலாதிக்க வாத அரசியல் வழியிலேயே பயணிக்கிறது. தமிழ்மொழி பேசும் பகுதிகளில் பௌத்தமயமாக்கல் தீவிரமடைந்துள்ளது. அரசு ஆதரவுடன் நடைபெறும் சிங்கள குடியேற்றத் திட்டங்கள் இப்பொழுது புதிதாக  அறிவிக்கப்பட்ட “கெவல் ஓயா (Kewal Oya)” போன்ற திட்டங்கள்—வடகிழக்கு தாயகத்தை வெட்டிச்செல்லும் வகையில் அமுல்படுத்தப்படுகின்றன. இது திட்டமிட்ட நில அபகரிப்பும், மக்கள்தொகை மாற்றமும் ஆகும். அரச ஆதரவுடன் நடைபெறும் திட்டமிட்ட உள்நோக்கம்  உள்ள குடியேற்றத்தை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்.

இலங்கை அரசின் ஒடுக்கு முறைகள் என்பது தமிழ் பேசும் மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. இலங்கையின் ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரான கடுமையான கொடுங்கோல் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். இதற்கு முந்தைய காலத்தில் ஜனநாயகத்திற்கான போராட்டம் என்றும் – ஜனநாயக உரிமைகளை கட்டி எழுப்புகின்றோம் எனவும் – வாய் வீச்சுக்களை பேசி வந்த என்.பி.பி அரசு ஜனநாயகத்தின் குரல்வளையை முறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்களின் மீதான பொருளாதாரச் சுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இந்த சுதந்திர தினம் இலங்கையின் மேல்தட்டு  மக்களுக்கும் தற்பொழுது மேல்தட்டு  மக்களாக தம்மை பாவித்துக் கொண்டிருக்கும் என்பிபி ஆட்சியாளர்களுக்குமானதாகவே இருக்கும். மீண்டும் ஒருமுறை அழுத்தமாகச் சொல்கின்றோம் இந்த சுதந்திர தினம் என்பது நமக்கானது அல்ல.

Tamil Solidarity இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறது. இந்த “சுதந்திர” நாளில், எங்களின் நிலைப்பாடு தெளிவானது:

இது எங்களின் சுதந்திரமல்ல.

ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமே உண்மையான சுதந்திரத்தின் பாதை.

இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் -தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள். தொழிலாளர்கள், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட சிங்கள மக்களையும் ஒன்றிணைய அழைக்கிறோம். சிங்கள–பௌத்த மேலாதிக்கவாத அரசியலுக்கு எதிராக, ஒரு பரந்த எதிர்ப்பு முன்னணியை கட்டியெழுப்புவோம். மக்கள் அடிப்படையிலான ஒரு வலுவான மாஸ் ஃப்ரண்டை உருவாக்கி, இந்த ஒடுக்குமுறை அரசியலுக்கு எதிராக ஒன்றாகப் போராடுவோம்.

உண்மையான சுதந்திரம்—ஒடுக்குமுறை முடிவடையும் நாளில்தான் கிட்டும்.

Tamil Solidarity யின்ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் தொடரும்.