“பேச்சுச் சுதந்திரம்” பற்றி பேசுவதற்கு முன் இலங்கையில் அதனை நடைமுறைப்படுத்துங்கள்
ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன்களில் நடைபெறவிருந்த தனது உரைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்ச “பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டது” என குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டு தன்னிலையே ஒரு அரசியல் பரிகாசமாகும். ஏனெனில் பேச்சு சுதந்திரம், வெளிப்படையான செயற்பாடு, ஜனநாயக உரிமைகள் ஆகியவை இலங்கையில் முறையாக ஒடுக்கப்பட்ட காலகட்டத்தின் அரசியல் வாரிசாக தன்னை நிறுவிக்கொண்ட ஒருவரே இன்று சுதந்திரம் குறித்து உரையாற்ற முயல்கிறார். ராஜபக்ச ஆட்சி என்பது ஒரு சாதாரண அரசல்ல, அது நவ தாராளமய பொருளாதார நாசமும் இராணுவமயப்பட்ட அரசியலும் இணைந்த ஒடுக்குமுறை ஆட்சி அமைப்பாக இருந்தது. அந்த ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் பச்சை படுகொலை செய்யப்பட்டார்கள், தொழிலாளர் போராட்டங்கள் அடக்கப்பட்டன, மாணவர் இயக்கங்கள் தாக்கப்பட்டன, பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டனர்,கொல்லப்பட்டனர், அரசை விமர்சித்தவர்கள் காணாமல் போனார்கள், மற்றும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் நசுக்கப்பட்டன. இத்தகைய வரலாற்றை மறைத்து வைத்து “திறந்த விவாதம்” பற்றி பேசுவது வேடிக்கையானது.
பேச்சு சுதந்திரம் என்பது வெறும் கருத்து வெளியிடும் உரிமை அல்ல, அது அதிகார உறவுகளுடன் தொடர்புடைய ஒரு போராட்டஅரசியல் கேள்வி. அரசின் வன்முறை இயந்திரங்கள் எதிர்ப்புக் குரல்களை மௌனப்படுத்தும் போது, ஆட்சி வர்க்கத்தின் பிரதிநிதிகள் உலக மேடைகளில் சுதந்திரத்தைப் பற்றி பேசுவது ஒரு இரட்டை நிலைப்பாடு மட்டுமல்ல அது ஆட்சியின் குற்றங்களை சுத்திகரிக்கும் அரசியல் முயற்சியாகும். இலங்கையில் PTA போன்ற அடக்குமுறை சட்டங்கள் இன்னும் நீடிக்கின்றன. போரில் காணாமல் போனோரின் குடும்பங்கள் நீதிக்காக தெருக்களில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நினைவேந்தல் நிகழ்வுகள் கூட கண்காணிக்கப்படுகின்றன. அதை முன்னெடுப்பவர்கள் அரச அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றார்கள். இந்நிலையிலே, சுதந்திர வெளிப்பாட்டை நடைமுறையில் மறுக்கும் அரசியல் மரபின் வழி நின்று கொண்டு, புலம்பெயர் சமூகங்களுக்கு ஜனநாயகப் பாடம் சொல்ல வருவது வரலாற்றை தலைகீழாக மாற்றும் முயற்சியாகும்.
ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன்களின் முடிவு பேச்சு சுதந்திரத்தை அடக்குவது அல்ல. மாறாக, ஒரு கொடுங்கோல் அரசின் வாரிசுக்கு எதிரான இளையோர் திரட்சியின் – எதிர்வினையின் விளைவாக நிகழ்ந்த ஓன்று. அதே நேரத்தில் இந்த மாணவ சங்கங்கள் ஒருவருக்கு எதன் அடிப்படையில் மேடை வழங்குகின்றோம் என்பதை எதிர்காலத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும். எந்த மேடையும் அரசியல் ரீதியாக நடுநிலையானதல்ல. குறிப்பாக இன அழிப்பு குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள், மற்றும் பொருளாதார அழிவுடன் தொடர்புடைய ஆட்சியின் பிரதிநிதிக்கு வழங்கப்படும் மேடை, “விவாதம்” என்ற பெயரில் அரசியல் மறுசீரமைப்பாக மாறும் அபாயம் உண்டு. இதுவே தமிழ் சொலிடாரிட்டி, மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எதிர்த்த காரணமாகும். மக்கள் எதிர்ப்பின் மூலம் எதேச்சை அதிகாரத்தை சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம். அதனை “மௌனப்படுத்தல்” என்று குற்றம் சாட்டுவது அதிகார அரசியலின் பழைய உத்தி.
பேச்சுரிமை உண்மையில் மதிக்கப்பட வேண்டுமெனில், அது முதலில் இலங்கையில் நடைமுறைக்கு வர வேண்டும். தொழிலாளர்கள் பயமின்றி போராடும் உரிமை, மாணவர்கள் தடை இல்லாமல் எதிர்ப்புச் சொல்வதற்கான உரிமை, தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் மற்றும் அரசியல் சுயநிர்ணய உரிமை, பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பான செயற்பாட்டுக்கான சூழல் இவை அனைத்தும் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு முன், புலம்பேர் சமூகங்களிடம் சுதந்திர உரையாடல் பற்றி போதனை செய்வது அரசியல் கபடநாடகம் மட்டுமே. சுதந்திரம் என்பது மேடைகளில் பேசப்படும் சொல் அல்ல அது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் உணரப்படும் ஒரு நடைமுறை உண்மை. அந்த உண்மை இலங்கையில் இன்னும் மறுக்கப்பட்டுள்ள வரை, உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதிர்ப்புக் குரலை உயர்த்துவார்கள். பேச்சு சுதந்திரம் அதிகாரத்தின் பாதுகாப்பு கவசமாக அல்ல, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட ஆயுதமாக இருக்க வேண்டும் அதற்காக தமிழ் சொலிடாரிட்டி தொடர்ச்சியாக போராடும்.